புதுடெல்லி, ஆக.11-
துணை ஜனாதிபதி தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். யாரை நிறுத்துவது என்பதில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த மல்லிகார்ஜுன கார்கே முயன்று வருகிறார்.
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், கடந்த மாதம் 21-ந் தேதி, மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அவர் பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது.. அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.
புதிய துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9-ந் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பாணை கடந்த 7-ந் தேதி வெளியிடப்பட்டது.
இதற்கிடையே, துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுகிறார்.
இதுகுறித்து அக்கூட்டணி வட்டாரங்கள் கூறியதாவது:-
துணை ஜனாதிபதி தேர்தல் முடிவு எப்படி வரும் என்றாலும், அந்த தேர்தலை கண்டு பயந்து ஓடாமல் போட்டியிட வேண்டும் என்று ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளிடையே பலமான கருத்து நிலவுகிறது.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்த பலரும் ஆர்வம் தெரிவித்துள்ளனர். ஒரு சில பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
கருத்தொற்றுமையுடன் வேட்பாளரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எதிர்க்கட்சிகளை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களில், நாடாளுமன்றத்தில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக போராடி வருகின்றன. இந்த பின்னணியில், பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சி நடந்து வருகிறது.
கடந்த 7-ந் தேதி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இல்லத்தில் ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. அதுபோல், மல்லிகார்ஜுன கார்கே இன்று (திங்கட்கிழமை) ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்களுக்கு விருந்து அளிக்கிறார்.
துணை ஜனாதிபதி தேர்தலில், மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிப்பார்கள். தேர்தல் நடத்தும் அதிகாரி யாக மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை 3 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை முறையாக இல்லாததால் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனு தாக்கலுக்கு 21-ந் தேதி கடைசிநாள்.
22-ந் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்படும். மனுக்களை வாபஸ் பெற 25-ந் தேதி கடைசிநாள் ஆகும்.
![]()





