செய்திகள்

தீவுத்திடல் பொருட்காட்சிக்கு 38 நாளில் 6 லட்சம் பேர் வருகை

சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி தகவல்

சென்னை, பிப்.15-

கடந்த 38 நாட்களில் சென்னை தீவுத்திடல் பொருட்காட்சிக்கு 6 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

இதுகுறித்து சுற்றுலாத்துறை இயக்குனரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனருமான சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் 47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் பல்வேறு திட்டங்களின் செயல் மாதிரிகளுடன் அரசு துறைகளின் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர 125 சிறிய கடைகள் மற்றும் 60 தனியார் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பல்வேறு விளையாட்டுகளுடன் கூடிய பொழுதுபோக்கு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர் ரெயில், பனிக்கட்டி உலகம். மீன் காட்சியகம், பேய் வீடு, பறவைகள் காட்சி, 3டி தியேட்டர் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்காட்சி மூலமாக நேரடியாக சுமார் 5 ஆயிரம் பேரும், மறைமுகமாக சுமார் 25 ஆயிரம் பேரும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

கடந்த 13ந்தேதியுடன் (38 நாட்களில்) பொருட்காட்சிக்கு 4,89,669 பெரியவர்கள், 1,12,905 குழந்தைகள் என மொத்தம் 6 லட்சத்து 2 ஆயிரத்து 574 பேர் வந்துள்ளனர். 2019ம் ஆண்டில் 38 நாட்களில் 4.76 லட்சம் பேரும், 2020ம் ஆண்டில் 5.31 லட்சம் பேரும் பார்வையிட்டிருந்தனர்.

இந்த பொருட்காட்சியில் சுற்றுலாத்துறை அரங்கில் மெய்நிகர் காட்சி (விர்சுவல் ரியாலிட்டி) முறையில் யுனெஸ்கோவால் உலக புராதன சின்னங்களக அறிவிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரம் கடற்கரை கோவில், கங்கை கொண்ட சோழபுரம், நீலகிரி மலை ரெயில், தாராசுரம் கோவில் ஆகியவை படமாக்கப்பட்டுள்ளன.

மெய்நிகர் காட்சி (விர்சுவல் ரியாலிட்டி) என்ற சிறப்பு பிரத்யோக சாதனத்தின் மூலம் இந்த இடங்களின் புகைப்படங்கள் பார்வையாளர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டு வருகிறது.

70 நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சிக்கு பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்து தமிழ்நாடு அரசின் ஆக்கப்பூர்வ பணிகளையும், மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்படும் புதிய திட்டங்கள் மற்றும் சாதனைகளை தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *