செய்திகள் போஸ்டர் செய்தி

தி.மு.க.வுக்கு சம்மட்டி அடி: அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

Spread the love

புதுடெல்லி, டிச.11–
உச்சநீதிமன்ற தீர்ப்பு தி.மு.க.வுக்கு விடுத்த சம்மட்டி அடி என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தி.மு.க. அஞ்சுகிறது. எனவே தான் தலைகீழாக நின்று எப்படியும் தேர்தலை நிறுத்தி விடலாம் என தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் முயற்சி செய்தன என்றும் அவர் கூறினார்.
உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை அடுத்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை நிருபர்கள் சந்தித்தார்.
உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என்பதில் தான் தி.மு.க. குறியாக உள்ளது. இதற்கான முயற்சிகளிலேயே தொடர்ந்து தி.மு.க. ஈடுபட்டு வருகிறது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி வார்டு மறுவரையறை செய்யப்படவில்லை என்று தி.மு.க. கூறியுள்ளது.2011–ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தான் வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2011–ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டு தான் தேர்தல் நடக்கிறது. உச்ச நீதிமன்றமும் இதனை ஏற்று தான் 9 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்த அனுமதித்துள்ளது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
அஞ்சுகிறது தி.மு.க.
தி.மு.க. தலைகீழாக நின்று எப்படியாவது உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி விட நினைத்தது. மக்களை சந்திக்க தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் அஞ்சுகிறது. தி.மு.க.வுக்கு இது சரித்திர அவமானம். தேர்தலை கண்டு தி.மு.க. பயந்து ஓடுகிறது. குழப்பம் எங்களுக்கு இல்லை; மக்களுக்கும் இல்லை; அண்ணா தி.மு.க.வுக்கும் இல்லை. தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் தான் குழப்பம். மக்களை சந்திக்க அவர்களுக்கு தைரியம் இல்லை. ஏதாவது காரணத்தை சொல்லி எப்படியாவது உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி விடலாம் என நினைத்தவர்கள் இன்று உச்சநீதிமன்றம் அவர்களுக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
அண்ணா தி.மு.க.வுக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. நாம் மக்களிடம் சென்றால் தோற்றுபோய் விடுவோம் என தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் நினைக்கிறது.
எனவே தான் எப்படியாவது எங்களுக்கு உள்ள மக்கள் ஆதரவை தடுக்க நீதிமன்றம் நாடினார்கள். இன்று அவர்களுக்கு மிகப்பெரிய கொட்டு கொட்டி இருக்கிறது என்று அமைச்சர் கூறினார்.
அமோக வெற்றி
உள்ளாட்சி தேர்தலில் அண்ணா தி.மு.க. அமோக வெற்றி பெறும். மீண்டும் மீண்டும் தி.மு.க. தோல்வியைத்தான் சந்திக்கும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *