செய்திகள்

தீபாவளிக்கு 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி, செப்.23-–

பேரியம் மற்றும் சரவெடி கொண்டு பட்டாசு தயாரிக்க அனுமதி கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்ற உத்தரவு ெதாடரும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை நேரத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது என்றும், எனவே பட்டாசு தயாரிக்க, விற்பனை செய்ய, பாதுகாத்து வைக்க தடை விதிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் அர்ஜுன் கோபால், கோபால் சங்கர நாராயணன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அதுதொடர்பாக மத்திய அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் விளக்கங்களை கேட்ட பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு பட்டாசு வெடிப்பதற்கு அதிரடியாக கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது.

இதன்படி பேரியம் என்கிற அலுமினிய பொருட்களுடன் கூடிய சரவெடி பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டதுடன், குறைந்த அளவிலான சத்தம் மற்றும் புகையை வெளியிடக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அதிக அளவில் அலுமினியம் சேர்க்கப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. ஆன்லைனில் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பேரியம் இல்லாத பட்டாசுகளை தயாரிப்பது சிரமம் என்றும், அது சரவெடியில் குறைவான அளவே உள்ளது என்றும், எனவே அதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் பட்டாசு தயாரிப்பாளர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அமர்வு நேற்று தீர்ப்பை வழங்கியது. அப்போது சரவெடி பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

நீதிபதிகள் மேலும் கூறியதாவது:

சரவெடி பட்டாசுகளில் பேரியம் வேதிப்பொருள் சேர்ப்பது அத்தியா வசியமாகிறது. அது சுற்றுச்சுழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்கிற பட்டாசு நிறுவனங்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அவர்களது மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

2 மணி நேரம் வெடிக்கலாம்

பேரியம், சரவெடி பட்டாசுகள் ஆகிய இரண்டில் மட்டுமே தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளோம். மூல வழக்கின் விசாரணை தொடர்ச்சியாக நடைபெறும். வரும் தீபாவளிக்கு சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிப்பதற்கு அனுமதிக்க முடியும்.

காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவில் 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *