இஸ்லாமாபாத், நவ. 4–
தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், உள்துறை அமைச்சர், ஐஎஸ்ஐ தலைவர் ஆகியோரே காரணம் என முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளதாக, அவரது கட்சி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பார்லிமென்டிற்கு முன்னதாக தேர்தல் நடத்த வலியுறுத்தி இம்ரான் கான் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாப்(பிடிஐ) சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இதில் இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக லாகூர் அழைத்து செல்லப்பட்டார். அவருடைய காலில் குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும், உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பிடிஐ கட்சி மூத்த தலைவர் அசாத் உமர் மற்றும் மிலன் அஸ்லம் இக்பல் கூறியதாவது:–
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இம்ரான் கானுடன் பேசினோம். இந்த சம்பவத்திற்கு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், உள்துறை அமைச்சர் ராணா சனதுல்லா மற்றும் ஐஎஸ்ஐ தலைவர் பைசல் ஆகியோர் தான் காரணம். இது குறித்து கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் அந்த தகவலை இம்ரான்கான் கூறியுள்ளார். அவரது உடல்நிலை திடமாக உள்ளது. ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டார்.
துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமான 3 பேரும் பதவியில் இருந்தும் நீக்கப்பட வேண்டும். முன்பு இம்ரான் உயிருக்கு ஆபத்து உள்ளது என்ற தகவல் கிடைத்ததும் அவருடன் பேசினோம். ஆனால் அதனை இறைவனிடம் விட்டு விடுவோம் என இம்ரான் பதிலளித்தார். 3 பேரும் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். இல்லாவிட்டால், இம்ரான் ஒப்புதல் பெற்று நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.