போஸ்டர் செய்தி

துணைத் தலைவர் பதவியை உருவாக்க காங்கிரஸ் கட்சி திட்டம்

புதுடெல்லி, மே 28

பாராளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் பெற்ற மோசமான தோல்வியையடுத்து, துணைத் தலைவர் பதவியை உருவாக்க, அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

52 தொகுதிகளை மட்டுமே பாராளுமன்ற தேர்தலில் பெற்ற காங்கிரஸ் மீண்டும் பிரதான எதிர்க்கட்சியாகும் அந்தஸ்தை இழந்துள்ளது. இந்த நிலையில்தான், ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்துள்ளார். காங்கிரஸ் செயற்குழுவில், தனது ராஜினாமா முடிவை ராகுல் காந்தி அறிவித்தாலும், அதை ஏற்க செயற்குழு தயாராக இல்லை. ஆனால், ராகுல் காந்தி தனது முடிவில் பிடிவாதம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில்தான், ராகுல் காந்திக்கு அடுத்த அதிகாரம் கொண்ட துணை தலைவர் பதவியை உருவாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இந்திரா காந்தி காலத்திலேயே இந்த மரபு ஆரம்பித்துவிட்டது. பல மாநிலங்களிலும் கூட மாநில தலைமைக்கு இப்படியான செயல் தலைவர் பதவியை உருவாக்கியுள்ளார்கள். முதல் செயல் தலைவர் 1983ம் ஆண்டு தென் இந்தியாவில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததால், அப்போது இந்திரா காந்தி, காங்கிரசுக்கு செயல் தலைவர் பதவியை உருவாக்கினார். மூத்த தலைவர் கமலாபதி திரிபாதி, செயல் தலைவராக்கப்பட்டார். ஆனால், ராஜீவ் காந்தி காலத்தில், இவரது பதவி பறிக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி கட்சி தலைவராக இருந்தபோது, அர்ஜுன் சிங், துணை தலைவராக நியமிக்கப்பட்டார். 2013ம் ஆண்டில், சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, ராகுல் காந்தியை துணை தலைவராக நியமித்தார்கள். இப்படியாக, இந்த மரபு காங்கிரசுக்கு பழக்கப்பட்டதாகும்.

ராகுல் காந்தி கட்சி தலைவர், அவரது தாயார் சோனியா காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர், தங்கை பிரியங்கா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் இப்படி பதவிகள் வாரி வழங்கப்பட்டுள்ளதால், நாடு முழுக்க வாரிசு அரசியல் என்றாலே காங்கிரஸ் என்ற பேச்சு எழுகிறது. பாரதீய ஜனதாவின் வெற்றிக்கு, காங்கிரசின் வாரிசு அரசியலுக்கு எதிரான பிரச்சாரமும் ஒரு காரணம்.

வாரிசு அரசியல் சர்ச்சையில் இருந்து வெளியே வர, தங்கள் குடும்பத்தில் இல்லாத ஒருவரை செயல் தலைவராக நியமிப்பது பலனளிக்கும் என்று சோனியா காந்தி கருதுகிறாராம். காங்கிரஸ் செயற்குழுவின் அடுத்த கூட்டத்தில், இதுபற்றி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *