சென்னை, செப்.30-–
துணை முதலமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர்கள் ரஜினி, கமலஹாசன் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதிய துணை முதலமைச்சராகப் பதவி உயர்வு பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலரும் நேரில் சந்தித்து, வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அலைபேசி மூலம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் உறுதிமொழி எடுத்துக்கொண்டீர்கள். அவர்கள் இருவருக்கும் நீங்கள் உண்மையாக சேவை செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல நடிகர்கள் தனுஷ், சூர்யா, சிலம்பரசன், சிவகார்த்திகேயன், இயக்குனர்கள் வெங்கட் பிரபு, மாரி செல்வராஜ், எஸ்.ஜே.சூர்யா, இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி, பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து, ஆகியோரும் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இளைய சமுதாயத்திற்கு ஒரு விடிவெள்ளியாக ஒளிரவும், நம் தமிழகத்தை உலகமே உற்று நோக்கும் வகையில் சீரிய முறையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்” என குறிப்பிட்டிருந்தது.
அரசியல் கட்சி தலைவர்கள்
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தனது வாழ்த்து செய்தியில், “தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரது பணி சிறக்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் எனது விருப்பங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இதேபோல திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் ஆகியோரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ், தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் ஆகியோரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.