மோடிக்கு டி.ஆர்.பாலு பதில்
சென்னை, பிப்.29–-
தி.மு.க.வை இல்லாமல் ஆக்கி விடுவோம் என கூறியவர்கள் வரலாற்றில் காணாமல் போய் விட்டார்கள் என்று பிரதமர் மோடி சவாலுக்கு டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-– அரசு முறை பயணமாகத் தமிழ்நாட்டுக்கு வந்து, அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு, தான் பிரதமர் என்பதையே மறந்து, அரசியல் அவதூறுகளை அள்ளி இறைத்துவிட்டுப் போயிருக்கிறார் பிரதமர் மோடி.
திருப்பூர் கூட்டத்தில் ஜெயலலிதாவை வானளாவப் புகழ்ந்தும், திருநெல்வேலி கூட்டத்தில் தி.மு.க.வைக் கடுமையாக விமர்சித்தும் பேசிவிட்டுப் போயிருக்கிறார் பிரதமர்.
2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ‘ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாட்டில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த லஞ்சத்தினால் தமிழ்நாடே முற்றிலும் பாதித்துப் போய் இருக்கிறது’ என ஓசூரில் நின்று கடுமையாக விமர்சித்த மோடிதான், இன்றைக்கு பல்லடத்தில் பல்டி அடித்திருக்கிறார்.
இந்தியா கூட்டணிக்கு
அடித்தளம் அமைத்தவர் ஸ்டாலின்
தனக்கு எதிரியே இல்லை என்ற இறுமாப்பில் இருந்த பாரதீய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் இணைத்து ‘இந்தியா’ கூட்டணி அமைக்க அடித்தளம் அமைத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பது தான் பிரதமர் மோடியின் கோபத்துக்கு காரணம்.
பின்னலாடை வர்த்தகச் சந்தைக்கான வாசலை வங்கதேசத்துக்குத் திறந்துவிட்டு, திருப்பூரை வஞ்சித்த மோடியால், கொங்கு மண்ணின் பெருமையை எப்படிப் பேச முடிகிறது?. மதுரையில் ஒரே ஒரு எய்ம்ஸ் கூட திறக்க முடியாத உங்களால் மதுரைக்கு எப்படி வர முடிகிறது?
பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பைசாவைக்கூடத் தமிழ்நாட்டிற்குத் தர மறுத்த நீங்கள், தூத்துக்குடிக்கும் திருநெல்வேலிக்கும் எப்படி வருகிறீர்கள்? பேரிடர் நிதியைக் கூட தராமல் ‘அல்வா’ கொடுக்கும் மோடி ஆட்சிக்கு இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் ‘அல்வா’ கொடுப்பார்கள். ஜி.எஸ்.டி. நிதி முதல் பேரிடர் நிதி வரை தராத மத்திய அரசின் ஏமாற்று வேலையைத் தி.மு.க. தோலுரிப்பதால், மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராத ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என பொய்யைச் சொல்லியிருக்கிறார்.
தி.மு.க.வை இனிப் பார்க்க முடியாது. இனித் தி.மு.க எங்குத் தேடினாலும் கிடைக்காது எனச் சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி. தி.மு.க. அழிந்து போகும், தலைதூக்காது என தி.மு.க. உருவான 1949-ம் ஆண்டில் இருந்து இன்று வரை 74 ஆண்டு காலமாகப் பலர் பேசிக் கடந்து சென்று கொண்டு தான் இருக்கி றார்கள். ஆனால், தி.மு.க. என்ற இமயமலை இன்றும் வரலாற்றில் நிமிர்ந்து நின்று கொண்டு தான் இருக்கிறது.
தி.மு.க. வையே இல்லாமல் ஆக்கிவிடு வாராம். சவால் விட்டுள்ளார். இப்படிச் சொன்ன வர்கள் எல்லாம் வர லாற்றில் காணாமல் போய் விட்டார்கள். அந்த வரிசையில் அவரும் விரைவில் இணைந்து விடத்தான் போகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.