செய்திகள்

தீரஜ் விவகாரத்தில் ராகுல் காந்தி ஏன் மவுனமாக இருக்கிறார்: ஜெ.பி.நட்டா கேள்வி

புதுடெல்லி, டிச. 11–

தீரஜ் சாஹு விவகாரத்தில் ராகுல் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் ஏன் மவுனமாக இருக்கிறார்கள் என்று பாரதீய ஜனதா தலைவர் ஜெ.பி.நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு ஒடிசாவின் பிரபல மதுபான உற்பத்தி நிறுவனமான பல்தேவ் சாஹு குழுமத்தின் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அந்த நிறுவனம், நிறுவனத்துக்கு தொடர்புடைய நபர்களின் பிற அலுவலகங்கள், வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு வாரமாக சோதனை நடத்தினர்.

அதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் பிரசாத் சாஹு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கட்டுக்கட்டாக மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த, 300 கோடி ரூபாய் இதுவரை எண்ணப்பட்டுள்ளது. பணத்தை விரைவாக எண்ணி முடிக்க 40 யந்திரங்களும், 70க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டனர்.

பல்தேவ் சாஹு குழுமத்துக்கும் தீரஜ் பிரசாத் சாஹுவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே தீரஜ் பிரசாத் சாஹுவுக்கு எதிராக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் அக்கட்சியின் எம்பிக்கள் இன்று காலையில் போராட்டம் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாரதீய ஜனதா தலைவர் ஜெ.பி.நட்டா, “காங்கிரஸ் மற்றும் ஊழல் ஆகியவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹுவின் வீட்டு அலமாரி முழுவதும் கருப்பு பணம் உள்ளன. அதை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராகுல் மற்றும் சோனியா காந்தி இருவரும் தொடர்ந்து மத்திய அமைப்புகளை குற்றம் சுமத்தி வந்தனர். தற்போது இந்த விவகாரத்தில் அவர்கள் இருவரும் ஏன் மவுனமாக இருக்கின்றனர். தீரஜ் விவகாரத்தில் ராகுல் காந்தியின் கருத்தை அறிவதற்கு அனைவரும் ஆர்வமாக உள்ளனர். ஏழை மக்களின் பணம் எப்படி கொள்ளையடிக்கப்பட்டது என்பதை காங்கிரஸ் விளக்க வேண்டும். இந்த ஊழலுடன் தொடர்புடைய அனைவரையும் பா.ஜ.க. அரசு சிறையில் அடைக்கும்.” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *