துபாய், ஜன.8-–
துபாயில் கார் பந்தய பயிற்சியின் போது நடிகர் அஜித்குமார் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
நடிகர் அஜித்குமார் திரைப்படங்களில் நடிப்பதை கடந்து கார், பைக் ரேஸ் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். குறிப்பாக படப்பிடிப்பு முடிந்த காலக்கட்டங்களில் சர்வதேச கார் பந்தயங்களில் கலந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்.
திரைக்கு வர உள்ள விடாமுயற்சி, ‘குட் பேட் அக்லி’ படங்களின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்த நிலையில், அவர் இளம் தலைமுறையினரை ஊக்கப்படுத்தும் விதமாக சர்வதேச கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக ஓர் அணியை ஏற்படுத்தி உள்ளார்.
இந்த நிலையில் துபாயில் வருகிற 12 மற்றும் 13–-ந் தேதிகளில் 20-வது சர்வதேச கார் பந்தயம் நடைபெறுகிறது. அதற்காக துபாய் வந்த நடிகர் அஜித்குமார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்கான பயிற்சியை எடுத்து வருகிறார்.
இந்த பந்தயத்தில் கலந்து கொள்ள போர்ச் ஜிடி3 ஆர்.எஸ் என்ற சொகுசு காரை வாங்கி வெள்ளை, சிவப்பு, மஞ்சள் வண்ணத்தில் பிரத்யேகமாக தயார் செய்தார். இதன் முன்புறத்தில் அஜித்குமார் ரேசிங் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த காரின் மதிப்பு ரூ.4 கோடியாகும்.
நேற்று பயிற்சியில் நடிகர் அஜித்குமார் ஈடுபட்டு இருந்தார். அப்போது திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. தடுப்புகளில் மோதி, சில முறை சுழன்றபடி விபத்துக்குள்ளானது. இதில் அந்த காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. மீட்பு பணியாளர் ஒருவர் அங்கு விரைந்து வந்தார். ஆனால் சேதமடைந்த காரில் இருந்து அஜித்குமார் எந்தவித பதற்றமும் இல்லாமல் வெளியில் வந்தார்.
நடிகர் அஜித்குமார் கார் விபத்தில் சிக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காட்சிகளை பார்த்து அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய நடிகர் அஜித்குமாருக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
விபத்து குறித்து அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறும்போது, “நேற்று (7–ந் தேதி) 4 மணி நேர பயிற்சியில் அஜித்குமார் ஈடுபட்டார். 3 மணி நேரத்துக்கும் மேலாக கார் ஓட்டிய நிலையில், எதிர்பாராத விதமாக ரேஸ் டிராக் ஓரமாக இருந்த தடுப்பில் மோதி கார் விபத்துக்குள்ளானது.
நல்லவேளையாக அஜித்குமார் காயமின்றி உயிர் தப்பினார். பயிற்சியின்போது இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவது சகஜம். இதையெல்லாம் எத்தனையோ தடவை தன்னம்பிக்கையுடன் போராடி அஜித்குமார் கடந்துள்ளார். இன்று வழக்கம்போல அவர் பயிற்சியில் ஈடுபட உள்ளார். திட்டமிட்டபடி போட்டியில் கலந்துகொள்வார். உலகமே பார்க்கும் சர்வதேச கார் பந்தயத்தில் தமிழகத்தின் பெருமையாக அஜித்குமார் முத்திரை பதிப்பார்”, என்றார்.