அன்று நடு இரவு நேரம் வெளியூரிலிருந்து கிராமத்திலுள்ள தன்னுடைய பெற்றோரை பார்க்க ஒரு வருடம் கழித்து சொந்த ஊருக்கு அந்த நடு இரவில் வந்து கொண்டிருந்தான் ரெங்கன்.!
மெயின் ரோட்டிலிருந்து அவன் வீடு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். அன்று மின்சாரம் தடை வேறு. ஓரே இருள் மயம்.
“என்னடா இது கரெண்ட் வேறு இல்லை. ஒரே இருட்டாகவும் இருக்கு” என்று தனக்குள்ளே புலம்பினான் ரெங்கன்.
அவனுடைய வீடு மலையடிவாரத்தில் இருந்தது. மெயின்ரோட்டில் இருந்து அவனுடைய வீட்டுக்கு போகின்ற வழியில் புளிய மரங்களும் வேப்ப மரங்களும் இரண்டு இடங்களில்ஆலமரங்களும் வளர்ந்திருந்தன.
அந்த ஆலமரத்தடியில் ரெங்கன் சிறு வயதாக இருக்கும்போது அவன் வயது நண்பர்களுடன் பள்ளிக்கூடம் முடிந்து அங்கு தான் விளையாடுவான். அது ஒரு ஆனந்த அனுபவம். அவனுக்கு கிராமத்தில் பள்ளியில் பத்து பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவிட்டு நகரத்தில் ஹாஸ்டலில் தங்கி கல்லூரியில் படித்து ஐ.டி. கம்பெனியில் வேலை பார்ப்பவன்.
அவனுடைய பெற்றோரை பார்க்க ஆறு மாதத்திற்கு ஒருதடவை வந்துசெல்வான். வரும்போது சம்பாதித்த பணத்துடன் பெற்றோரை பார்த்துவிட்டு ஒருவாரம் கிராமத்தில் இருந்து செல்வான்.
நகரத்தில் அவன் தங்கி வேலை பார்ப்பதால் பெற்றோரையும் அவன் அவனுடன் இருக்க எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். ஆனால் அவனதுபெற்றோர் தங்களுக்கு இந்தக்கிராமமே போதும். நகரம் வேண்டாம் என்றுக்கூறி விட்டனர்!
என்னதான் இருந்தாலும் பெற்ற பாசம் விடுமா அவனுக்கு! அம்மா அப்பாவை பார்த்து தானே ஆகவேண்டும்! அதனால்தான் இப்போது வருகிறான்.
அவன் புறப்படும்போது எப்பவும் அம்மா அப்பாவிற்கு அலைபேசியில் தகவல் சொல்லிக் கொண்டு தான் வருவான். இப்போதும் வரும்போதும் அவர்களுக்கு தகவல் கூறிக்கொண்டு தான் வந்தான். ஆனால் அவர்கள் வெளியூரில் விசேசத்திற்கு சென்று இருப்பதாக தகவல் சொன்னார்கள்.
ரெங்கன் அந்த இருட்டு வேளையில் மின்சாரம் இல்லாத தெருவில் நிலா வெளிச்சத்தில் வேகமாக நடந்துவந்து கொண்டிருந்தான். அப்போது நாய்கள் குரைக்கும் சத்தங்கள் இடையிடையே கேட்டுக் கொண்டிருந்தன!
அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ரெங்கன் வந்து கொண்டிருந்தான். அவன் ஒரு புளியமரத்தருகே நடந்து வரும் போது காற்று பலமாக வீசியதால் மரம் காற்றில் வேகமாக ஆடத்தொடங்கியது. ரெங்கனுக்கு அது சிலிர்ப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது!
இருந்தாலும் அவன் தன்னுடைய நடையின் வேகத்தை குறைக்கவில்லை! அந்த ஊர் கிராமத்தில் உள்ள வீடுகள் சின்னச் சின்ன வீடுகளாகும். சில இடங்களில் பெரிய வீடுகள் இருந்தன. அவனுடைய கைக்கடியாரத்தை பார்த்தான். மணி ஒரு மணிக்கு மேலே காட்டியது!
ரெங்கன் வரும்போது பெரிய ஆலமரம் அருகில் வரும் போது குளிர்ந்த காற்றின் அழுத்தத்தால் மரம் வேகமாக அசைந்து இலைகளை அவன்மேல் உதிர்த்தது. அப்போது அந்த நேரத்தில் யாரோ பலமாக இருமியது போல் அவன் காதுகளில் கேட்டது! அதுவும் அவனுக்கு அந்தநேரத்தில் வித்தியாசமாக உணர்ந்தான்!
சிறுது நேரங்கழித்து மீண்டும் அவன் பின்னால் யாரோ மறுபடியும் இருமிய சத்தம் கேட்டது! ரெங்கனுக்கு என்னமோ போல் இருந்தாலும் அவன் பிறந்த ஊர் என்பதால் மனதில் தைரியத்தை வரவழைத்து நடந்தான்!
அந்த இருள் கவ்விய நேரத்தில் அப்போது அவன் மீது யாரோ டார்ச் லைட்டை அடித்தபடி சற்று தள்ளி ஒர் உருவம் அதுவும் யார் என்று தெரியாதபடி ஒரு கம்பளி போர்வையை சுற்றிக்கொண்டும் பீடி புகையை ஊதிக்கொண்டும் நின்றிருந்ததை ரெங்கன் பார்த்தான்! ஆனால் அது யாரென்று தான் தெரியவில்லை!
அப்படியே அவன் அந்த இடத்தில் நின்று கொண்டு “யாரப்பா அது லைட்டை அடிக்கிறது?” என்று சத்தமாக கேட்க ஆனால் பதில் சொல்லாமல் அந்த உருவம் அங்கேயே நின்று கொண்டிருந்தது! ரெங்கனுக்கு ஒரே குழப்பம் ” என்னடா இது நிக்கிறது யாருன்னு கேட்டா பதிலே இல்லை! மறுபடியும் அவன் யாரப்பா நிக்குறது? பதில் சொல்லுப்பா!
நான் முத்துச்சாமி மகன் ரெங்கன் தாப்பா என்று சொல்லிக் கொண்டு கடும் இருட்டில் கண்களை துடைத்து அவனிடமிருந்த செல்போன் வெளிச்சத்தை அவனும் அந்த உருவத்தின் மீது அடித்து பார்த்தான்!
ஆனால் அந்த உருவம் அதே இடத்தில் கையில் டார்ச் லைட்டைவைத்துக் கொண்டு பதில் சொல்லாமல் மீண்டும் ரெங்கனின் முகத்தில் லைட்டை அடித்தபடி நின்றுகொண்டிருந்து!
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. டார்ச் லைட்டை அடிச்சி கிட்டே இருக்குறாங்க. ஆனா யாருன்னு கேட்டா சொல்ல மாட்டேங்கிறாங்க! ரெங்கனுக்கு அந்த நேரத்தில் பதட்டம் கூடியது! கூடவே பயம் வேறு .அப்போது காற்று பலமாக அடித்தது!
அப்போது ஒரு பெரிய சிரிப்பு சத்தம். அந்த மர்ம உருவத்திலிருந்தது வந்தது. “நல்லா மாட்டிக்கிட்டீயா! வாடா வா! நான் யாருன்னா கேட்குற? நான் தான்டா இந்த ஆலமரத்தில் போன மாசம் தூக்கு போட்டவன். இப்ப ஆவியா வந்து நிக்கிறேன். உன்னை பதம் பார்க்க வந்தேன்டா. நீ என்னை விட்டு தப்பிக்க முடியாது. உன் இரத்தத்தை உறியாம விடமாட்டேன்!
என்று அந்த மர்ம உருவம் கர்ண கொடூரக் குரலில் பேசியதும் ரெங்கன் அந்த நேரத்தில் அவனது முகமெல்லாம் வியர்த்தது! நெஞ்சம் படபடத்தது !
இருந்தாலும் அவன் மனம் தளரவில்லை. அது பேயே ஆனாலும் பரவாயில்லை. அதுவா? நாமாளா? என்று பார்த்துவிடுவோம்” உள்ளத்தில் தைரியமாக மனத்திண்மையுடன் இருந்தான்!
உடனே அவன் அசாத்தியமான உறுதியுடன் உடனே அவன் மின்னலாய் செயல்பட தொடங்கினான்! அந்த இருட்டிலும் கீழே கிடந்த பெரிய பெரிய கற்களை எடுத்து பலமாக அந்த உருவத்தின் மீது சரமாரியாக வீசினான்!
உடனே அந்த உருவம் மறைந்தது! ரெங்கன் அதே வேகத்தில் முரட்டுத்தனமான புயல் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடி சில இடங்களில் கீழேவிழுந்து எழுந்து துரிதமாக வீடு போய்சேர்ந்தான்! அப்போது நாய்கள் அவனை விரட்டி ஓடிவந்தன்!
மூச்சிறைக்க நின்று நிதானித்து வந்த நாய்களை திரும்பிப்பார்த்தான். கீழே குனிந்து ஒரு பிடி மண்ணை அள்ளி நாய்களைப் பார்த்து கை ஓங்கினான் . பயந்த பின்ங்கி ஓடிவிட்டன.
வியர்வை சிந்த வீட்டை அடைந்தான். வீட்டின் பூட்டை திறந்து படக்கென்று வீட்டினுள் சென்று கதவை சாத்தினான்!
மணி இரவு மூன்று. ஆலமரத்தடியில் மர்ம மனிதனிடம் உயிர் தப்பிய ரெங்கன் அவனுடைய அப்பா அம்மா வெளியூருக்கு போனதால் அவன் மட்டும் தனியாக வீட்டில் இருந்தான். ஒரே பதட்டத்துடன் அவனுக்கு தூக்கம்வரவில்லை!
சிறுது நேரத்திற்குள் தடைபட்ட மின்சாரம் வந்தது. ஆனால் திடீரென்று இடி மின்னலுடன் சோவென மழை பெய்யத் தொடங்கியது! ரெங்கன் அங்கும்மிங்கும் நடந்துகொண்டிருந்தவனுக்கு அவனையும் அறியாமல் தூக்கம் கண்களை சொருகியது !
அசந்து உறங்க ஆரம்பித்து விட்டான். ஆனால் நாய்கள் குரைக்கும் சத்தம் விடாமல் கேட்டுக்கொண்டிருந்தன!
அப்போது ரெங்கன் கண் அயர்ந்து துயிலும் போது திடீரென்று அவனுக்கு வீட்டுக்கதவு தட்டும் சத்தம் கேட்கத் தொடங்கியது! அந்த சத்தம் அவனது காதுகளை த்துளைத்தெடுத்தது!
உடனே எழுந்தான் “யாரது கதவை தட்டுறது? என்று கேட்கவும் பலமான சிரிப்பொலி சத்தம் வெளியே இருந்துகேட்டது!
உடனே ரெங்கன் மெதுவாக எழுந்து கதவருகே நின்று மறுபடியும் கதவு தட்டும் சத்தம் கேட்குமா என்று காதுகளை தீட்டினான். ஆனால் அப்போது வெளியே இருந்து கதவு தட்டும் ஓசைகேட்கவில்லை!
காற்று அடித்து மழை பெய்வதால் அந்த சத்தம்கூட இருக்கலாம் என்று தன் மனதை சமாதான படுத்தினான். மறுபடியும் படுக்கச்சென்றான் ரெங்கன் .
சிறுது நேரம் ஆனது.
ரெங்கன் படுத்து தூங்க ஆரம்பித்தான்.
மறுபடியும் பட பட என்று கதவு சத்தம் கேட்டது! மறுபடியும்அவனது மனம் திக் திக் என்று அடித்தது! அது அந்த ஆலமரத்து மர்ம உருவமோ என நினைக்க ஆரம்பித்தான்! எழுந்தான். தைரியத்தை வரவழைத்து படக்கென்று கதவை திறந்து வெளியே எட்டிபார்த்தான்! சுற்றிபார்வையை ஓட விட்டான்; நல்லமழை பெய்து கொண்டிருந்தது. எவரையும் காணோம்!
“என்னடா இது கதவு தட்டுற சத்தம் கேட்குது. ஆனா வெளியே யாரையும் காணோம்! ஒன்னும் புரியலையே என்று புலம்பியபடி மறுபடியும் படுக்கச்சென்றான். அவனையறியாமல் கண்ணயர்ந்து தூங்க ஆரம்பித்தான் சிறுது நேரம் சென்றது.
மீண்டும் கதவு தட்டும் சத்தம் இப்போது பலமாக கேட்டது! மறுபடியும் தொடர்ந்து சத்தம் கேட்க துள்ளி எழுந்தான் ரெங்கன்!
வேகமாக சென்று கதவைத் திறந்து பார்த்த போது அட என்ன அதிசயம்! வீட்டுவாசல் வெளியே அவனது பெற்றோர் வெளியூருக்கு சென்றவர்கள் வாசலில் பையுடன் சிரித்த முகத்துடன் நின்று கொண்டிருந்தனர்! அவனால் நம்பமுடியவில்லை.
ரெங்கன் மணியை பார்த்தான் மணி காலை ஐந்து மணி. விடியத்தொடங்கியது. அவனுடைய பயம் கலந்த கலவரமான முகத்தை பார்த்த பெற்றோர்,
“என்னப்பா ரெங்கா? ஊரில இருந்து எப்பவந்தே? ஏன் உன்னோட முகம் என்னமோ மாதிரி இருக்கு? கண்ணு சிவந்து இருக்கு! என்ன விசயம்பா ?
என்று அவர்கள் கேட்க ரெங்கன் நடந்த விசயத்தை ஒன்று விடாமல் சொன்னான்! ஆலமரத்தடியில் மர்மமான உருவம் மிரட்டியதையும் வீட்டுக்கதவை தட்டியதையும் கூற
இதைக் கேட்ட அவனது பெற்றோர் “ஊரை ஏமாத்துன அந்த ரெண்டு திருட்டு பசங்க உன்னையும் ஏமாத்திட்டாங்களா?
ரெங்கனுக்கு அவர்கள் இப்படி சொல்லவும் ஒன்றும் புரியாமல் விழித்தான்! என்னப்பா சொல்றீங்க? எனக்கேட்டான்.
“ஆமாம்பா அது பெரிய கதை இந்தஊர்ல ரெண்டு திருட்டு பசங்க இரவில திரியுறாங்கப்பா. யாராவது வெளியூர்ல இருந்து பணம் காசு கொண்டு வர்றவங்கள நோட்டம் பண்ணி மோப்பம் புடிச்சி இப்படி பேய்வேசம் போட்டு பயமுறுத்தி அவங்க கிட்டயிருக்கும் காசு பணங்களை பிடிங்கிட்டு ஓடிப்போவாங்க!
இந்த ஊர்க்காரங்களும் அவங்கள பிடிக்க ரெம்ப நாளா போராடித்தான் பாத்தாங்க. ஆனா அவங்க கையில் அந்த திருட்டு பையன்கள் இன்னும் சிக்காம இருக்காங்க !
நீ ஊர்ல இருந்து இங்க வர்ற விசயத்தை மெயின் ரோட்டுல இருக்குற டீ கடையில் என்னோட நண்பர்கிட்ட எதார்த்தமா பேசுவதை எப்படியோ கேட்டு உன்கிட்ட பணங்காசுகளை வழிப்பறி பண்ணலாமுன்னு பேய் வேசம் போட்டிருக்காங்கப்பா.
இந்த விசியம் ஊருக்கே தெரியும். ஆனா அவங்க கையில சிக்க மாட்டேன்கிறாங்க! ஊர்த் தலைவர் நாளைக்கு அந்த திருட்டு பசங்கள பிடிக்க ஏற்கனவே பெட்டிஷன் எழுதிவச்சிருக்காரு. போலீஷ் ஸ்டேசனுக்கு எல்லாரும் மொத்தமா போகலாமுன்னுமுடிவு பண்ணி இருக்கோம்பா.
நீ தைரியமா இருடா”! என்று ரெங்கனின் அப்பா கூறியதும் அவனுக்கு அப்போதுதான் நடந்த விசயங்கள் புரிய ஆரம்பித்தது! அப்போது அவனது மனதில் இருக்கும் பாரம் இறங்கியது.
” அப்பா! அந்த திருட்டு பேய்களை இல்லை ; மிருகங்களை சும்மா விடக்கூடாது. நாளைக்கு நானும் போஸீஸ் ஸ்டேசனுக்கு வர்றேன்பா ” என்றான்.
துணிவே துணையாகக் கொண்டால் துணிந்தவனுக்கு அச்சமில்லை என்பதை மனதில் எண்ணிக்கொண்டே ரெங்கன் நடந்தான்.