செய்திகள்

துணிவுடன் விவசாயப் பணிகளைத் தொடங்க முதலமைச்சர் எடப்பாடி வழிவகுத்துள்ளார்

நிதி நெருக்கடியிலும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஒட்டுமொத்த கடன் தள்ளுபடி

துணிவுடன் விவசாயப் பணிகளைத் தொடங்க முதலமைச்சர் எடப்பாடி வழிவகுத்துள்ளார்

விவசாய சங்க பிரதிநிதிகள் பாராட்டு

தமிழ்நாட்டில் உற்பத்தி பெருகும், விவசாயம் செழிக்கும்

சென்னை, பிப்.7

நெருக்கடியில்லாமல், கடன் சுமையில்லாமல் விவசாயிகள் துணிவுடன் விவசாயப் பணிகளைத் தொடங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிவகுத்துள்ளார் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த அறிவிப்பின் மூலம் ஏற்கனவே பெற்ற கடன் முழுவதும் தீர்ந்து விட்டது. எனவே, அடுத்த கடன் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்து விட்டது. இதனால் தமிழ்நாட்டில் உற்பத்தி பெருகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி யை விவசாய சங்கங்களின் தலைவர்கள் நேரில் சந்தித்து, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனை தள்ளுபடி செய்ததற்கு நன்றி தெரிவித்த பின், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

மறக்க முடியாத நிகழ்வு

தமிழ்நாடு காவேரி பாசன விவசாயிகள் நலச் சங்கம் பொதுச் செயலாளர் காவிரி எஸ்.ரெங்கநாதன் கூறியதாவது:

இன்றையதினம், காவேரி டெல்டா விவசாயிகளை ஊக்கப்படுத்தும் ஒரு சந்தோஷமான சமாச்சாரம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் வாங்கிய விவசாயிகள் அனைவருக்கும் ரூபாய் 12,110 கோடியை முதலமைச்சர் முயற்சியால் முழு கடனும் திருப்பி அளிக்கப்பட்டு, கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதற்கு நன்றி தெரிவிப்பதற்காக நாங்கள் வந்துள்ளோம். இதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் இதற்கு முன்னால் நடந்ததில்லை.

பயிர்க் கடனை இன்ஸ்யூரன்ஸ் நிவாரணம் என்று கொடுப்பார்களே யொழிய பயிர்க்கடனையே தள்ளுபடி பண்ணக்கூடிய அளவில் கொடுத்தது இதுதான் முதல் முறை. அதற்கு நன்றி சொல்லி, மீதியுள்ளதில் எவ்வளவு பிரச்சனைகள் உள்ளன என்பதையும் எடுத்துச் சொல்லி, அதற்கு இன்ஸ்யூரன்ஸிலிருந்து உடனடியாக இவர்கள் மூலமாக இதை வாங்கிக் கொடுத்து நஷ்டத்தை குறைக்க வேண்டும். முழுமையாக இல்லாவிட்டாலும், அதிகளவு நஷ்டத்தை தீர்மானம் பண்ணிக் கொடுக்க வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லியுள்ளோம்.

மறு உற்பத்திக்கான வாய்ப்பு உருவாக்கம்

விவசாயிகளுக்காக சிறந்த அளவில் முதலமைச்சர் செய்திருக்கிறார். இது மறக்க முடியாத ஒரு நிகழ்வு. முதல மைச்சர் சிறப்பாக செய்துள்ளதை, இந்தியாவிலேயே இவர்தான் இந்தளவிற்கு செய்துள்ளார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:

மாநில அரசுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் நிதி நெருக்கடி. அந்த நிதி நெருக்கடியிலும் எங்களுடைய கோரிக்கையை ஏற்று, தொடர்ந்து நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகள் வறட்சி பாதித்த மாவட்டமாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நிதி நெருக்கடியையும் பொருட்படுத்தாமல் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டுமென்ற முறையில் ரூபாய் 12,110 கோடி தள்ளுபடி என்று முதல்வர் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. அதற்கு உடனடியாக நன்றி சொல்ல வேண்டுமென்ற அடிப்படையில் நாங்கள் அவரைச் சந்தித்தோம்.

ஏற்கனவே இந்தக் கடன் தள்ளுபடிக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளை நபார்டு வங்கி வகுத்திருக்கிறது. மூன்று தவணை யாக மாநில அரசு தனது நிதி நெருக்கடிக்கு ஏற்ப பகிர்ந்தளிக்க முடியும். சட்டமன்றத்திலேயே அறிவித்ததனால், அதற்கான வழிகாட்டு முறைகளைப் பின்பற்றித்தான் முதலமைச்சர் அறிவித்திருப்பார். ஆகவே, சட்டத்திற்குட்பட்டுதான் இந்தத் தள்ளுபடியை அறிவித்துள்ளார்.

இயற்கை ஒத்துழைக்கும்போது, மறு உற்பத்திக்கான வாய்ப்பை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இந்தத் தள்ளுபடி மூலம், விவசாயிகளின் கடன் சுமையை ஒட்டுமொத்தமாக இறக்கியுள்ளனர். விவசாயிகள் கடன் சுமையில்லாமல், நெருக்கடியில்லாமல் அடுத்து துணிவுடன் விவசாயப் பணிகளைத் தொடங்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, நாங்கள் உடன் வந்துள்ளோம்.

நாங்கள் எந்த உத்தரவாதத்தையும் கேட்கவில்லை. நிதி நெருக்கடியான நேரத்தில், மிகப் பெரிய சுமை இருக்கும்போது, இந்த அறிவிப்பை வெளியிட்டது பாராட்டுக்குரியது என்ற முறையில், ஒரு விவசாய சங்கம் என்ற அடிப்படையில் நாங்கள் நன்றி தெரிவிக்க வந்தோம் என்றார்.

விவசாயிகளை காப்பாற்றியிருக்கிறார்

காவேரி டெல்டா விவசாயிகள் குழுமம் பொதுச் செயலாளர் வி.சத்தியநாராணன் கூறியதாவது:

ரூபாய் 12,110 கோடி நிவாரணம் என்னவென்று சொன்னால், கஜா, நிவர், புரெவி புயல்கள் வந்த பின்பு மத்தியக் குழுவினர் பார்வையிட்டு சென்றுவிட்டனர், அதன் பிறகும் பாதிப்பு வருகிறது. அந்த வகையில் மத்திய குழுவினர் நேற்று வரை வந்து சென்றுள்ளனர். அந்த வகையில், மத்திய அரசுக்கு, விவசாயிகளின் நஷ்டத்தை ஈடு செய்வதற்காக நிவாரணம் 100 சதம் முழுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கப் பெறுகிறது. இதில், 2 ஹெக்டேருக்குத்தான் கொடுக்கலாம் என்பது மத்திய அரசின் வழிகாட்டுதல்.

ஆனால் முதலமைச்சர், அதை ரிலாக்ஸ் செய்து, 5 ஹெக்டேர், அதற்கு மேற்கொண்டு உள்ளவர்களுக்கும் கொடுக்கலாம் என்பது மிகச் சிறப்பான விஷயம். விவசாயி என்ற முறையில் முதலமைச்சர் நிவாரணத்தை முழுமையாக அனைவருக்கும் வழங்கினார்.

இரண்டாவதாக, இந்தக் கடன் தள்ளுபடியிலும் சிறு, குறு விவசாயிகள் என்ற வகையில்தான் முற்காலத்தில் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். இதர விவசாயிகளுக்கு செய்யவில்லை. 2008 ம் ஆண்டிற்கு முன்னால் உள்ள நிலுவைக் கடன்களும் இன்றைக்கு நிறைவு பெற்றிருக்கிறது. இன்றைய நிலுவையிலுள்ள கூட்டுறவுக் கடன் அனைத்தும் தள்ளுபடி என்ற வகையிலான அறிவிப்பு என்பது மிகச் சிறப்பான அறிவிப்பு. இந்த நிதி நிலை கஷ்டத்திலும் விவசாயிகளை காப்பாற்றியிருக்கிறார்கள்.

கடனே வாங்க முடியாமல் இருந்த விவசாயிக்கு இன்று கடன் முழுவதும் தீர்ந்து விட்டது. எனவே, அடுத்த கடன் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்து விட்டது. கடன் பெறும்போது விவசாயத்தை செழிப்பாகச் செய்து முன்னேற்றம் வரும், தமிழ்நாட்டில் உற்பத்தி பெருகும், சிறப்பாக செழிக்கும். அதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

காவேரி டெல்டா விவசாயிகள் குழுமம் மாவட்ட தலைவர் என்.எச்.ராஜா மைதீன் கூறுகையில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ததற்கு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

எந்தவொரு ஆட்சியிலும் நடக்காதது

கொள்ளிடம், கீழணை பாசன விவசாயிகள் சங்கம் தலைவர் பி.விநாயகமூர்த்தி கூறுகையில்,

இந்தியாவிலேயே 5 ஆண்டுக ளுக்குள் 2 முறை விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு நடந்துள்ளது. முதலமைச்சர் வெள்ள நிவாரணமும் கொடுத்து, ரூபாய் 12,110 கோடி கடன் தள்ளுபடியும் கொடுத்துள்ளார். இது எந்தவொரு ஆட்சியிலும் நடக்காதது. அதனால், விவசாயிகளாகிய நாங்கள் மனப்பூர்வமாக முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நீர்ப் பாசனத் திட்டத்திலும் பெரிய வரலாறு படைத்துள்ளார். வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை சுதந்திரம் பெற்று இவர்தான் முதலில் அணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி 90 சதவிகிதம் வேலை நடந்துள்ளது. அந்த அடிப்படையில், உபரி நீரை சேர்ப்பதிலும் நம்முடைய முதலமைச்சர்தான் முதலிடத்தில் உள்ளார். அதற்காக விவசாயிகள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

தமிழக விவசாயிகள் நலச் சங்கம் தலைவர் ஜி.சேதுராமன் கூறுகையில்,

அந்தந்த ஆண்டே தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. ஒதுக்கப்பட்டாலும் விவசாயிகளினால் வாங்க முடியவில்லை. நாங்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் அந்தக் கடன்களை திரும்பச் செலுத்த முடியவில்லை. நாங்கள் முதலமைச்சர் திருவாரூர் வந்தபோது அவரிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஒட்டுமொத்த தள்ளுபடி இல்லையென்றால் ஒரு காலமும் விவசாயிகளினால் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் கடன் பெற வாய்ப்பே இருக்காது. நீங்கள் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்தாலும் அது புண்ணியம் தராது. அதனால் ஒட்டுமொத்தமாக கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக தள்ளுபடி செய்துள்ளார். அதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *