செய்திகள்

தீப உற்சவம்: சரயு நதிக்கரையில் 25 லட்சம் தீப விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை படைத்த அயோத்தி

Makkal Kural Official

அயோத்தி, நவ.1–

தீப உற்சவத்தை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயில் மற்றும் சரயு நதிக்கரையில் 25 லட்சம் தீப விளக்குகளால் நேற்று அலங்கரிக்கப்பட்டன. மேலும், சரயு நதிக்கரையில் 1,121 பேர் ஆரத்தியும் எடுத்தனர். இவ்விரண்டும் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தது.

ராமர் வனவாசத்தை முடித்து விட்டு அயோத்தி திரும்புவதை , தீபாவளியாகவும், தீப உற்சவமாகவும் வட இந்தியாவில் 5 நாள் கொண்டாடப்படுகிறது. அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டபின், அங்கு முதல் முறையாக நடைபெறும் தீப உற்சவத்தை மிக பிரம்மாண்டமாக நடத்த உத்தர பிரதேச அரசு முடிவு செய்தது. இதற்காக ராமர் கோவில் மற்றும் சரயு நதிக்கரையின் 55 படித்துறைகளில் நேற்று 25 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி அலங்கரிக்கப்பட்டன. இதன் மூலம் இங்கு இதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட சாதனைகள் முறியடிக்கப்பட்டன. கடந்த ஆண்டு 22 லட்சம் தீப விளக்குகள் ஏற்றப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 25 லட்சத்து 12 ஆயிரத்து 585 லட்சம் தீப விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.

கின்னஸ் சாதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பை சேர்ந்த 30 பேர் குழுவினரும் இங்கு வந்திருந்தனர்.

கின்னஸ் நடுவர் பிரவின் படேல் மற்றும் ஆலோசகர் நிஷால் பரோட் ஆகியோர்

சாதனை முயற்சிகளை உறுதிப்படுத்தினர்.

அவர்கள் டிரோன்கள் மூலம் விளக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

காற்று மாசுவை குறைக்க கோவிலுக்கு வெளியே மெழுகு விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. விளக்கேற்றும் நிகழ்ச்சியில் 30,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

25 லட்சம் தீப விளக்குகள் ஒரேநேரத்தில் ஏற்றப்பட்டுள்ளதால் சரயு நதிக்கரை விளக்கு ஒளியில் ஜொலித்தது.

மேலும் சரயு நதிக்கரையில் 1,100 புரோகிதர்கள் ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சிக்கும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தீப உற்சவத்தை முன்னிட்டு சோபா யாத்ரா நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 6 நாடுகள் மற்றும் 16 இந்திய மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் இங்கு கலை நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

அயோத்தி தீப உற்சவத்தை முன்னிட்டு 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தீப உற்சவத்தை பார்வையிட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். இவர்கள் தீப உற்சவத்தின் முழு காட்சியையும் பார்வையிட ஆங்காங்கே எல்இடி திரைகளும் பொருத்தப்பட்டிருந்தன.

காசி, மதுராவும்

ஜொலிக்க வேண்டும்: யோகி

இந்த விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், 500 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி நாளில் ராமர் அவரது இல்லத்தில் இருக்கிறார். 500 ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் தற்போது தீபாவளிக்கு அயோத்தியில் வசிப்பதால் இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நிகழ்வாகும். நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047-க்குள் காசி மற்றும் மதுராவும் அயோத்தியைப் போல ஜொலிக்க வேண்டும். ராமர் கோவில் கட்டும் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ள இரட்டை இயந்திர அரசு, இப்போது அயோத்தி தன்னை நிரூபிக்கும் முறை வந்துள்ளதை நினைவில்கொள்ள வேண்டும்.

ராம ஜென்ம பூமி இயக்கத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த அனைத்து ஆன்மாக்களையும் நினைவுகூறும் இந்த தருணத்தில் அவர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன். அயோத்தி மண்ணில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற அவர்களது ஆசை, சபதம் நிறைவேறியுள்ளது. அயோத்திக்கு மீண்டும் ராமர் திரும்பி வந்துள்ளார் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *