கண்ணன் தன் மகனுக்காக தான் வாழ்ந்த இடத்தை விட்டு சென்னைக்கு வந்தார். வந்ததும் சில நாட்கள் மிகவும் சிரமப்பட்டார். முதலில் செலவினங்கள் மிரட்டின. சுவையான காய்கறிகள் சாப்பிட்ட வாய்க்கு இங்கே கிடைப்பது அரிதானது.
கோதை தன்னை விட்டு சென்றது முதல் எல்லாவற்றையும் துறந்து வாழ்வதென முடிவு செய்தவர் மனைவியுடன் வாழ்ந்த நினைவை மட்டும் மறக்க முடியாமல் தவித்தார். தனது மகனுடன் வரும் போது கண்ணண் நான் வீட்டுச் செலவுகளை ஏற்றுக் கொள்ளுவேன். சம்மதம் என்றால் வருகிறேன் என்றார். மகன் சாரதியும் அவரது மனைவி கோதையும் சரியெனச் சொன்ன பிறகு தான் வந்தார்.
கண்ணன் தான் வாங்கும் மற்றும் செலவழிக்கும் தொகைகளை ஒரு நோட்டில் எழுதி வைத்துக் கொண்டு மாதா மாதம் செலவுகளை கணக்கிட்டு போன மாதத்துடன் ஒப்பிட்டு இந்த மாதம் எவ்வளவு கூடுதல் தொகை தேவைப்படுமென கணக்கிட்டு அதற்கேற்ப ஒதுக்குவார். ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் வரவு செலவு இவற்றை ஆராய்ந்து விலைவாசி உயர்வை கணக்கிட்டுக் கொள்வார். சாரதி தந்தையிடம் நீங்கள் வீட்டின் நிதித்துறை பொறுப்பாளரே என ஒப்புக் கொள்கிறேன். ஏன் இப்படி ஒரு கணக்கீடு பட்டியல் என்றால் நீ ஒரு காலத்தில் செலவு பண்ணும் போது அதைப் பற்றித் தெரிய வரும் என்பார். சாரதி அதற்கு மேல் பேசாமல் ஒதுங்கி விடுவார்.
கண்ணன் தனது மகன் செலவு செய்வது ஆடம்பரமாக இருந்தாலும் அதைப் பற்றிக் கேட்க மாட்டார். தனது மகனிடம் சில சமயங்களில் பணத்தை சேமிக்கக் கற்றுக் கொள். கடன் அட்டை மோகத்தைக் குறைத்துக் கொள் என்று கூறுவார். மகன் பதிலுக்கு நிற்காமல் நகர்ந்து விடுவார்.
சாரதிக்கு அப்பா வந்த பிறகு பாதி வேலைகள் குறைந்தது மட்டுமின்றி, பணமும் மிச்சமானது. கோதை தன் மகனை பள்ளிக்கு அழைத்துச் செல்வது பள்ளியில் இருந்து அழைத்து வருவது, அவனுக்கு கதைகள் மற்றும் வாழ்வியல் பற்றிக் கூறுவதற்கு தனது மாமனார் இருந்தது சௌகரியமாகப் போனது. பையன் தாத்தா சொன்னதை, சாப்பிடும் போதும், அம்மாவிடம் தனியாக இருக்கும் போதும் பெருமையாகக் கூறுவார்.
தாத்தா நீ மட்டும் ஏன் நோட்டில் கணக்கு மாதிரி எழுதுகிறாய். எனது அப்பா எழுதுவதில்லையே என்று பேரன் கேட்டால் உங்கள் அப்பா கணினியில் பதிவு செய்துள்ளார் என்று கூறி முற்றுப் புள்ளி வைப்பார். தாத்தா உனக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று பேரன் கேட்டதற்கு நான் அரசு வேலை பார்த்தேன். அதனால் பணி ஓய்வு பெற்றதும் ஓய்வூதியம் தருகிறார்கள் என்றார். பேரனுக்கு ஒன்றும் புரியாமல் தலை ஆட்டியதும் இன்னும் விளக்கமாக நீ புரிந்து கொள்ளும் நாளில் சொல்கிறேன் என்றதும் பேரன் ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு நகர்ந்தார்.
அன்று வெகு நேரமாகியும் அப்பா படுக்கையில் இருந்து எழுந்திருக்காதது கண்டு சாரதி அவர் படுக்கைக்குச் சென்று அப்பா அப்பாவென அழைக்க ஒரு பதிலும் ஒரு அசைவும் இல்லாதது கண்டு தொட்டுப் பார்க்க உடல் வெப்பத்தை மறந்திருந்தது கண்டு பயந்து மருத்துவரை அழைக்க அவர் வந்து பார்த்து விட்டு கையை விரித்தார்.
அப்பா தன்னை விட்டுச் சென்று இன்றோடு ஒரு வருட காலம் நகர்ந்தது கண்டு கலங்கிய சாரதி இந்த இடைப்பட்ட காலத்தில் தனது சேமிப்பெல்லாம் கரைந்து கடன் பெருகி திக்கு முக்காடி திணற வைத்தது கண்டு அவன் அப்பாவின் அறிவுரைகள் ஒவ்வொன்றாக கண் முன் வந்து போனது.
மிகவும் தாமதாக எழுந்த சாரதி தனது அப்பா அறைக்குள் சென்று அவரது அலமாரியை திறந்து போது அதில் நிறைய பேப்பர்களுடன் இரண்டு கவர்கள் இருந்தன. ஒன்றில் ரூபாய் மூன்று லட்சத்திற்கான வங்கி சேமிப்புப் பத்திரம் இருந்தது. மற்றொரு கவரில் ரூபாய் ஒரு லட்சத்திற்கு பணமாக இருந்தது. அதில் இது எனது பேரனுக்கு என்று எழுதியிருந்ததைக் கண்ட கோதை சாரதியின் கையிலிருந்து அதைப் பிடுங்கி தன் வசம் வைத்துக் கொண்டார். சாரதியிடம் கோதை எல்லா பணத்தையும் கடனுக்கு அடைக்காதீர்கள், கொஞ்சம் சேமியுங்கள் என்றார்.
சாரதி எதையுமே காதில் வாங்கவில்லை. கண்ணிழந்தவக்கு பார்வை கிடைத்த மகிழ்வு போல் உணர்ந்து மறு நாள் முதல் வேலையாக வங்கிக்கு சென்று அந்த ரசீதை தனது கணக்கில் வரவு வைக்கச் சொன்னார். ஏனெனில் சாரதியைத் தான் அவர் அப்பா தனக்குப் பிறகு பணம் பெற பரிந்துரை செய்திருந்தார். பணம் தனது கணக்குக்கு வந்ததும் சாரதி கடனுக்கு முழுவதையும் மாற்றினார். நாலரை லட்சம் என்றிருந்த கணக்கு ஒன்றரை லட்சத்திற்கு வந்தது கண்டு மகிழ்ந்தார். வீட்டிற்கு வந்ததும் கோதை சாரதியிடம் எல்லாவற்றையும் தொலைத்தாச்சா என்றார். கடனுக்குத் தானே சென்றது என்ற சாரதியிடம் சேர்ப்பது கடினம் அழிப்பது சுலபம் எங்கே உணரப் போகிறீர்கள் என்றார்.
இதற்குப் பிறகு சில நாட்கள் சும்மா இருந்த சாரதி மறுபடியும் கடன் அட்டைகள் மூலம் கடனை உயர்த்திக் கொண்டே போனார். மறுபடியும் சிக்கல் வந்தது. இதற்கிடையில் கோதை எவ்வளவு தடுத்தும் பயனில்லாமல் போனது. பழையபடி வீட்டில் நல்ல சூழ்நிலை இல்லாமல் போனது.
அன்று அலுவலகம் வந்த சாரதியை ஒரு நபர் வந்து பார்த்தார். அவர் சற்று உரக்கவே அவரை மிரட்டி பணம் கட்டவில்லையெனில் நீதிமன்றம் தான் செல்வேன் என்றார். சாரதி சற்று மிரண்டு தவணை நாள் கேட்க, அவர் அடுத்த மாதம் வருவேன். இது தான் கடைசி சந்தர்ப்பம் என்று கூறி நகர்ந்தார். இருக்கைக்கு வந்த சாரதியிடம் கணேசன் சற்று நிதானமாக பேசினார். என்னால் கடன் வாங்கித் தரமுடியும்,ஆனால் ஒரு கடனை வாங்கி மறு கடன் அடைப்பது தவறான அணுகுமுறை மட்டுமல்ல, ஒரு நேரத்தில் கடன் என்ற பிடி தளரவே தளராது என்றார்.
சாரதி மறு நாள் அலுவலகம் சென்றதும் கோதை என்ன செய்வதென்றறியாமல் இருக்க, வாசலில் அழைப்பு மணி தனது குரலை வெளிப்படுத்த, கோதை சென்று பார்க்க,ஒரு வயதானவர் இது சாரதி வீடு தானே என்று கேட்டார். கோதை ஆமாமாம் என்று அவரை உள்ளே அழைக்க, வந்தவர் தனது பெயர் ராமசாமி. உனது மாமனார் கண்ணனுடைய பால்ய நண்பர். அவருடன் வேலை பார்த்தவர் என்றும் இரண்டு நாட்களுக்கு முன்னால் ஓய்வூதிய சங்கம் சென்ற போது தான் கண்ணன் காலமாகி விட்டதை அறிந்தேன். இருந்தது அவன் ஒருத்தன் தான் எனக்கு. எனக்கு என் மனைவியும் இல்லை இப்போது என்றார். நான் இங்கு வருவதற்கு முன் சாரதி அலுவலகம் சென்றேன். கணேசன் என்பவரைப் பார்த்தேன். விவரம் அறிந்தேன். தயவு செய்து என்னுடன் அவர் கடன் வாங்கிய வங்கிக்கு வர முடியுமா என்றார்.
கோதை இவரேன் பணம் கட்ட வேண்டுமென்ற எண்ணம் தோன்றாமல் அவரை அழைத்துச் சென்றார். ராமசாமி அங்கு சென்று வங்கி மேலாளரிடம் சாரதி கடன் பற்றிக் கேட்டு மொத்த பணத்தையும் கட்டி கணக்கை முடித்து அதற்குண்டான கடுதாசியையும் பெற்று கோதை கையில் கொடுத்தார். கோதை அவருக்கு கண்ணீரால் நன்றியை தெரிவித்து இருவரும் வீட்டிற்கு வந்தார்கள்.
ராமசாமி சாப்பிட உணவு பரிமாறிய கோதை அவர் சற்று ஓய்வெடுக்க கண்ணன் அறையைத் திறந்து விட்டார்.
இதற்கிடையில் சாரதி கைப்பேசிக்கு கடன் முழுவதும் அடைக்கப்பட்டதாக விவரம் வர, அவர் கணேசனைக் கூப்பிட்டு காண்பித்தார்.
கணேசனும் இனிமேலாவது ஒழுங்காக இருங்கள் என்றார். எப்படி அடைந்தது என்று சாரதி குழம்பிய நிலையில், கணேசன் ஒரு வேளை மனைவி தங்களது நகையை விற்று கட்டியிருப்பாரோ என்றதும் சாரதி மகிழ்ச்சியெல்லாம் மறந்து காற்று குறைந்த பலூன் போலானார்.
அப்போது கைப்பேசியில் அழைப்பு வர, எடுத்த சாரதியிடம் கோதை பேசுகிறேன் சீக்கிரம் வீடு வாருங்கள் என்று கூறி இணைப்பைத் துண்டித்தார்.
சாரதி, கணேசனிடம் என்னுடன் தாங்கள் என் வீட்டிற்கு வர முடியுமா என்று கேட்க கணேசன் வருகிறேன் என்று கூறி, புறப்பட்டார்கள்.
வீட்டில் நுழைந்த சாரதி, ஒரு வயதானவர் இருப்பதைக் கண்டு கணேசனைப் பார்க்க, கணேசன் ஐயா வணக்கம் என்றார். சாரதி எப்படி கணேசனுக்கு இவர் அறிமுகம் ஆனார் என்று குழம்பிய வேலையில், ராமசாமி,தான் கண்ணனின் நண்பர் என்றார்.
ஊரில் தங்கள் வீட்டில் வசிப்பதாகவும் வீட்டில் வாசலில் இரண்டு கடைகள் கட்டி கண்ணன் வாடகைக்கு விட்டுள்ளார் என்றும் முதல் மாடியில் அவருக்குத் தெரிந்த நண்பர் குடியுள்ளார் என்றும் அவர்கள் கொடுத்த வாடகைப் பணம் மராமத்துப் போக மீதம் தான் இன்று நான் உங்கள் கடனை அடைக்க உதவியது என்றார்.
என்னை உனது அப்பா இலவசமாகத் தங்கிக் கொள் என்றார். நான் அவ்வாறு செய்யாமல் நான் கொடுக்க வேண்டிய வாடகையையும் கணக்கில் சேர்த்துள்ளேன். இந்தாருங்கள் விவரம் என்றார். இதில் மீதமுள்ள பணத்தை கோதையின் அறிவுரைப்படி வங்கி சேமிப்புக் கணக்கில் உங்கள் மகன் பெயரில் போட்டுள்ளேன் என்றதும் கணேசன் திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்ற வாசகம், சாரதிக்கு ராமசாமி ஐயாவே தெய்வம் என்று கூறலாமே என்ற நிலையில்
சாரதி ராமசாமி காலில் விழுந்து அப்பா இனிமேல் கடன் பெற மாற்றேன்; இருப்பதை வைத்துக்கொண்டு வாழ்வேன் என்று கூறினார்.
கடன் அட்டைகளை கத்திரிக் கோலால் இரண்டாக பிளந்து கணேசன் வசம் கொடுத்தார்.
கணேசன் சாரதியிடம் ஐயா வங்கிக்கு வந்ததைக் கூற, நல் வழிக் காட்டுபவர்கள் நம்முடன் இருக்கிறார்கள் என்றார். அப்பா இங்கேயே தங்கி என்னை வழி நடத்துங்கள் என்று கூறிய சாரதியைப் பார்த்து ஒரு புன்னகை புரிந்த ராமசாமி நான் உனது அப்பாவின் கடமையை நிறைவேற்றுகிறேன் என்றார்.
சாரதி நீ சேமிப்புப் பழக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும்; ஏனெனில் இப்போதுள்ளவர்கள் செலவினங்களிலேயே மும்மரம் காட்டுகிறார்கள் என்றார் ராமசாமி.
கணேசன் ஐயா உங்களுக்கு எத்தனை வாரிசுகள் என்று கேட்க, அவர் ஒன்றுமில்லை என்று கூறி முடிக்கையில், இனிமேல் சாரதி தான் அவர் மகன் என்று சாரதி கூறினார்., ராமசாமி உறவு தொடர்வதாகவே உணர்ந்த வேளையில், சாரதி மகன் பள்ளியிலிருந்து வந்தான்.
ராமசாமி அவரிடம் தான் வாங்கி வந்த இனிப்பு மற்றும் பலகாரங்கள் உடன் அறிவு சார்ந்த விளையாட்டுப் பொருட்களை நீட்ட, வாங்கிய சாரதி மகன் அம்மா இனிமேல் வீட்டில் இந்த மாதிரி மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்குமல்லவா என்று கேட்டான்.
ராமசாமி, சாரதியிடம் பணம் பாதளாம் வரை தான் பாயும், கடன் பிஞ்சு மனதிலும் பாயும் என்றதும்
சாரதி வரும் சனிக்கிழமை எல்லோரும் ஊருக்குச் செல்வோம் ராமசாமி அப்பாவுடன் என்றும் ஊரிலுள்ள வீட்டின் உரிமையாளர் நானல்ல எனது மகனே என்று கூறினார்.
ராமசாமி கண்ணண் எழுதிய உயில் வாசகத்தைக் காட்ட கோதை மகிழ்ந்தார்.
அதிலும் சாரதி பையனுக்கே உரிமை என்றிருந்தது. கணேசன் ராமசாமி ஐயா கடனை மட்டும் தீர்க்கவில்லை, வீட்டின் துன்பத்தையே துடைத்துள்ளார் என்றதும் சாரதி பையன் தாத்தா இவ்வளவு நாள் எங்கிருந்தீர்கள், சற்று முன்னாடி வந்திருக்கலாம் அல்லவா என்று கூறினார்.
அந்த பிஞ்சு உள்ளத்தை வாரி அணைத்தார் ராமசாமி.