செய்திகள்

தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

1 லட்சம் பேர் முன்பதிவு

சென்னை, நவ.8–

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய இதுவரை 1 லட்சம் பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் வெளியூரில் வசிப்பவர்கள் தீபாவளியை, சொந்த ஊரில் குடும்பத்துடன்

கொண்டாடுவதற்கு ஏதுவாக தமிழக அரசு சிறப்பு பஸ்களை அறிவித்தது.

கூட்ட நெரிசல் இல்லாமல் முன்பதிவு செய்து பயணிக்க ஏற்பாடு செய்து உள்ளது.

நாளை (9ந்தேதி) முதல் 11ந் தேதி வரை 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன.

வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 1,365 பஸ்கள் வீதம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 4,675 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு தயாராக உள்ளன.

சிறப்பு பஸ்களில் முன்பதிவு செய்து பயணம் செய்ய இதுவரையில் 1 லட்சம் பேருக்கு மேல் முன்பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் இருந்து மட்டும் செல்ல 80 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் 13-ந்தேதியும் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதால் வெளியூர் செல்வோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்து உள்ளது.

சென்னை கோயம்பேட்டில் நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக மேலும் 5 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சிறப்பு பஸ்கள் மாதவரம் புதிய பஸ் நிலையம், கே.கே. நகர் மாநகர பஸ் நிலையம், தாம்பரம் அண்ணா பஸ் நிலைய நிறுத்தம், பூந்தமல்லி விரைவுச்சாலை பஸ் நிறுத்தம் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையங்களில் நாளை இயக்கப்படுகின்றன. முன்பதிவு செய்த பயணிகள் அந்தந்த பஸ் நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் முக்கிய பஸ் நிலையங்களில் இருந்து கோயம்பேட்டிற்கு இணைப்பு பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுவரையில் 1500க்கும் மேற்பட்ட அரசு பஸ்களுக்கான முன்பதிவு நடந்து உள்ளது. முன்பதிவு செய்யாமல் கடைசி நேரத்தில் பயணம் செய்ய வருவோர்கள் நேராக பஸ்களில் பயணிக்கலாம். இந்த ஆண்டு வெளியூர் சொல்வோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அரசு பஸ்கள் தவிர ஆம்னி பஸ்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் பயணத்தை தொடருகிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *