செய்திகள்

தீருமா உக்ரைன், இஸ்ரேல் சச்சரவுகள் ?

இந்தியாவின் ஜனநாயக சிந்தனைகள் உலக அமைதிக்கு நல்ல வழிகாட்டி


ஆர்.முத்துக்குமார்


மெல்ல உலக நாடுகள் உக்ரைனின் நடவடிக்கைகளை கண்டு அஞ்சி, தள்ளி நிற்க ஆரம்பித்து வருகிறார்கள். அமெரிக்கா உட்பட நாட்டோ நாடுகளின் தலைவர்கள் இனி உக்ரைன் விவகாரத்தில் மூக்கை நுழைத்தால் தங்கள் நாட்டு மக்களின் ஆதரவை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் தள்ளி நிற்க துவங்கி விட்டனர்.

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலின் சமீபத்து அத்தியாயம் துவங்கி ஒரு வருடமாகி விட்ட நிலையில் வல்லரசு நாடுகள் இச்சிக்கலில் இருந்து விலகி தள்ளி நிற்பதை உணர முடிகிறது.

ரஷ்யாவும் இந்தியாவும் ஆரம்பம் முதலே ஹமாஸ் மதவாதிகளுக்கோ அடக்குமுறை ஆட்சியாளர்கள் என்று மாறியிருக்கும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன தலைவர்களுக்கோ ஆதரவு தராமல் நடுநிலை என்று தள்ளி நிற்கின்றனர்.

அமெரிக்காவும் இதர நாட்டோ அணி நாடுகளும் ஆரம்பத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவு என்று பிரகடனப் படுத்தினாலும் அவர்கள் பிரஜைகள் இது தவறு என்று யோசிக்க ஆரம்பித்து இருக்கும் நிலையில் இஸ்ரேல் – பாலஸ்தீன சச்சரவு முட்கள் நிறைந்த புதைகுழிப் பாதை எனப் புரிந்து கொண்டு தள்ளி நிற்க துவங்கி விட்டனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை நடத்தியவுடன் இஸ்ரேல் பழிக்குப் பழி என்பது போல் மறு தாக்குதலை நடத்தியது, அதில் பல அப்பாவி சாமானியர்களும் சிறுவர்களும் மடிந்தனர்.

பாலஸ்தீனத்தை ஹமாஸ் பிடியில் இருந்து காப்பாற்றுகிறோம் என்று இஸ்ரேல் ஹமாஸ் மீது தாக்குதலை நடத்துவது பாலஸ்தீன மக்களுக்கும் பிடித்தமானதாக இல்லை. இதை பாலஸ்தீன தலைவர்கள் கிறிஸ்துவ மத பிரிவினைவாத சக்திகளின் சதியாக இருப்பதை வெளிச்சம் போட்டு காட்ட கிறிஸ்துவ மத தலைவர்கள் அறிவுரையை ஏற்று ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் இந்த விவகாரத்தில் வம்பு எதற்கு என தள்ளி நிற்கத் துவங்கி விட்டனர்.

அமெரிக்காவில் ஸ்பிக்கர் தேர்வு ஒரு வழியாக நடந்து முடிந்த நாளில் தனது முதல் ஆணை இஸ்ரேலுக்கு ஆதரவு என்று கூறிய மைக் ஜான்சனை ஒருமனதாக தேர்வு செய்தனர்.

மைக் ஜான்சன் தனது வெற்றியை தொடர்ந்து நன்றி உரை ஆற்றுகையில் உக்ரைன், இஸ்ரேல் கலவரப் பகுதியில் அமெரிக்கா தள்ளி நிற்காது என்றும் அவர்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு தேவை என்றும் வலியுறுத்தி பேசினார்.

சமீபத்தில் இஸ்ரேலுக்கு டாலர் 14 பில்லியன் நிதி ஆதரவை தர முன்மொழிந்தும் உள்ளார். இது தேவையா? என பல அமெரிக்க நிபுணர்களின் குரல் வலுக்க ஆரம்பித்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவு தொடருமா? என்பதும் கேள்விக்குறியாக மாறி வருகிறது.

உக்ரைனை கைவிட்டு வருவது போல் இஸ்ரேலையும் ஒரு கட்டத்தில் எந்த தீர்வையும் பெற முடியாது தவிக்க வைத்து விடும் அறிகுறிகள் தெரிகிறது. முன்பு ஆப்கான் விவகாரத்திலும் அமெரிக்கா தலைமையிலான ராணுவ கூட்டமைப்பில் இருந்த ஐரோப்பிய நாடுகளும் திடீர் என பின்வாங்கியதை அறிவோம்.

மொத்தத்தில் உக்ரைன் சிக்கலில் ரஷியாவை வீழ்த்த தந்த நிதி, ராணுவ உதவிகளால் எந்த ஒரு நல்ல தீர்வும் பெற முடியாத நிலையில் மெல்ல அமெரிக்காவும் நாட்டோ நாடுகளும் நழுவி வருகிறது.

இதே போன்று இஸ்ரேல் பகுதியிலும் போர் பதட்டத்தை ஏற்படுத்தி உலக வர்த்தகத்தை மேலும் நிலை குலைய செய்து விட்டு தள்ளி நிற்க தயாராகி வரும் அமெரிக்கா மீது உலக நாடுகளின் அதிருப்தி அதிகரித்து வரும் காட்சிகள் ஐ.நா. கூட்டங்களில் தென்பட ஆரம்பித்தும் வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி பைடனுக்கு மிகப் பெரிய சவால் தங்களது பொருளாதாரத்தை சீர்ப்படுத்தி நிலைநிறுத்தியாக வேண்டும்.

அதிரடியாக சீனா மீது கோபத்தை அள்ளி வீசி ‘விட்டேனா பார்’ என்ற அறைகூவலை விட்டு எதிரி நாடாக அறிவித்தது; பல நடவடிக்கைகளை எடுத்து வருவதில் ஐ நா கூட்டமைப்பிலும் உலக வர்த்தகத்திலும் பிளவுகள் ஏற்படுத்தி தங்களது தலைமையில் நடை போடும் அணியை ரஷியா சீனாவுக்கு அதாவது கம்யூனிசக் கொள்கை நாடுகளுக்கு எதிரான அணி என்று கூறி வருகிறது.

ஆனால் மின் சாதனப் பொருட்கள், ஆடைகள், வீட்டு உபயோக கருவிகள் எல்லாம் தரமானதாக இருப்பதுடன் குறைந்த விலையில் வாங்கி மகிழ சீனாவைத் தான் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வர்த்தக தொடர்புகளை சீனாவுடன் வலுவாகவே வைத்தும் இருக்கிறது!

நமது எல்லைப் பகுதியில் ஏற்பட்ட ‘லடாய்’யை தொடர்ந்து பிரதமர் மோடி சீனப் பொருட்கள் பலவற்றிற்கு தடை விதித்தார். இன்றும் தீபாவளி நேர பட்டாசுகளை சீனாவிடம் இருந்து வர அனுமதிப்பது கிடையாது. மக்களையும் மலிவு விலை சீன பொருட்களை வாங்காதே என அறிவுரை தந்தும் வருகிறார்.

கூடவே அதே பொருட்களை நம் மண்ணில் நாமே தயாரிக்க அறை கூவல் விட்டார். அதன் அங்கமாக ‘Make in India அதாவது இந்தியாவிலேயே தயாரிப்புக்கு மிகப் பெரிய அழைப்பை நிதி உதவியுடன் நடைமுறைப்படுத்தவும் துவங்கி விட்டார்.

ஆக சீனாவின் ஆதிக்கம் அவர்களது முதலீடுகளால் என்பது புரிய ஆரம்பித்து விட்டாலும் உலக நாடுகள் சீன தயாரிப்பை உதாசீனப்படுத்த முடியாமல் தவிப்பது தான் உண்மை!

இந்நிலையில் சீனா இஸ்ரேல் விவகாரத்தில் இதுவரை எந்த பிரிவுக்கு தனது ஆதரவுக் குரலை வெளிப்படுத்தாமல் தள்ளியே இருக்கிறது.

உலகம் இரண்டு பட்டால் சீனாவுக்கு எந்த லாபமும் கிடையாது. மாறாக வர்த்தக தேக்கமும் மந்த நிலையும் தான் தொடரும். அதன் தொடர்ச்சியாக ஏற்படும் பொருளாதார குழப்பத்திற்கு மாற்று மருந்தும் குறைந்த விலை சீன தயாரிப்புகள் என்று மாறி விடுவதால் சீனாவை எதிரிநாடாக அறிவித்து பொருளாதாரத் தடைகளை சீனா மீது அறிவித்தாலும் இன்றும் அமெரிக்கா தங்களது அன்றாட தேவைகளுக்கு சீனாவை தான் நம்பி இருக்கிறது.

ஆக இந்தியா புரிந்து கொள்ள வேண்டிய பாடம் உலகெங்கும் போர் பதட்டத்தை ஏற்படுத்தி வரும் அமெரிக்காவின் ஒரே குறிக்கோள் உலக வர்த்தகத்தை கட்டுப்படுத்துவது மட்டுமே!

இனி வரும் நாட்களில் இந்தியாவும் பொறுப்புள்ள நாடாக உயர இஸ்ரேல், உக்ரைன் பகுதிகளில் தங்களது நிலைபாட்டை சரிவர புரிந்து ஆதரவு நிலைகளை எடுக்க வேண்டும்.

வரலாற்று சிறப்பு மிக்க சுதந்திர போரில் வென்ற நாம் எப்படி கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரம் பெற்று இன்று வளரும் நாடாக உயர்ந்து வருகிறோமோ அதே ஜனநாயக முறையின் மீது நம்பிக்கை வைத்து கலவரப் பகுதிகளில் சிக்கி தவிக்கும் நாடுகளில் அமைதி திரும்ப முன் நின்று செயல்பட தயங்கக் கூடாது.

நாம் சக்தி மிகுந்த வளரும் நாடாக உயரத் துவங்கி வரும் நாளில் உலக அமைதியும் நமது பொறுப்புகளில் ஒன்று என்பதை மறந்து விடக்கூடாது.

உக்ரைன், இஸ்ரேல் சச்சரவுகள் நீங்கி உலகம் அமைதி பெற …

இந்தியாவின் ஜனநாயக சிந்தனைகள் – மக்களாட்சிச் செயல்பாடுகள் உலக நாடுகளுக்கு நல்ல வழிகாட்டும்; இது நிச்சயம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *