அன்று, தீபாவளி முதல் நாள் இரவு.பட்… பட்… பட படவென வெடிக்கும் வெடிச் சத்தங்கள். சர் சர்ரென வானில் பறந்து வண்ண வெளிச்சங்களை வானவில்லாய் வரையும் பூந்தொட்டிகள் என்று வெளிச்ச வெடிகளால் நிறைந்திருந்தது, இருண்ட வானம். திரும்பிய திசையெங்கும் வெடிச் சத்தம். வண்ணங்களை அப்பி வானில் வரைந்து சென்றது ஒளிக் கோடுகள்.
இரவு முழுவதும் தெருவுக்குத் தெரு தீபங்களின் திருவிழாவாக இருந்தது ,அந்தத் தீபாவளி முன் இரவு.லட்சம் வாலா பட்டாசுகள் முதல் பாம்பு மாத்திரைகள் வரை தீபாவளிக்கு உற்பத்தி செய்யப்பட்ட தீபாவளி வெடிகள் வெடித்துக் காட்டி நிரூபித்துக் கொண்டிருந்தன.
“இந்த வருசம் தீபாவளி ரொம்ப நல்லா இருக்கு. விதவிதமான வித்தியாசமான பட்டாசுகள். எத்தனையோ விதமான வெடிகள். எல்லாமே சிறப்பு “
என்று பேசிக் கொண்டனர் மக்கள்.
“ஆமா, இன்னைக்கு ஊர் ,உலகம் எல்லாம் சந்தோசமா இருக்காங்க. வருசத்தில ஒரு நாள் வர்ற இந்த தீபாவளிய ரொம்ப சரியா விமரிசையா கொண்டாடணும்”
என்று எல்லா மக்களும் பேசிக் கொண்டார்கள். அந்த இருண்ட இரவை எல்லாத் திசைகளும் வெளிச்சமாக்கினாலும் சதீஷ , சந்தோஷ், விருத்திகா மற்றும் சிலர் வீடுகள் மட்டும் இருட்டில் கிடந்தன.
“அதுக்குள்ள இப்பிடி ஆயிருக்கக் கூடாது. எவ்வளவு கனவுகள், எத்தனை உற்சாகங்கள், எத்தனை ஆசைகள் அத்தனையும் போச்சே ..எதக் கொண்டு இதை மீட்டெடுக்கிறது ? இத மறக்கிறது ரொம்ப கஷ்டம் “
என்று உடைந்து போய் பேசினார் சண்முகம்.
” ம் ” ” இது ரொம்ப கொடுமைங்க”
” எல்லாம் விதி. நாம ஒன்னு நெனச்சா தெய்வம் ஒன்னு நினைக்குது.”
“யாரோ சந்தோசமா இருக்க. யாருங்க நஷ்டப்படுறது ?”
” பணம்….தேவை… வாழ்க்கை… இது எல்லாம் தான ஒரு மனுசன எந்த வேலன்னாலும் செய்யச் சொல்லுது “
” ஆமா ” ” அது சரி தான் ஆனா, இது உசுர பணயம் வச்சுச் செய்ற வேல “
” ம். ஆபத்துன்னு தெரிஞ்சே,வயித்துப் பிழைப்புக்காகச் செய்ற வேல. இதுல பிரச்சினைகள் நிறைய இருக்கு “
” எஸ்.. இந்த சென்ஸ்டிவ்வான விசயத்த எப்படி ஹேண்டில் பண்றது? அவங்களோட பேரண்ட்ஸ் வந்தா, நாம என்ன சொல்லித் தேற்ற முடியும் ? இந்த தீபங்களின் திருவிழாவில இருட்ட வெரட்டி, வெளிச்சத்தக் கொண்டு வார விழாவில் தீமையைத் துரத்தி நன்மையைச் சேக்கிற விழாவில இவங்க வீட்டுல மட்டும் இப்படி ஆயிருச்சு” ” என்ன செய்றதுன்னு தெரியல”
” ஊர் உலகமெல்லாம் உற்சாகமா இருக்கிற இந்த நேரத்தில நாம ஒன்னு செய்யலாமா ? ” என்றார் சண்முகம்
” நீங்க சொன்னா சரியா தானிருக்கும் ” ” என்னென்னு சொல்லுங்க ” என்று கதிர் கேட்க
” இந்தத் தீபாவளித் திருநாள்ல எல்லாரும் சந்தோசமா , வெடி வெடிச்சு மகிழ்ச்சியா இருக்காங்க. ஆனா, சதீஷ் , சந்தோஷ், விருத்திகா குடும்பங்கள் மட்டும் தான் இருட்டுல இருக்காங்க. அவங்கள போய் பாத்திட்டு வருவமா?” என்று சண்முகம் சொல்ல, இருவரும் கிளம்பினார்கள்.
ஊரே வெளிச்ச வெள்ளத்தில் மிதந்து கிடந்த போது, சில வீடுகள் மட்டும் இருட்டில் மிதந்தன. சோகமே உருவாக அமர்ந்திருந்த அவர்கள் வீட்டிற்குள் சண்முகமும் கதிரும் நுழைந்தனர். இவர்களைப் பார்த்ததும் வெடித்துக் கிளம்பிய வேதனையை கண்ணீராய் வெளிப்படுத்தினர் மொத்தக் குடும்பத்தினரும்
” மூணு குடும்பங்களும் ஒண்ணா தான் இருக்கீங்களா ?”
” ஆமாங்க . இன்னைக்கு எல்லாரும் ஒண்ணு சேந்திருக்கோம். இத எப்படிங்க மறக்க முடியும்? இந்த விஷயத்துக்கு தான எங்க புள்ளைக உசுரு போச்சு. ஊரே சந்தோஷமா இருக்கும் போது, எங்கள துக்கத்தில விட்டுட்டுப் போயிட்டாங்களே? இத விதின்னு சொல்லறதா? இல்ல சதின்னு சொல்றதா? இத எப்படிங்க நாங்க மறக்க முடியும்? ” என்று மொத்தக் குடும்பமும் குமுற
” சரிங்க, ஆனது ஆயிப்போச்சு. இனி போனது திரும்பி வரப் போறதில்ல. மறந்திருங்க “
” எப்படிங்க மறக்க முடியும்? இந்த உலகம் சந்தோசமா இருக்க, இவங்க உயிர்கள் போயிருச்சே!
” இதுக்கு நாங்க என்ன பதில் சொல்றதுன்னு தெரியல ? எங்கள மன்னிச்சிடுங்க “
என்று தாங்கள் கொண்டு வந்திருந்த பட்டாசுப் பெட்டிகளை அவர்கள் குடும்பத்தினரிடம் கொடுத்தனர் சண்முகமும் கதிரும்
” இது என்ன ? ” என்று ஆவலுடன் கேட்டனர் குடும்பத்தினர்.
” எங்கள நீங்க மன்னிக்கணும். நாங்க தான் பட்டாசுத் தொழிற்சாலை நடத்துற முதலாளிங்க. அன்னைக்கு பட்டாசுத் தொழிற்சாலையில ஏற்பட்ட தீ விபத்தில தான் சதிஷ் , சந்தோஷ், விருத்திகான்னு நிறையப் பேர் பட்டாசு வெடிச்சுச் சிதறி செத்துப் போயிட்டாங்க. அவங்க சாகுறதுக்கு முன்னாடி பேக் பண்ணுன பட்டாசுப் பெட்டிகள் தான் இது” இத நாங்க வேற எடத்தில வஞ்சிருந்ததால, இந்த பெட்டிகள் தீயில எரியல என்று அவர்கள் சொன்ன போது,
” ஐயோ … எம் புள்ளைக ” என்று மூன்று பேரின் குடும்பத்தினரும் அந்தப் பட்டாசுப் பெட்டிகளைக் கட்டிப் பிடித்து அழ ஆரம்பித்தார்கள். இதைப் பார்த்த சண்முகத்திற்கும் கதிருக்கும் என்னவோ போலானது.
” சரி, நாங்க வாரோம் ” என்று சண்முகமும் கதிரும் கிளம்பினார்கள்.
விதவிதமான பட்டாசுககள், கலர் கலராய் மத்தாப்புகள் வெடித்துச் சந்தோசப்பட்டுக் கொண்டிருந்தார்கள் மக்கள்.
சதிஷ், சந்தோஷ், விருத்திகா மற்றும் சில குடும்பத்தினர்கள் பட்டாசுப் பெட்டிகளைப் பிடித்துக் கதறி அழுது கொண்டிருந்தனர்.
பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து இறந்து போனவர்களின் எண்ணங்கள், ஆசைகள், கனவுகள், கற்பனைகள், விருப்பங்கள் எல்லாம் வானில் வண்ண வண்ணமாய் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தன.
![]()





