சிறுகதை

தீர்ப்பு – ராஜா செல்லமுத்து

காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் கணவன் மனைவி சண்டை வந்து மனைவியின் உடம்பில் கணவன் மண்எண்ணை ஊற்றி நெருப்பு வைத்து விட்டதாக காவல் நிலையத்திற்கு புகார் வந்தது.

அந்த வீட்டுக்கு ஓடோடி சென்ற காவலர்கள் எரிந்து கொண்டிருந்த அந்த பெண்ணை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

அதிகம் எரிந்த நிலையில் இருந்த அந்தப் பெண்ணை உயிர் பிழைக்க மட்டுமே உத்தரவாதம் கொடுத்தார்கள் மருத்துவர்கள். அவள் உடல் முழுவதும் தீக்காயங்களால் நிரம்பி வழிந்தது; பிழைத்துக் கொண்டாள் என்ற ஒற்றை வார்த்தையில் தீ வைத்துக் கொண்ட தீபாவின் குடும்பத்திற்கு கொஞ்சம் தெம்பு வந்தது . ஆனால் அவள் பிழைத்து வந்தாலும் தோலில் பட்ட நெருப்பின் காயங்கள் ,சுருக்கங்கள் அழியப் போவதில்லை, அகோரமாகத்தான் இருப்பாள் என்று சாட்சி சொன்னார்கள் மருத்துவர்கள்.

உயிர் பற்றிய விசாரணை முடிந்த பிறகு கணவன் கைது செய்யப்பட்டார். வரதட்சணை கொடுமை, சொல் பேச்சு கேளாமை குடித்துவிட்டு வந்து கலவரம் செய்வது என்று பெண் வீட்டார் கணவன் மேல் புகார் மேல் புகார் செய்து கணவனை ஜெயிலுக்குள் தள்ளினார்கள்.

தனக்கும் மனைவி உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அடித்துச் சொன்னான் கணவன் .

ஆனால் அழுது புலம்பும் பெண்களின் வார்த்தையை யார் தான் கேட்க மாட்டார்கள், தீபாவின் பேச்சு சபை ஏறியது . வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. நீதிமன்றத்திலும் அழுது கொண்டே நடந்த விஷயங்களை சொன்னாள் தீபா .

கணவன் தான் மனைவியை வற்புறுத்தி அவளை தற்கொலைக்கு தூண்டினார் என்று பதிவு செய்யப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அது வேண்டாம் என்று சொன்னாள் மனைவி.

எதற்கு என்று புரியாத நீதிபதி சரி மனைவியே சொல்கிறாளே. அதனால் இனி அவள் இந்த பூமியில் இயல்பாக வாழ்வது சாத்தியம் இல்லை . அதனால் கணவனோடு சேர்ந்து வாழட்டும் என்று கணவனுக்கு தண்டனையை குறைத்து அவன் வைத்திருக்கும் சொத்தில் 25 சதவீதம் அந்த பெண்ணுக்கு இழப்பீடாக கொடுக்க வேண்டும், அது மட்டுமல்ல அந்தப் பெண் வாழ்வதற்கு தேவையான அத்தனை செலவுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்; இடையில் சண்டை சச்சரவுகள் வந்தால் ஜெயிலுக்கு வர நேரிடும் என்று எச்சரித்தது நீதிமன்றம் .

ஆனால் அந்தக் கணவனும் தன்னிடம் உள்ள 100% சொத்துக்களையும் மனைவியின் பெயர்களில் எழுதி வைப்பதாக உறுதி அளித்தான். இதை கேட்டு சந்தோசம் அடைந்த மனைவி தலைகால் புரியாமல் ஆடினாள். நீதிபதிக்கு வியப்பாக இருந்தது. செய்யாத குற்றத்திற்காக அவன் தண்டனை அனுபவிக்க போனதும் தண்டனையிலிருந்து தப்புவதற்காக இருக்கும் மொத்த சொத்துக்களையும் பெண்ணின் பெயருக்கு கொடுப்பது என்பது நீதிமன்றத்திற்கு ஒரு புதிராக இருந்தது. சொத்துக்களை கைப்பற்றிய நீதிமன்றம் கணவன் பெயரில் இருந்த மொத்த சொத்தையும் மனைவி பெயருக்கு மாற்றி அளித்து, பத்திரப்பதிவு செய்த போது அந்தப் பெண் கண்ணீர் விட்டாள்.

எதற்கென்று தெரியாத நீதிபதி அந்தப் பெண்ணை விசாரித்தார்

ஒரு உண்மையை சொல்லட்டுமா? என்றவள்,

என் கணவன் என் மேல மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கல. நானா தான் தீ வச்சுக்கிட்டேன். சொத்து என் பேர்ல வரணும் அப்படிங்குறதுக்கு அப்படி ஒரு நாடகம 25% என் மனசுல வருத்தத்தை உண்டாக்கிருச்சு .என் கணவனுக்கு நான் எவ்வளவு துரோகம் நினைச்சி இருக்கேன் ; என்னை மன்னிச்சிடுங்க; நான் பண்ணது தப்புன்னா ,நான் ஜெயில் தண்டனை ஏற்க தயார் என்று உத்தரவாதம் சொன்னாள் தீ வைத்துக் கொண்ட தீபா .

அவளின் நிலையை அறிந்து கொண்ட நீதிபதி அவள் சொன்ன வாக்கு மூலத்தை தன் காதுகளுக்கு உள்ளே அடைத்து, வைத்து வாய் வழியாக பேசி வெளியே விடாமல் இருந்தார்.

நீ பண்ணது ரொம்ப துரோகம் ; தப்பு : நல்ல கணவன் கிடைச்சிருக்கான். இருக்கிற வாழ்க்கையை நல்லபடியாக வாழப் பார். பெண்கள் அழுது பேசுனா உண்மை என்று நினைக்கும் இந்த உலகம் . ஆனா, அந்த அழுகைக்குள்ள ஆயிரம் பாெய் அடங்கி இருக்குதுன்னு அவங்க சொல்ற உண்மையில தான் வெளிவரும்.

எனக்கு முன்னாடியே தெரியும் .இந்த தப்பை நீ தான் பண்ணி இருக்கேன்னு.

ஆனா அது உன் வாயிலேருந்து வர வைக்கிறதுக்கு தான் நான் இதச் சாெல்லல.

நான் உங்க ரெண்டு பேருக்கும் தண்டனை தரப் போறது இல்ல. நீங்க சேர்ந்து வாழுங்க.இது கோர்ட்டுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஜெயிலுக்கும் இந்த விவரம் தெரியாது; நான் ஒரு நீதிபதியா இல்லாம உங்களுடைய தகப்பனா சொல்றேன். இனிமேலாவது ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு வாழுங்க. இதுதான் என்னுடைய தீர்ப்பு என்று இருவரையும் அனுப்பி வைத்தார் அந்த நீதிபதி.

தான் தீ வைத்துக் கொண்ட தீக்காயங்களை விட அவள் செய்த தவறு அவள் உடல் முழுவதும் எரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *