செய்திகள்

தீபாவளிக்கு ‘டாஸ்மாக்’ கடைகளில் ரூ.430 கோடிக்கு மது விற்பனை

Makkal Kural Official

சென்னை, நவ.2

தமிழகத்தில் 30–ம் தேதியும், தீபாவளி தினத்தன்றும் ரூ.438 கோடியே 53 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 4,829 டாஸ்மாக் மதுக்கடைகளிலும் தினந்தோறும் சராசரியாக ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது. வார இறுதி நாட்களின் அது ரூ.200 கோடியாக அதிகரிக்கிறது. அதுவும் பண்டிகை நாட்கள் என்று வரும்போது, ஒரு நாள் விற்பனை ரூ.250 கோடியாக உயர்கிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 30–-ந் தேதி ரூ.202 கோடியே 59 லட்சத்துக்கும், தீபாவளி நாளான 31-ந்தேதி ரூ.235 கோடியே 94 லட்சத்துக்கும் என 2 நாட்களும் சேர்த்து மொத்தம் ரூ.438 கோடியே 53 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது. வழக்கம்போலவே இந்த ஆண்டும் பிராந்தியே அதிகம் விற்பனையாகியுள்ளது.

கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் 12–-ந் தேதி தீபாவளி பண்டிகை வந்தது. அன்றைய தினமும், முந்தைய நாளும் சேர்த்து ரூ.467 கோடியே 63 லட்சத்துக்கு மது விற்பனையானது. அதை வைத்து பார்க்கும்போது இந்த ஆண்டு ரூ.29 கோடியே 10 லட்சம் அளவுக்கு மது விற்பனை குறைந்துள்ளது.

இதற்கு, இந்த ஆண்டு மாத இறுதியில் தீபாவளி பண்டிகை வந்தது காரணமாக சொல்லப்படுகிறது. என்றாலும், டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் வேறு காரணம் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 1,500 குறைந்தபோதும், மனமகிழ் மன்றங்கள், ஓட்டல்களுடன் கூடிய பார்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. எனவே, அங்கு விற்பனை அதிகரித்துள்ளதால், டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறைந்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

பொதுவாக, பண்டிகை காலங்களில் மதுரை மண்டலத்தில்தான் மது விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு சென்னை மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது. அதாவது, கடந்த மாதம் 30-ந் தேதி சென்னை மண்டலத்தில் ரூ.47 கோடியே 16 லட்சத்துக்கும், 31-ந்தேதி ரூ.54 கோடியே 18 லட்சத்துக்கும் மது வகைகள் விற்பனையாகியுள்ளது. இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் கோவை மண்டலம் உள்ளது.

கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு (2022) தீபாவளி பண்டிகையின்போது 2 நாட்கள் ரூ.519 கோடியே 77 லட்சத்துக்கு மது விற்பனை ஆகியிருந்தது. ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை குறைந்து வருவதுபோல் தெரிந்தாலும், மனமகிழ் மன்றங்கள், ஓட்டல்களுடன் கூடிய பார்களின் எண்ணிக்கையும், அதில் விற்பனையும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், அரசுக்கு மது விற்பனை மூலம் வர வேண்டிய வருவாய் தனியாருக்கு செல்வதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், தீபாவளி மற்றும் அதற்கு அடுத்த நாள் அரசு விடுமுறை என்பதால், டாஸ்மாக் அலுவலகங்கள் செயல்படவில்லை. இதனால், மது விற்பனை விபரம் குறித்த தகவல், முழுதுமாக கிடைக்கவில்லை. எனினும், மது வகை அனுப்பியது, ஊழியர்களிடம் கிடைத்த தகவல் அடிப்படையில், ரூ.438 கோடியே 53 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. தீபாவளி தினத்தில், பிரீமியம் மது விற்பனை, 30 சதவீதமாகவும்; நடுத்தர வகை, 20 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார் .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *