சிறுகதை

தீபாவளி காதல்! –சிகாகோ சின்னஞ்சிறுகோபு

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலுக்கு அருகேதான் ராஜேந்திரனின் வீடு. ராஜேந்திரன் அந்த ஊரில் ஒரு மேல்நிலைப் பள்ளியில் பத்தாவது படித்து வந்தான். இப்போது கொரோனா பிரச்சனைக்குப் பிறகு சமீபத்தில்தான் பள்ளிக்கூடம் திறந்திருந்தார்கள்.

அவன் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த வீட்டுக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் புதிதாக யாரோ குடிவந்திருந்தார்கள். ஏதோ வங்கியில் வேலை பார்ப்பவராம். மாற்றலாகி இந்த ஊருக்கு வந்திருக்கிறார். அவர்களுக்கு ஒரு பெண்ணும் இருந்தாள். ஒரு பதினான்கு வயதுதான் இருக்கும் என்று தோன்றியது.

ராஜேந்திரனுக்கு அந்தப்பெண்ணைப் பார்த்ததும் அந்த வயதுக்கே உரிய ஒரு ஈர்ப்பு அவள் மீது ஏற்பட்டது. அவளும் நல்ல நிறத்துடன் மூக்கும் முழியுமாக குறுகுறுவென்று இருந்தாள். மான்குட்டி போல அவள் தெருவுக்கும் வீட்டுக்கும் துள்ளி ஓடுவதையும் அவள் கால்களிலிருந்த கொலுசுகளின் சத்தமும் அவளது ஜிமிக்களின் ஊஞ்சலாட்டமும் அவனது இள மனசை என்னவோ செய்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அவளை சாரங்கபாணி சுவாமி கோவிலில் ராஜேந்திரன் பார்த்தான். வீடு அருகில்தான் என்பதால் தனியேதான் வந்திருந்தாள். ராஜேந்திரன் அவளைப் பார்த்ததும் ஆர்வத்துடன் அவளிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.

“என் பெயர் ராஜேந்திரன். இங்கு பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நீங்க புதிதாக குடி வந்திருக்கிறீர்களே, அதுக்குப் பக்கத்து வீடுதான் என் வீடு. அது சரி, உன் பெயரென்ன?” என்றான்.

“உன்னைப் பார்த்திருக்கிறேன். என் பெயர் அமுதா. எட்டாவது படித்துக் கொண்டிருக்கிறேன். இந்த ஊரில் இனிதான் பள்ளியில் சேர வேண்டும்!” என்றாள்.

அவள் பேசுவதையே, அவள் முத்து பற்களை, கன்னத்தில் விழும் லேசான குழியை அந்தக் கருவண்டு கண்களை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ராஜேந்திரன். எல்லாம் டிவி, ஸ்மார்ட்போன் போன்ற மீடியாக்களின் தாக்கம்தான்!

அவள் சில வார்த்தைகள் பேசிவிட்டு கோவிலுக்குள் போய்விட்டாள். ஆனாலும் அவன் மனதில் அவள் இருந்தாள்.

அன்று தீபாவளி. ஆனால் காலையிலிருந்தே விட்டு விட்டு பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. ஆங்காங்கே வெடிகள் சத்தம் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. ஆனாலும் ராஜேந்திரனுக்கு ஏனோ இந்த தீபாவளியே கொஞ்சம் சுவாரஷ்யம் குறைவாக தெரிந்தது.

மழையினால் வாங்கி வைத்திருந்த வெடிகளையும் சரியாக வெடிக்க முடியவில்லை. பலகாரகளிலும் ஏனோ அந்தளவுக்கு நாட்டமில்லை. அவன் டிவி பக்கமும் திரும்பவில்லை!

‘என்ன பக்கத்து வீட்டு அமுதாவைப் பார்க்கவே முடியவில்லை’ என்று நினைத்தான்.

மனதில் அவளைப் பற்றி என்ன என்னவோ தோன்றிக் கொண்டிருந்தது. ஏதாவது கவிதை எழுதலாம் போலத் தோன்றியது.

ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்து எழுத ஆரம்பித்தவுடனேயே, அடுக்கடுக்காக வார்த்தைகள் வந்து விழுந்தன.

‘தீபாவளி வந்தது தீபாவளி. கொட்டும் மழையும் கூடவே வந்தது. நரகாசுரன் செத்ததுக்காக அதுவும் நல்லா அழுவுது. எண்ணெய் தேய்த்து குளித்த சீயக்காய் கண்ணில் எரியுது. புது சட்டையைப் போட்டா அது எங்கெங்கோ புடிக்குது. மைசூர்பாகை எடுத்து கடிச்சா அது பல்லைதான் உடைக்குது. கம்பி மத்தாப்பைக் கொளுத்தினால் அது கையிலேயே வெடிக்குது. ஆனைவெடி அதிர்வெடி யெல்லாம் புஸ்… புஸ்ஸென்று போகுது. அடுத்த வீட்டு அமுதாவே… நீ என் கண்ணில் பட வேண்டும். தீபாவளியின் உண்மை மகிழ்ச்சியை நீதான் எனக்குத் தர வேண்டும்!’ என்று எழுதி முடித்தான். அவன் கவிதை அவனுக்கு நன்றாக இருப்பதாகதான் தோன்றியது. கழுதைக்கும் காதல் வந்தால் அதுவும் சங்கீதம் பாடும் என்று சும்மாவா சொன்னார்கள்!

அவன் எழுதிய அந்தக் காகிதத்தை ஒரு ராக்கெட் போல மடித்தான். ‘ அவளை பார்க்கும்போது அவள் மீது வீசலாம். அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்’ என்று நினைத்துக் கொண்டே வீட்டின் வாசலுக்கு வந்தான். இந்த துணிச்சலெல்லாம் எப்படிதான் வருகிறதோ தெரியவில்லை!

ராஜேந்திரன் வீட்டு வாசலுக்கு வந்துப் பார்த்தபோது, அவன் நல்ல நேரமோ அல்லது கெட்ட நேரமோ அமுதா தெருவில் வீட்டு வாசலுக்கு அருகே நின்றுக் கொண்டிருந்தாள்.

ராஜேந்திரன் சுற்றும் முற்றும் பார்த்தான். அருகே வேறு யாருமில்லை என்றதும் அவனுக்கு ஒரு அசட்டுத் துணிச்சல் வந்தது.

அந்த கவிதை எழுதிய காகித ராக்கெட்டை அவளை நோக்கி வீசினான்.

அது அழகாக ‘விர்…’ ரென்று சென்று அவள் மீது மோதி கீழே விழுந்தது.

அமுதா கொஞ்சம் திடுக்கிட்டு, ராஜேந்திரனை திரும்பிப் பார்த்துவிட்டு அந்த காகிதத்தையெடுத்து அந்தக் கவிதையை படிக்க ஆரம்பித்தாள்.

ஏனோ இப்போதுதான் ராஜேந்திரனுக்கு கொஞ்சம் ‘திக்..திக்’ கென்றது. ஏதோ தப்பு செய்து விட்டோமோயென்று தோன்றியது.

அடுத்த நிமிடமே நேராக அமுதா, அந்த காகிதத்துடன் ராஜேந்திரனை நோக்கி வந்தாள்.

“டேய்…இந்த வேலையையெல்லாம் என்னிடம் வெச்சுக்கிட்டே மூஞ்சி முகரையையெல்லாம் பேத்து விடுவேன். எங்க அக்கா போலீஸில்தான் இருக்கா. சொன்னா நீ அவ்வளவுதான்! நேரா வந்து உன்னை அடிச்சு நொறுக்கிடுவா! இதுதான் உனக்கு முதலும் முடிவுமான எச்சரிக்கை! ஜாக்கிரதை!” என்று முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க சொல்லிவிட்டு அந்தக் கவிதை எழுதியிருந்த காகிதத்தையும் சுக்குநூறாக கிழித்து வீசிவிட்டு வேகமாக சென்றாள்.

ராஜேந்திரன் பயந்து பதறிப் போனான். அவனுக்கு பேச நா எழவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இந்த சம்பவத்தை பார்க்கவில்லை என்பதே அவனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

அப்போது எதிரே இரண்டு வீடு தள்ளி ஒருவர் கொளுத்திய யானைவெடி ஒன்று வெடிக்காமல் புஸ்ஸென்று கரும்புகையாக போனதை ராஜேந்திரன் பார்த்தான். அது தன்னுடைய தீபாவளி காதல்தான் என்பதை புரிந்துக் கொண்டான். அப்போது திடீரென்று இருட்டிக்கொண்டு வந்த வானம், மழையை கொட்ட ஆரம்பித்தது!

ராஜேந்திரனின் தீபாவளி காதல் கரைந்தோடிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *