பாலு அன்று அலுவலகத்தில் இருந்து வந்தவுடன் பானு அவனிடம் ஒரு பதற்றத்துடன் நமது மகள் கலா பள்ளியிலிருந்து வந்ததில் இருந்து படுத்தே இருக்கிறாள். சற்று காய்ச்சல் அடிக்கிறது. பயமாக உள்ளது என்றாள். பாலு உடனே கலா படுத்திருந்த அறைக்குச் சென்று பார்த்தான்.
துவண்டு போய் படுத்திருந்த கலாவைக் கண்டு கலக்கமடைந்தான். உடம்பு வெப்ப நிலை சற்று அதிகமாக இருந்ததைக் கண்டு உடனே தங்கள் குடும்ப மருத்துவருக்கு போன் செய்தான். அவர் கலாவை அழைத்து வரும்படி கூறியவுடன் பாலு, பானு மற்றும் கலா மருத்துவரைக் காண விரைந்தனர்.
மருத்துவர் கிளினிக்கில் கூட்டம் அதிகமாக இல்லாததால் பாலு உடனே மருத்துவரைப் பார்த்தான். அவர் கலாவை பரிசோதித்து விட்டு சில மருந்துகள் எழுதித் தந்து சரியாகி விடும் என்றார். கலா எந்தப் பள்ளியில் படிக்கிறாய் என்று கேட்க, அவள் பள்ளியின் பெயரைச் சொல்லவும் மருத்துவர் சில நிமிடங்கள் ஏதும் பேசாமல் இருந்து விட்டு ஒரு சிறு புன்னகையுடன் நீங்கள் செல்லலாம் என்றார்.
வீட்டிற்கு வந்த பாலு தன் மனைவியிடம் ஏதோ சொல்ல வந்த மருத்துவர் அதைச் சொல்லாமலே விட்டு விட்டாரே என்றதும் பானு எனக்கும் ஒரே குழப்பமாக உள்ளது என்றாள். கலா அடுத்த நாள் உடம்பு குணமாகி பள்ளி செல்கிறேன் என்று கூறும் போது மருத்துவர் போன் வந்தது. அவர் கலாவை இரண்டு நாட்களுக்கு பள்ளிக்கு அனுப்பாதீர்கள். நேற்றே சொல்ல மறந்து விட்டேன் என்றார்.
அடுத்து இரண்டு நாள் கழித்து மருத்துவரிடமிருந்து காலை 9 மணிக்கு போன் வந்தது. பாலு நீங்கள் உங்கள் மனைவியுடன் காலை 10.30 மணியளவில் பள்ளிக்கு வந்து விடுங்கள் என்றார். பாலுவும் சரியென்றி கூறினான். பானுவிடம் எதற்கு மருத்துவர் பள்ளிக்கு வரச் சொல்லுகிறார் என்று கேட்டார்.
அவள் சென்று தான் பார்ப்போமே என்றாள்.
பள்ளி வாசலில் மருத்துவருடன் நிறைய பெற்றோர்கள் நிற்பதைக் கண்ட பாலு ஏதோ முக்கியமான விஷயம் தான் நடக்கப் போகிறது என்று மனதுக்குள் நினைத்தான்.
சற்று நேரத்தில் தலைமையாசிரியர் அழைப்பு வர, எல்லோரும் உள்ளே சென்றனர். எல்லோரையும் வரவேற்ற தலைமையாசிரியர், மிகவும் அமைதியாக முதலில் எல்லோரும் காபி அருந்தி விட்டு பேசலாம் என்றார்.
காபி எல்லோருக்கும் தந்த பின், என்ன விஷயம் என்றவுடன் பெற்றோர்கள் எல்லோரும் மருத்துவர் வரச் சொன்னார் வந்தோம் என்று கோரசாகக் கூறினார்கள்.
மருத்துவர் தலைமையாசிரியரிடம் உங்கள் பள்ளியில் எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று கேட்டார். தலைமையாசிரியர், பள்ளியில் மாணவ மாணவியர், ஆசிரியர்கள், இதர பணியாளர்கள் உட்பட கிட்டத்தட்ட ஆயிரம் பேர் இருப்பார்கள் என்றார். படிக்கும் மாணவ மாணவியர் கிட்டத் தட்ட 900 பேருக்கு மேல் இருப்பார்கள் என்றார். மருத்துவர் உங்கள் பள்ளி உள் கட்டமைப்புகள் சரியாக உள்ளதா என்றதும் தலைமையாசிரியர் எதற்கு இந்தக் கேள்வியென கேட்டார்.
மருத்துவர் விஷயம் இருக்கிறது என்றார். மருத்துவர் நான் பள்ளியில் சில இடங்களை இவர்கள் சார்பில் காணலாமா எனக் கேட்டார்.
தலைமையாசிரியர் தாராளமாக என்று கூறி விட்டு, பிரச்னை ஒன்றுமில்லேயே என மருத்துவரைப் பார்த்துக் கேட்க அவர் சிரித்துக் கொண்டே அதெல்லாம் ஒன்றுமில்லை என்றார்.
மருத்துவர் மற்றும் சிலர் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்து விட்டு வந்து, தலைமையாசிரியரிடம் கடந்த இரண்டு மாதமாகவே உங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் கிட்டதட்ட ஐம்பது பேருக்கு மேல் எனது கிளினிக்கு வந்து வைத்தியம் பார்த்துக் கொண்டனர். எல்லோருக்கும் ஒரே விதமான பிரச்னை இருப்பது கண்டு நான் தான் அவர்கள் பெற்றோருடன் வந்துள்ளேன் என்றார். உங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருக்கு இயற்கை உபாயம் கழிக்க சரியான வசதியில்லை என்பதை அறிந்து கொண்டேன். இவ்வளவு பேருக்கு தகுந்த வசதியில்லை என்பதைக் கண்டேன் என்றார்.
இதனால் சிலர் காலை பள்ளி வந்தது முதல் பள்ளி முடிந்து போகும் வரை இயற்கை உபாயம் கழிப்பதில்லை. அதனால் அவர்களுக்கு சிறுநீரகப் பிரச்னை ஏற்படுகிறது என்றதும் பெற்றோர்கள் நாங்கள் வகுப்பு ஆசிரியரிடம் இதைப் பற்றி கூறியுள்ளோம் என்றார்கள்.
தலைமையாசிரியர் இதற்கு சரியான தீர்வை மேற்கொள்ளுகிறேன் என்றார்.
மருத்துவர் தன்னோடு வந்திருந்த ஒரு சுகாதார அதிகாரியை எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்து, அவர் கூறும் அறிவுரையைக் கேட்போம் என்றார்.
அந்த அதிகாரி அந்த கழிப்பறையில் சில நல்ல மாற்றங்கள் செய்தும் சற்று விரிவாக்கவும் செய்ய வேண்டுமென்றார். இடைவெளி விட்டு விட்டு சுத்தம் செய்வது மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் அந்த அதிகாரி பிள்ளைகளுக்கு ஓய்வு தரும் நேரத்தை வகுப்புகளிடையே சற்று மாற்றியமைத்து எல்லோரும் ஒரே நேரத்தில் கூடாத வண்ணம் செய்தால் நல்லது மற்றும் பிரச்னை வராது என்றார்.
உடனே தலைமையாசிரியர் அந்த அதிகாரியிடம் நீங்களே இதை மேற்கொண்டு முடித்துக் கொடுத்தால் நலம் என்றார்.
வந்திருந்த பெற்றோர்கள் நாங்களும் உதவி செய்கிறோம் என்றார்.
அதிகாரி புன்சிரிப்புடன் ஒப்புக் கொண்டார். மருத்துவர் தலைமையாசிரியிடம் எல்லாமே அரசாங்கம் செய்யும் என்று எதிர்பார்க்கக் கூடாது .
இந்த செலவை எனது தொண்டு நிறுவனம் மேற்கொள்ளும் என்றார்.
பாலு இதுவரை பிள்ளைகள் மதிப்பெண்ணிலேயே குறிக்கோளாக இருக்கும் நாம் பிள்ளைகள் உடல் நலத்திலும் அக்கறை கொள்ள வேண்டுமென்பதை மறைமுகமாக மருத்துவர் நமக்கு உணர்த்தியுள்ளார் என்றார்.
சரியான தீர்வு இதுநான் என்று அங்குள்ள பெற்றோர்கள் , தலைமையாசிரியர் ஆகியோர் மனமுவந்து மருத்துவரைப் பாராட்டினார்கள்.