தமிழக அரசு உத்தரவு
சென்னை, ஜூன் 30–-
தீவிர நோய் தாக்கியுள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.12 ஆயிரம் உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் கூடுதல் தலைமைச்செயலாளர் முகமது நசிமுத்தின் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:–-
தமிழக சட்டசபையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 60 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, டயாலிசிஸ், புற்றுநோய், ஆஸ்துமா, சிலிக்கோசிஸ் மற்றும் பக்கவாதம் ஆகிய தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை மேற்கொண்டு வரும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தீவிர நோய் பாதிப்பு நலத்திட்ட உதவித்தொகையாக ஆண்டொன்றுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் திட்டம், முதற்கட்டமாக 3 ஆண்டுகளுக்கு அறிமுகப்படுத்தப்படும். இந்த நிதியுதவி 6 மாதங்களுக்கு ஒருமுறை விடுவிக்கப்படும். இந்தத் திட்டத்தினால் 1,500 பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று அமைச்சர் கூறினார்.
இதற்கான வழிமுறைகளை அரசு கூறியுள்ளது. அதன்படி, பயனடைய விரும்பும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்கள், பதிவு அட்டையை இணைத்து தொழிலாளர் உதவி ஆணையரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
சிவில் சர்ஜன் தரத்திற்கு மேற்பட்ட அரசு டாக்டரிடம் இருந்து மருத்துவ சான்று பெற்றிருக்க வேண்டும். தீவிர நோய்க்கான சிகிச்சை பெற்ற மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். தகுதியுள்ள பயனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.