செய்திகள்

தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

சென்னை, அக்.11-–

தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பதற்கு 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வருகிற 24-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கடந்த ஆண்டுகளை போன்று இந்த ஆண்டும் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே வேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் 23.10.2018 அன்று வெளியிடப்பட்ட தீர்ப்பில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும். வருங்காலத்தில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது.

மேலும், சுப்ரீம்கோர்ட் தீர்ப்பில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை அன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டை போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் ஆகிய துறைகளின் செயலாளர்கள், போலீஸ் டி.ஜி.பி., அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சுற்றுச்சூழல் துறை இயக்குனர், மாநகராட்சி கமிஷனர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *