செய்திகள்

துபாய் கார் ரேசிங்கில் அஜித் அணி 3 வது இடத்தை பிடித்து அசத்தல்

Makkal Kural Official

அமைச்சர் உதயநிதி, கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை, ஜன. 13–

துபாய் கார் ரேசிங்கில் அஜித்தின் அணி 3-ஆவது இடத்தைப் பிடித்து அசத்திய நிலையில், துபாய் ஆட்டோடிரோம் சர்க்யூட் தலைவராக உள்ள இந்தியரான இம்ரான், தன் 20 ஆண்டு கால சர்வீஸில் கண்களில் முதல் முறையாக கண்ணீர் துளிகளை அஜித் குமார் வரவழைத்ததாக கூறி உள்ளார்.

துபாயில் நடைபெறும் போர்ஷே ஜிடி 911 ரேசிங் கார் பந்தயத்தில் அணியில் இருந்து கடைசி நேரத்தில் அஜித் விலகியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. எனினும், தனி நபர் போட்டியில் அஜித் களம் காண்பார் என அறிவிக்கப்பட்டபோது ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அதைவிட மகிழ்ச்சியடையும் தருணம் துபாயில் நடந்தது.

துபாய் பந்தயத்தின் ஒரு அங்கமான 992 பிரிவில் அஜித் குமார் ரேசிங் 3-ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியது. இதனால், உற்சாகத்தின் உச்சிக்கே போன அஜித், குழந்தை போல் துள்ளிக் குதித்து வீரர்களோடு தோள் சேர்ந்து கொண்டாடினார். மேலும், மைதானத்திற்குள் ஓடிச் சென்ற அஜித், கைகளால் ஹார்ட்டின் வரைந்து அணியினருக்கு அன்பை வெளிப்படுத்தினார். மைதானத்தில் தேசியக் கொடியை பெருமிதத்துடன் ஏந்தியபடி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அஜித் ப்ளையிங் கிஸ்சும் கொடுத்தார்.

உதயநிதி, கமல் வாழ்த்து

இந்நிலையில், துபாய் ஆட்டோடிரோம் சர்க்யூட் தலைவராக உள்ள இந்தியரான இம்ரான், தன் 20 ஆண்டு கால சர்வீஸில் கண்களில் முதல் முறையாக கண்ணீர் துளிகளை அஜித் வரவழைத்ததாக கூறினார். அதில், “என்னை நம்ப முடியவில்லை. என் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்த அஜித்துக்கு நன்றி. இந்த தேசியக்கொடி பறக்காதா என பலகாலமாக நான் ஏங்கியதுண்டு. அஜித் நேர்மையானவர், அழகான குடும்பம், நண்பர்கள் என சிறப்பானவர்” என இம்ரான் நெகிழ்ந்தார்.

இது எல்லாவற்றையும் விட முத்தாய்ப்பாக கணவர் சாதித்ததை எண்ணி பெருமிதம் கொண்ட ஷாலினி, மகள் சகிதம் சென்று அன்பு முத்தமிட்டு வாழ்த்தினார். அஜித்தும் ஷாலினிக்கு நன்றி சொல்லத் தவறவில்லை.

தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இலச்சினையை தன் அணி கார்களில் அஜித் பொறித்துள்ள நிலையில், அவரது அணி வெற்றிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, சிவகார்த்திகேயன் என வாழ்த்து மலர்களை குவிந்தவண்ணம் உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *