செய்திகள்

தி.மு.க.வுக்கு முகவுரை எழுதினார் அண்ணா: முடிவுரை எழுதுகிறார் ஸ்டாலின்

கரூர், மே 9–

தி.மு.க.வுக்கு பேரறிஞர் அண்ணா முகவுரை எழுதினார். ஸ்டாலின் முடிவுரை எழுதி கொண்டிருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் டாக்டர் வைகைச்செல்வன் கூறினார்.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அண்ணா தி.மு.க. வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து அண்ணா தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான டாக்டர் வைகைச்செல்வன் தோட்டக்குறிச்சி பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பேரறிஞர் அண்ணா தனது பேச்சாலும், எழுத்தாலும் தமிழக அரசியலில் பெரும் புரட்சியை நிகழ்த்திக் காட்டி, திராவிட இயக்கத்தின்பால், மக்களை ஈர்த்த தீர்க்கதரிசி ஆவார். மிட்டா மிராசுகளும், பட்டாடை உடுத்தும் பங்களாவாசிகளும் அதிகார உச்சியில் அமர்ந்து ஆட்சி புரிந்த வேளையில் சாமானியனும், சாலையோரம் வாழ்கின்ற ஏழை, எளியோரும், எண்ணிப் பார்க்க இயலாத ஆட்சி அதிகாரத்தில் அமரலாம் என்று அரசியலில் மிகப் பெரிய வேதியியல் மாற்றத்தை உருவாக்கி மகிழ்ந்த உன்னத தலைவர் தான் அறிஞர் அண்ணா.

தந்தை பெரியாரால், அன்பு காட்டப்பட்டு 1944-ல் சேலம் மாநாட்டில் அவர் தம் இயக்கத்திற்கு திராவிடர் கழகம் என பெயர் சூட்டக் காரணமாக திகழ்ந்தது. பின்னர் தந்தை பெரியாரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 1949-ல் தி.மு.க.வை உருவாக்கி புரட்சித்தலைவர் துணையோடு 1967-ல் திராவிட இயக்க ஆட்சியை தமிழகத்தில் மலரச் செய்த மாமனிதர்தான் பேரறிஞர் அண்ணா.

பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த தி.மு.க.வை தங்கள் குடும்பச் சொத்தாக அபகரித்துக் கொண்டு, அதனால் ஆயிரமாயிரம் ஆதாயங்களை தேடிக் கொண்டதோடு அல்லாமல், எந்த அண்ணா தமிழினத்தின் மீது உயிரை வைத்து இருந்தாரோ தனது உடன் பிறவாத சகோதரர்களாய் பாவித்து தி.மு.க.வை ஆரம்பித்தாரோ, எந்த தமிழகத்தை வளமான தமிழகமாக மாற்ற நினைத்தாரோ அத்தனையையும் தூர எறிந்து விட்டு, பேரறிஞர் அண்ணாவுக்கு துரோகம் இழைத்ததோடு, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டைத் தவறிய ஒரு கழகமாக தற்போது தி.மு.க திகழ்கிறது.

தொண்டர்களின் உழைப்பை

சுரண்டினார்கள்

தங்கள் சுயநலத்திற்காக கட்சியை நடத்துவதும், தொண்டர்களின் உழைப்பை ஏமாற்றி பெற்றுக் கொள்வதும், கோடிகளை சுரண்டிக் கொழுப்பதுதான் அவர்களது வேலை. இப்படிப்பட்டவர்களை தமிழக மக்கள் தேர்தல்களிலிருந்து தூக்கியெறிந்த பின்பும், வெட்கம், சூடு, சொரணையில்லாமல் நாங்களும் அரசியல் நடத்துகிறோம் என அறிக்கை அரசியல் நடத்தி வருகிறார்கள்.

தமிழக மக்களால் விரட்டியடிக்கப்பட்டவர்கள் தி.மு.க.வினர் என்பதை மறந்து விட்டு, தி.மு.க தலைவர் ஸ்டாலின், பதவி தரும் போதையில், வாய்க்கு வந்ததை உளறுகிறார். தங்களுக்கு மட்டுமே அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரங்களை பற்றி தெரியும், மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்பது போல் பேசுவது, செயல்படுவது, அறிக்கைகள் விடுவது என அரசியல் நாகரிகத்திற்கு அப்பாற்பட்டு, பேரறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முகவுரை எழுதினார்.

முடிவுரை எழுதும் தி.மு.க.

ஆனால், வாரிசு அடிப்படையில் தலைவர் பதவி ஏற்றிருக்கும் மு.க.ஸ்டாலின் திராவிட இயக்க அரசியலின் கண்ணியத்தை பங்கப்படுத்தும் விதமாக, கடமையை மறந்து, அண்ணா வளர்த்த தி.மு.க.வுக்கு முடிவுரை எழுதிக் கொண்டு இருக்கிறார்.

‘நான் அரசியலில் மெதுவாகச் செல்கிறவன்’ என்று ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டார் அண்ணா.

நிதானமான, அதே சமயம் பயம், பதற்றம் இல்லாத தைரியமான முன்னகர்வு, கவனமாகச் சிந்தித்துத் தீட்டப்பட்ட திட்டங்களின் மூலம் இயற்கையான வளர்ச்சி என்று மிகுந்த அக்கறையோடு தி.மு.க.வின் முன்னேற்றத்துக்கு பாடுபட்டவர்தான் பேரறிஞர் அண்ணா. ஏழை, எளிய சாமானிய மக்களுக்காக வளர்க்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், இன்று தீயவர்களின் கையில் சிக்கிக் கொண்டு திக்குத் தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.

மக்களை ஏமாற்ற நாடகம்

தி.மு.க ஆட்சிக்காலங்களில் பிரதமர் வி.பி.சிங் முதல் மன்மோகன் சிங் வரை கனமான துறைகளை வாங்கிக் கொண்டு, அப்பதவிகளின் மூலம் அவர்களின் குடும்பத்திற்கு ஆதாயம் தேடினார்களே தவிர, தி.மு.க அடகு வைத்த காவேரியை மீட்கவோ, தாரை வார்த்த கச்சத்தீவை மீட்பதற்கோ ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதில்லை. மீத்தேனுக்கு ஒப்பந்தம் போட்டு விட்டு, தெரியாமல் செய்து விட்டேன் என்று மக்களை ஏமாற்ற ஒரு நாடகம் ஆடினார்கள்.

அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை. காவிரி படுகை மண்ணை புல் கூட முளைக்காத பாலைவனமாக மாற்றியதும், உணவுப் பாதுகாப்பு மசோதா, சிறு, குறு வணிகத்தில் அந்நிய முதலீடு, மாநில சுயாட்சிக்கு பாதகம் விளைவிக்க மாநிலங்களில், மத்திய உள்துறையின் தலையீடு உள்ளிட்ட அனைத்திற்கும் ஒத்தூதியது. தி.மு.க. சிங்களத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது, ஈவு இரக்கம் சிறிது கூட இல்லாமல், ராஜபக்சேவிடம் பரிசுப் பெட்டி வாங்கி வந்ததையெல்லாம் மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து விடவில்லை.

அதனால்தான் ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் அண்ணா தி.மு.க.வுக்கு தங்களின் அமோக ஆதரவை அளித்து வருகிறார்கள். அண்ணா தி.மு.க. அரசிற்கு இருக்கும் மக்கள் செல்வாக்கைப் பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க.வினர், கழகத்தின் ஆட்சி ஸ்திரமற்றது என்றும், எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் வரலாம் என்றும் பேசி வருகிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ஸ்திரமற்று இருப்பது ஆட்சியல்ல.இவர்களின் மனநிலைதான்.

அம்மாவின் பொற்கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வரும் திட்டங்களின் மூலம், கழக அரசின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *