செய்திகள்

தீவுத்திடலுக்கு அலைகடலென திரண்டு வந்த ரசிகர்கள், பொதுமக்கள்: விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி

* ‘சொக்கத்தங்கம் – அது விஜயகாந்த் தான்’ குஷ்பு

* ‘விஜயகாந்தின் மனித நேயத்துக்கு நான் ரசிகன்’ ஆர். பாத்திபன்

* ‘நான் பார்த்த வள்ளல்’ இசைஅமைப்பாளர் ஸ்ரீகாந்த்

சென்னை, டிச. 29–

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள், தொண்டர்கள் என அலைகடலென திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதேபோல அரசியல் பிரமுகர்களும், திரைப் பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தி விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

மாலை 4.45 மணிக்கு

இறுதி சடங்கு

விஜயகாந்தின் உடல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் இங்கிருந்து ஊர்வலமாக தேமுதிக தலைமை அலுவலகம் நோக்கி எடுத்து செல்லப்பட்டு இன்று மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.

தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 71.

பின்னர் அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. விஜயகாந்த் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அப்போது அறிவித்தார். நேற்று அவரது இல்லத்திற்கு சென்று ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

தே.மு.தி.க.கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் குவிந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இரவு வரை அங்கே பல்வேறு பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் விஜய், இசையமைப்பாளர் இளையராஜா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி பிரேமலதா விஜயாகாந்த்துக்கு ஆறுதல் கூறினார்கள். தென் மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும் ரசிகர்கள் வந்திருந்தனர்.

அஞ்சலி செலுத்த வந்த மக்களும், முக்கிய பிரமுகர்களும் கூட்ட நெரிசலில் சிக்கினர். இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக தமிழக அரசு முடிவெடுத்து, விஜயகாந்த் உடல் நேற்று இரவு தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், மக்கள் கூட்ட நெரிசலின்றி விஜயகாந்த்துக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

சென்னை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இன்று அதிகாலை முதலே அவரது ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் பேருந்து மற்றும் ரெயில் மூலம் சென்னை வந்து, விஜயகாந்த்துக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அங்கு நேர்த்தியாக வரிசைகள் அமைக்கப்பட்டு இருப்பதால் மக்கள் எந்த நெரிசலும் இல்லாமல் விரைவாக அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினார்கள்.

தேவா, ஸ்ரீகாந்த்

விஜயகாந்த் உடலுக்கு இசையமைப்பாளர் தேவா மகன் ஸ்ரீகாந்த் தேவாவுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், “நான் பார்த்த வள்ளல் விஜயகாந்த் தான். அற்புதமான மனிதர்” என்றார். இயக்குநர், நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனுவுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.

இயக்குநர் நடிகர் சுந்தர்.சி, அவரது மனைவி நடிகை குஷ்பு ஆகியோரும் அஞ்சலி செலுத்தி விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

மாமனிதர் என்றால் அது கேப்டன்தான் என்று சுந்தர்.சி-யும், சொக்கத்தக்கம் என்றால் அது விஜயகாந்த் என்று குஷ்புவும் புகழஞ்சலி செலுத்தினர். இயக்குநர், நடிகர் பார்த்திபன் பேசுகையில், “நான் விஜயகாந்த் என்ற நடிகரைவிட அவருடைய மனிதநேயத்துக்கு மிக்கப்பெரிய ரசிகன்” என்றார்.

ராதாரவி, வாகை சந்திரசேகர்

விஜயகாந்த் உடலுக்கு நடிகர்கள் ராதாரவி, வாகை சந்திரசேகர், இயக்குநர், நடிகர் ரமேஷ் கண்ணா, விஜய் ஆண்டனி, அருள்நிதி, ஸ்ரீகாந்த், லிவிங்ஸ்டன், ராம்கி, டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர், தாமு, இயக்குனர்கள் பா. ரஞ்சித், மிஷ்கின், வெற்றிமாறன், கனிமொழி எம்.பி, மேயர் பிரியா, அமைச்சர் ரகுபதி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர் எம்.பி. ஆகியோரும் அஞ்சலி செலுத்தி விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அஞ்சலி செலுத்திய பின்னர் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், விஜயகாந்த் நலமுடன் இருந்திருந்தால் தமிழக அரசியல் போக்கே மாறியிருக்கும் என்றார்.

ஓ.பி.எஸ்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்களுடன் பேசி அவர்களுக்கு ஆறுதல் கூறினர். அப்போது புகழேந்தி உடனிருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் “2011ல் ஜெயலலிதா முதல்வராக உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்த். ஈகை குணம் கொண்டவர். நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்” என்று அவரது பண்புகளை நினைவுகூர்ந்தார்.

தீவுத்திடலில் சென்னை மாநகராட்சி சார்பில் குடிநீர் வசதி, கழிவறை வசதி என பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தின் பல இடங்களில் விஜயகாந்த் படத்திற்கு, அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள்

முன்னதாக நேற்று விஜயகாந்த் உடலுக்கு முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், கோகுல இந்திரா, தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர்கள் நயினார் நாகேந்திரன், கரு.நாகராஜன், செயலாளர் கராத்தே தியாகராஜன், திருநாவுக்கரசர் எம்.பி., ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், புதியநீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ, சசிகலா, வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சிமுருகன் உள்பட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

திரைப்பட இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிக்குமார், பேரரசு, விக்ரமன், ஆர்.வி.உதயகுமார், நடிகர்கள் விஜயகுமார், கவுண்டமணி, டி.ஆர்.ராஜேந்தர், அர்ஜூன், தியாகு, மன்சூர் அலிகான், விஜய் சேதுபதி, விமல், நடிகைகள் கோவை சரளா, கவுதமி, ஆர்த்தி, கவிஞர் வைரமுத்து உள்பட திரை உலகினரும், பொதுமக்களும், தே.மு.தி.க. தொண்டர்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *