செய்திகள்

தி.மு.க.வை 10 ஆண்டு காலம் வனவாசம் அனுப்பியும் இன்னும் திருந்தவில்லையே?

30 ஆண்டு காலம் அண்ணா தி.மு.க.வின் சிறப்பான ஆட்சி

தி.மு.க.வை 10 ஆண்டு காலம் வனவாசம் அனுப்பியும் இன்னும் திருந்தவில்லையே?

எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

விழுப்புரம், மார்ச் 21

தி.மு.க.வை மக்கள் 10 ஆண்டு காலம் வனவாசம் அனுப்பியும் இன்னும் அவர்கள் திருந்தவில்லையே என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (20 ந் தேதி) விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது: –

அண்ணா தி.மு.க. தலைமையிலே அமைக்கப்பட்ட கூட்டணி வலிமையான கூட்டணி, வெற்றி கூட்டணி. நமது வெற்றி வேட்பாளர் அருமை சகோதரர் சி.வி. சண்முகத்துக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். அவர் இந்த தொகுதியிலே இரண்டு முறை வென்று சிறப்பான திட்டங்களை நிறைவேற்றித்தந்துள்ளார். நீங்கள் வைத்த பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றி, இந்த தொகுதியில் உள்ள வாக்களர்களிடம் கொடுத்த உறுதிமொழியை காப்பாற்றியுள்ளார். அருமை சகோதரர் சி.வி. சண்முகம் அனைவரிடத்திலும் இனிமையாக பழகக்கூடியவர்.

தி.மு.க. வனவாசம்

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தோல்வி பயத்தில் பிதற்றிக்கொண்டிருக்கிறார். என்ன பேசுவது என்றே அவருக்கு தெரியவில்லை. அண்ணா தி.மு.க.வை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தோற்றுவித்து 10½ ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியினை தந்தார். அம்மா 15½ ஆண்டுகாலம் நல்லாட்சியை தந்தார். அந்த இருபெரும் தலைவர்கள் வழியில் வந்த அம்மாவின் அரசு சிறப்பான் ஆட்சியை தந்து கொண்டிருக்கிறது. ஆக 30 அண்டுகாலம் சிறப்பான ஆட்சியினை அண்ணா தி.மு.க தந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தை அதிக காலம் ஆண்ட ஒரே கட்சி அண்ணா தி.மு.க. தான். தி.மு.க.வை மக்கள் 10 ஆண்டுகாலம் வனவாசம் அனுப்பியும், திருந்தவில்லை. இந்த தேர்தலே தி.மு.க.வின் இறுதித்தேர்தலாக இருக்க வேண்டும்.

வாரிசு அரசியல் என்றால் அந்த கட்சிக்கு மீண்டும், மீண்டும் தங்கள் குடும்பத்தில் இருப்பவர்களே தலைவராவதுதான் வாரிசு அரசியல். அண்ணா தி.மு.க.வில் அப்படி அல்ல. சாதாரண தொண்டனுக்கும் பெரிய பதவி கிடைக்கும். தி.மு.க. அப்படி அல்ல. கருணாநிதி, அதன்பிறகு ஸ்டாலின், தற்போது உதயநிதி முளைத்து விட்டார். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தல் இந்த தேர்தல்.

பொய் பேசும் ஸ்டாலின்

ஸ்டாலின் கன்னியாகுமரியில் பேசி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி சொந்தகாரருக்கு டெண்டர் கொடுத்து விட்டாராம். இதென்ன கடையில் விற்கும் பொருளா, பொட்டலம் கட்டி கொடுக்க. தி.மு.க ஆட்சியில் செய்திருக்கலாம் இதுபோல். ஆனால் அண்ணா தி.மு.க. ஆட்சியில் அல்ல. இ -டெண்டர் விடப்படுகிறது. உலகத்தில் எந்த மூளையில் இருந்து வேண்டுமானாலும் பங்கு பெறலாம். தனிப்பட்ட முறையில், யாருக்கும் எந்த டெண்டரும் விட முடியாது.

இதே ஸ்டாலின் 8 டெண்டரை தன் சொந்தகாரருக்கு வழங்கி உள்ளார். அதுவும் சிங்கிள் டெண்டராக கொடுத்துள்ளார். நீங்கள் பேசி நீங்களே மாட்டிக்கொள்கிறீர்கள். நாங்கள் கொடுப்பது இ- டெண்டர். டெண்டர் திறக்கும் வரை யார் பங்குபெற்றுள்ளார்கள் என்று தெரியாது. நீங்கள் கொடுத்ததோ, செட்டியூல் பாரம், யாருக்கு கொடுத்தார்களோ அவர்கள் மட்டுமே டெண்டரில் பங்கு பெற முடியும். இதில் எந்த டெண்டரில் ஊழல் நடக்கும். நீங்கள் கொடுத்ததிலா?, இல்லை நாங்கள் கொடுத்ததிலா? ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய். பொய்யாவது சரியாக பேசிப்பழகுங்கள் ஸ்டாலினே. இந்திய நாட்டிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசாங்கம் தி.மு.க. அரசாங்கம் தான். கருணாநிதி எப்பெழுது முதலமைச்சர் ஆனாரோ அப்போதே ஊழல் பிறந்துவிட்டது. ஊழல் என்று ஒன்று பிறந்ததே கருணாநிதி முதலமைச்சராக ஆன பிறகு தான். அந்த ஊழல் பரவி பரவி தி.மு.க.வினருக்கு ஒரு வியாதியாக ஒட்டிக் கொண்டது. ஸ்டாலினுக்கு ஊழல் செய்து செய்து பழக்கமாகிவிட்டது. அதனால் தான் அவர் எங்கு சென்றாலும் அண்ணா தி.மு.க. ஊழல் செய்கின்றது என்று கூறுகிறார். கிராமத்தில் சொல்வார்கள், தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்று. அதனால் தி.மு.க.வினரோடு ஊழல் கடைசி வரை இருக்கும்.

உங்கள் அமைச்சர் சி.வி. சண்முகம் விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய சட்டக் கல்லூரி வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதன்படி மிகப் பிரம்மாண்டமான சட்டக் கல்லூரி கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்மை சட்டக்கல்லூரியாக விழுப்புரம் சட்டக் கல்லூரி திகழ்கிறது. விழுப்புரத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பெயரில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. 253 கோடி ரூபாய் செலவில் விழுப்புரம் நகராட்சி பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துவங்கப்பட்டுவிட்டது. விழுப்புரம் மாவட்டம், பழவனூர் கிராமத்தில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

பருவ காலங்களில் பொழிகின்ற மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது. வீணாகின்ற அந்த நீரை தடுத்து, தேக்கி, நிலத்தடி நீரை உயர்த்திட வேளாண் பெருமக்களுக்கு கொடுக்கின்ற திட்டம் தடுப்பணை திட்டம். விழுப்புரம் மாவட்டம், கோழியனூர் வாய்க்காலை சீரமைக்க 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

விழுப்புரம் நகராட்சி நூற்றாண்டு விழா கண்ட நகராட்சி. அதற்கு சிறப்பு செய்கின்ற விதமாக, விழுப்புரம் நகராட்சியின் உட்கட்டமைப்பு பணிகளுக்காக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல பணிகள் நடைபெற்று வருகிறது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் நகர பகுதிகளுக்கு மட்டும் தான் செயல்படுத்தி வந்தோம். அருமை சகோதரர் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் மற்றும் விழுப்புரம் சுற்றியுள்ள கிராமங்களுக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு நானே நேரில் வந்து அடிக்கல் நாட்டினேன். இத்தகைய அற்புதமான திட்டங்களை விழுப்புரம் மாவட்டத்திற்கு கொண்டு வந்த சி.வி. சண்முகத்துக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சாதி, மத சண்டைகள் இல்லாமல் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த நிலை தொடர நம்முடைய வெற்றி வேட்பாளர் சி.வி. சண்முகத்துக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *