ஆனந்தன் பிரியாவை கை பிடித்து இன்றொடு நாற்பது வருடங்கள் ஓடி விட்டன. பணியிலிருந்து ஓய்வு பெற்று விளையாட்டாக ஐந்து வருடங்கள் நில்லாது சென்றன. ஆனந்தன் தனது மூத்த பையனை தனது நண்பன் ஆலோசனைப்படி படிக்க வைத்து அவனை பணிக்காக அமெரிக்காவிற்கு அனுப்பினார். தனது மகளை தனது சொந்தக்காரப் பையனுக்கு விமரிசையாகவே திருமணம் செய்து வைத்தார்.
ஆனந்தன் மகன் சுதர்சனுக்கு தனது நண்பன் கருப்பசாமியின் அறிவுரைப்படி அவர் தேர்ந்தெடுத்த பெண்ணை மணம் முடித்தார். இருவரும் தற்போது அமெரிக்காவில் உள்ளார்கள்.
சுதர்சன் ஆனந்தனைத் தொடர்பு கொண்டு அம்மாவை அமெரிக்காவிற்கு அனுப்புங்கள் என்றான். ஆனந்தன் சரி பார்க்கலாம். உங்கள்அம்மாவிடம் கலந்து ஆலோசனை பண்ணி சொல்கிறேன் என்றார்.
அப்போது அங்கு வந்த பிரியா நான் பையனிடம் செல்கிறேன். நீங்கள் நம் மகள் வாணியிடம் செல்லுங்கள் என்றார். ஆனந்தன் பிரியாவைப் பார்த்து என்ன முடிவு எடுத்தாச்சா என்று கேட்ட வேளையில். பிரியா அவனுக்கு சேவை செய்வதில் எனக்கு விருப்பம் தான் என்றார். இவ்வளவு வயதிற்கு அப்புறம் பிரிவு வாழ்க்கை தேவை தானா இருக்கப்போகின்றீர்கள் என்றார். இனிமேல் பேசி ஆகப்போவதில்லை என்று நினைத்தார் ஆனந்தன்.
வாணியின் கணவர் வாசு ஆனந்தனைத் தொடர்பு கொண்டு சுதர்சன் பேசியதாகவும் நீங்கள் எங்களுடன் வந்து இருங்கள் எங்களுக்கும் பாதுகாப்பு தான் என்றதோடு எங்கள் பையனுக்கும் அதிக விருப்பம் தான் என்றார். ஆனந்தன் மாப்பிள்ளையிடம் மறுப்புக் கூற முடியாமல் பார்ப்போம் என்றார். ஆனந்தன் தனது நண்பனைத் தொடர்பு கொண்டு கலந்தாலோசித்தார். அவர் உன்னை அமெரிக்கா அழைக்கவில்லையே, பேசாமல் இரு என்றார்.
சுதர்சனும் அவன் மனைவியும் ஒரு முக்கியமான திருமண விழாவிற்கு இந்தியா வந்தனர். அவர்கள் செல்லும் போது அவர்களுடன் ஆனந்தன் மனைவியும் பயணிக்க பயணச் சீட்டு எடுத்தனர். சுதர்சன் நான் எங்களுடன்அம்மாவிற்கும் நிரந்தர குடியுருப்பு உரிமம் வாங்குவதென முடிவு செய்துள்ளோம் என்றான். சுதர்சன், அப்பாவிடம் நீங்கள் வாணி வீட்டில் தானே இருக்கப் போகின்றீர்கள். பேசாமல் இந்த வீட்டை விற்று விடுங்கள் என்றான்.
ஆனந்தன் மனைவி பிரியா மகன் சொற்படி செய்யுங்கள் என்றார்.
ஆனந்தன் நீ அமெரிக்காவில் இருந்து வந்தால் எங்கே தங்குவது என்றதும் அதை சுதர்சன் முடிவு செய்வான் என்றார் பிரியா. ஆனந்தன் கவலையில் ஆழ்ந்தார். இதற்கிடையில் சுதர்சன் கருப்பசாமி மாமாவிடம் பேசி சில விவரத்தைக் கூறியதும் அவர் உடனே செய்யலாம் என்றார். வீடு சம்பந்தமாக கருப்பசாமி ஆனந்தனுடன் பேசி அவரை சம்மதிக்க வைத்தார்.
அடுத்து சில நாட்களில் கருப்பசாமி தலையீட்டில் வீடு விற்பனையானது. வந்த பணத்தை தனது கணக்குக்கு மாற்றச் சொன்னான் சுதர்சன். ஆனந்தன் உடனே கருப்பசாமியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் மாற்றி விடு என்றார். ஆனந்தன் சற்றும் விருப்பமில்லாமல் வங்கிக்குச் சென்று மாற்றி விட்டு தனது மகள் வீட்டிற்கு வந்து சோர்வாக அமர்ந்தார். மனைவி மற்றும் மகன் ஊருக்குச் சென்று விட்டதாலும் வீடு விலை போனதாலும் வேறு வழியின்றி மகள் வீட்டில் ஒதுங்க வேண்டி உள்ளதே என்று மனதிற்குள் நொந்து கொண்டாலும் பேரன் தாத்தா என்று தன்னுடன் வலம் வருவது ஆறுதலாக அமைந்தது. ஆனந்தனுக்கு மகன் வாணி வந்து அப்பா இங்கிருப்பது முள் மீது இருப்பதாகத் தோன்றுகிறதா என்றதும் ஆனந்தன் அதெல்லாம் ஒன்றுமில்லை, எனக்கு பழக கொஞ்சம் நாளாகும் என்றதும் வாணி ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு நகர்ந்தாள். ஆனந்தனுக்கு ஏன் கருப்பசாமி என் வீட்டை விற்கச் சொன்னான் என்ற யோசனையில் ஆழ்ந்தாலும் விற்ற பின்அவனிடம் கேட்பது நல்லதல்ல என்று நினைத்தார்.
வாணி வந்து அப்பாவிடம் அப்பா வீட்டை தரைமட்டமாக ஆக்கிவிட்டார்கள் என்றாள். என்ன ஆனால் என்ன அது நம் கையை விட்டு போச்சே என்றார். நாட்கள் நகர நகர எட்டு மாதங்களில் பழைய ஆனந்தன் வீடு நேர்த்தியாக கட்டப்பட்டிருந்தது. கட்டிடம் தரையிலிருந்து நன்கு உயர்த்தப்பட்டு வாகன வசதியுடன் மூன்று அடுக்குடன் அமைந்தது. முதல் அடுக்கு இரண்டு படுக்கை, இரண்டாவது மற்றும் மூன்றாவது மூன்று படுக்கை அறை என பல வசதிகளுடன் கட்டப்பட்டிருந்தன. கருப்பசாமி ஆனந்தனை கூப்பிட்டு வா வீட்டைப் பார்க்கலாம் என்றதும் வேண்டா வெறுப்பாக வந்து பார்த்து விட்டு எனது பூர்வீக வீடு அதன் அழகையே மாற்றி விட்டார்கள் என்றார். கருப்பசாமி மேற்கொண்டு எதும் பேசாமல் இன்னும் சில வேலைகள் உள்ளது என்றதும் ஆனந்தன் தாழ்ந்த குரலில் முடியுங்கள் என்றார்.
வாணி அப்பா சாப்பிட வாங்க என்றாள். ஆனந்தன் சாப்பிட்டுக்கொண்டே என்ன சிரமங்கள் இருந்தாலும் பூர்வீக வீட்டு நினைவுகளை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது என்றதும் வாணி கணவர் மாமா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை என்றார்.
சிறு பருவ விளையாட்டு நினைவுகள், நடந்த விழாக் கோலங்கள் போன்ற இன்னும் பல நினைவுகள் மனதில் கடல் அலை போல் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்கும் என்றார்.
இன்று பேசிய சுதர்சன் நாங்கள் ஊருக்கு வருவதாகவும் அம்மா அங்கு இருப்பது தான் நல்லது என முடிவு செய்துள்ளோம் என்றார்.
ஆனந்தன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார், ஆனால் அவர்கள் வந்ததும் எங்கு இருப்பது என்று கேட்டார்.
வாணி இது வீடு இல்லையா என்று கேட்டார்.
ஆனந்தன் பேச்சின்றி அமைதியானார்.
பையன் பேசிய பின் கருப்பசாமி தொடர்பில் வந்து பையன் மற்றும் எல்லோரும் வருகிறார்களாமே என்றார். ஆனந்தன் அதற்குள் உனக்கு சேதி வந்து விட்டதா என்றார்.
சுதர்சன் தனது மனைவி மற்றும் அம்மாவுடன் வந்ததும் வாணி வீடே கலகலத்தது. ஆனந்தன் அடைந்த மகிழ்வுக்கு எல்லையே இல்லையெனலாம். சுதர்சன் வாணி, அவரது கணவர் மற்றும் அவள் பையனுக்கு ஏகப்பட்ட பொருட்கள் வாங்கி வந்தான்.
அப்பாவிற்கு அவர் விரும்பும் பொருட்கள் தந்தான்.
அவர் பழைய வீட்டில் இதை வைத்தால் நன்றாக இருந்திருக்குமே என்றார்.
ஆனந்தன் மனைவி பிரியா இன்னும் அதே ஞாபகம் தானா என்றார்.
ஆனந்தன் மெல்ல மெல்ல புது நிலையை அடைந்து கொண்டு இருந்தார்.
சுதர்சன் கருப்பசாமி மாமாவை பார்த்து விட்டு வருகிறேன் என்று சென்றான்.
ஆனந்தன் மனதிற்குள் வந்ததும் வராததுமாய் எதற்கு அவனைப் போய் பார்க்கிறான் என்று நினைத்தார். கருப்பசாமி நண்பன் வீடு என்று பார்க்காமல் விற்க துணை போனானே, என்ன நண்பன் என நினைத்தார்.
சுதர்சன் ஏன் அவன்பின்னால் இப்படி அலைகிறான் என்று நினைத்தார்.
கருப்பசாமி பினாமிச் சொத்தாக வாங்கி இருப்பானோ, யார் கண்டது, பணம் படைத்தவன் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்த வேளையில், வாணி வந்து அப்பா, அண்ணன் வந்தாச்சு சாப்பிடலாம் வாங்க என்றாள். எல்லோரும் சாப்பிட அமர்ந்தனர்.
சுதர்சன் அப்பா கருப்பசாமி மாமா வரும் 10ந் தேதி புது வீட்டில் இல்ல நுழைவு விழா நடைபெறுவதாக தேதி குறித்துள்ளாராம். நாம் அனைவரும் கட்டாயம் வர வேண்டும் என்று கூறி விட்டார். ஏற்பாடு எல்லாம் அவர் தான் என்றான் சுதர்சன். ஆனந்தன் சரியெனச் சொன்னார்.
ஓன்பதாம் தேதி கருப்பசாமி அழைப்பின் பேரில் ஆனந்தன் குடும்பம் அவர் வீட்டிற்குச் சென்றார்கள். வந்தவர்களை வரவேற்ற கருப்பசாமி, ஆனந்தனிடம் உன் வீட்டை விற்றதில் நான் கலந்து கொண்டதில் உனக்கு அடங்காத ஆத்திரம் என்பதை நான்அறிவேன் என்றார். எல்லோரும் இங்கே வாருங்கள் என்று ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார் கருப்பசாமி. அங்கு இருந்த புது துணிமணிகள் மற்றும் அலங்காரப் பொருட்கள், புதிய வீட்டிற்கான சாமான்கள்,பூஜா சாமான்கள் எல்லாவற்றையும் காட்டிவிட்டு ஓரமாக இருந்த புதுத் துணிமணிகளைக் காட்டி இதெல்லாம் எனக்கு சுதர்சன் வாங்கியது என்றார். ஆனந்தன் எதற்கு சுதர்சன் கருப்பசாமிக்கு வாங்கினான் என்று யோசனையில் ஆழ்ந்தார்.
ஆனந்தன் பழைய நிலையில் இல்லாதது கண்ட கருப்பசாமி, ஆனந்தா சற்று நான் சொல்தைக் கேள் என்றார். சுதர்சன் உன்னைப் பல தடவை கெஞ்சியும் நீ உன் வீட்டை சரி செய்ய ஒத்துக் கொள்ளவில்லை. மழைக் காலங்களில் வீட்டில் நீர் புகுந்து பல பொருட்கள் சேதமானது பற்றியும் நீ அறிந்தும் பூர்வீக வீடு மாற்றம் வேண்டாம் என பிடிவாதமாக மறுத்து விட்டாய். உன்மனைவி மழைக் காலங்களில் அந்த வீட்டில் படும் சிரமங்கள் சொல்லி மாளாது. என்ன செய்வது என்று கேட்ட சுதர்சனிடம் நான் தான் ஒரு யோசனை சொன்னேன். அதன்படி தான் எல்லாம் நடந்தது. வீடு போச்சே என்ற எண்ணத்தில் இருந்த நீ நாங்கள் தயாரித்த தான பத்திரத்தை (கிப்ட் செட்டில்மெண்ட்) கவனிக்கவும் இல்லை. படிக்கவும் இல்லை. பணம் நான்தான்அவனுக்குத் தந்து உன் கணக்கில் போடச் சொன்னேன். பின் உன் கணக்கிலிருந்து அவன் கணக்கு மூலமாக எனக்குத் திரும்ப வந்தது.
இந்தக் கட்டுமான செலவெல்லாம் உன் பையன் பணம் தான். என்னுடையது அல்ல. கட்டிய வீட்டில் முதல் மாடியில் நீயும் உனது துணைவியாரும் அடுத்த மாடியில் வாணி குடும்பம், அதற்கு அடுத்த மாடியில் சுதர்சன் அமெரிக்காவில் வரும் போது தங்க அவனுக்கு என்றார். சகல வசதிகளும் கொண்டதாக வீடு கட்டப் பட்டுள்ளது. வரும் அதிக மழை, காற்று, வெய்யில் இவைகளுக்கு பயப்பட தேவையில்லை.
சாமான்களை இடம் மாற்றும் வேலை மிச்சம், இனிமேல் உன் துணைவியார் என்றுமே உனக்குத் துணையாக இருப்பார் என்றார். சரி எல்லோரும் நாளை நடக்கும் விழாவிற்குத் தயாராவோம் என்றார்.
எல்லாச் சுற்றங்களும் நாளை காலை வருவதற்கு ஏற்பாடாச்சு என்றார்.
ஆனந்தன் மனதிற்குள் பூர்வீக வீடு நினைவு வந்து சென்றாலும் கட்டிட ஆயுட் காலத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும் , எவ்வளவு தான் பணம் செலவழிப்பது, கால மாற்றதிற்கேற்ப நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நினைத்தார், துணைவியின் துணை நிரந்தரமாக கிடைத்ததை எண்ணி மகிழ்ந்து ஒரு சேர கருப்பசாமி மற்றும் சுதர்சனைக் கட்டிப்பிடித்து நன்றி சொன்னார். அப்போது கருப்பசாமி நாளை உன் பெயருக்கு வீடு மாறி விடுமென்றார். கிடைத்த பொக்கிஷமாக ஆனந்தன் நினைத்தார்,
மனைவி பிரியா ஆனந்தனைப் பார்த்து பூரண மகிழ்வா என்றார்.
#சிறுகதை