சென்னை, டிச.7-
கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி 200 தொகுதிகளில் வெல்வோம் என்ற தி.மு.க.வின் கூட்டணி கணக்கை 2026ல் மக்களே ‘மைனஸ்’ ஆக்கிவிடுவார்கள் என்று சென்னையில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசினார்.
விகடன் பிரசுரமும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனமும் இணைந்து ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தலைப்பிலான 992 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை தொகுத்துள்ளது. இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
விழாவில் பங்கேற்றவர்களை விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கலந்துகொண்டு, புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட, அதை சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, சமூக செயல்பாட்டாளரும், அம்பேத்கரின் பேரனுமான ஆனந்த் டெல்டும்டே ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மேலும், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீருடன் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தை வெளியே கொண்டுவந்த 4 பேருக்கும், நாங்குநேரி பள்ளியில் சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட தலித் மாணவர் சின்னதுரை மற்றும் குடும்பத்தினருக்கும், ஊராட்சி பணியை திறம்பட செய்யவிடாமல் தடுக்கப்பட்ட வித்யா, சாந்தி ஆகியோருக்கும் விஜய், சால்வை அணிவித்து அம்பேத்கர் புத்தகத்தை வழங்கி கவுரவித்தார்.
விழாவில் விஜய் பேசியதாவது:-
பிறப்பால் நாம் அனைவரும் சமம். நீ என்ன சாதியில் பிறந்திருந்தாலும், எந்த மதத்தை பின்பற்றினாலும் சட்டத்தின் முன் நாம் அனைவரும் சமம் என்ற உயரிய கோட்பாட்டை உறுதி செய்யும் அரசியல் சாசன சட்டத்தை வழங்கி பெருமையை தேடித்தந்தவர் அம்பேத்கர்.
இந்த புத்தகத்தில் 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், நேர்காணல்கள் இருக்கிறது.
இன்றைக்கு அம்பேத்கர் உயிரோடு இருந்தால் என்ன நினைப்பார்?. இன்றைக்கு இருக்கும் இந்தியாவை பார்த்து அவர் பெருமைப்படுவாரா?, இல்லை வருத்தப்படுவாரா? அப்படியே வருத்தப்பட்டால் எதை நினைத்து வருத்தப்படுவார்?.
இன்றைக்கு நமது நாடு முழு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் அமைப்பு சட்டம் காக்கப்பட வேண்டும். அதற்கான பொறுப்பு, கடமை ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும் என்று தோன்றியது. அந்த பொறுப்போடும், கடமையோடுதான் நான் ஆணித்தரமாக சொல்கிறேன்.
ஜனநாயகத்தின் ஆணி வேர், சுதந்திரமான, நியாயமான தேர்தல். தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்று நான் சொல்லவரவில்லை. ஆனால், சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நம் ஒருவருக்கும் இருக்க வேண்டும் என்று தோன்றியது.
அது அமைய வேண்டும் என்றால் தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது வலிமையான ஒரு கோரிக்கை. இரண்டாவதாக ஏப்ரல் 14-ந் தேதி அம்பேத்கரின் பிறந்த நாள். அன்றுதான் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஜனநாயகம் பிறந்த தினம். அதனால் அந்த நாளை இந்திய ஜனநாயக உரிமை தினமாக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும். அதுதான் எனது இன்னொரு தாழ்மையான வேண்டுகோள்.
அம்பேத்கர் பற்றி யோசிக்கும்போது, கண்டிப்பாக சட்டம்-ஒழுங்கு, சமூக நீதி பற்றி யோசிக்காமல் இருக்க முடியாது. இன்றும் மணிப்பூரில் என்ன நடக்கிறது?. என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் ஒரு அரசு மேலிருந்து நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது.
சரி, அங்குதான் அந்த அரசு அப்படி இருக்கிறது என்றால் இங்கு இருக்கிற அரசு, எப்படி இருக்கிறது?. தமிழகத்தில் வேங்கை வயல் என்ற ஊரில் என்ன நடந்தது என்பது நமக்கு தெரியும். சமூக நீதி பேசும் இங்குள்ள அரசு அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்ததுபோல் எனக்கு தெரியவில்லை. இவ்வளவு காலங்கள், இத்தனை ஆண்டுகள் தாண்டி ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லையே? இதை எல்லாம் இப்போது அம்பேத்கர் பார்த்தார் என்றால் வெட்கப்பட்டு தலைகுனிந்து போவார்.
நமக்கு நடக்கும் கொடுமைகளுக்கு நாம் குரல் கொடுக்க வேண்டும். ஆனால், நடக்கும் பிரச்சினைகள் ஒன்றா? இரண்டா? பெண் குழந்தைகளுக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக, ஏன் மனித உயிர்களுக்கு எதிராக கொடுமைகள் நடக்கிறது.
இதை எல்லாம் பார்க்கிறோம், படிக்கிறோம், மற்றவர்களிடம் இருந்து கேட்டு தெரிந்துகொள்கிறேன். இதற்கு நிரந்தர தீர்வு என்னவென்றால், தமிழக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பாதுகாப்புடன், முறையாக, முழுமையாக அளிக்கும் மக்களை உண்மையாவே நேசிக்கும் ஒரு நல்ல அரசு.
இது அமைந்தாலே போதும், மிகவும் எளிது. இங்கு தினம், தினம், ‘டுவிட்’ போடுவதிலும், சம்பிரதாயத்துக்காக அறிக்கை விடுவதிலும், சம்பிரதாயத்துக்காக நானும் மக்களுடன், மக்களுக்காக இருக்கிறேன் என்பதை காட்டிக்கொள்வதிலும், சம்பிரதாயத்துக்காக மழை தண்ணீரில் நின்று போட்டோ எடுத்துக் கொள்வதிலும் எனக்கு உடன்பாடில்லை.
ஆனால், என்ன செய்வது நாமும் சம்பிரதாயத்துக்காக சில நேரங்களில் அவ்வாறு செய்ய வேண்டியுள்ளது. மக்களுடன் உரிமைகளுக்காகவும் அவர்களுடன் உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். என்னை ஒவ்வொருத்தரின் குடும்பத்திலும் ஒருவனாக நினைத்திருப்பவர்களுக்கு தமிழகத்தில் எங்கு, எப்போது பிரச்சினை வந்தாலும் அவர்களின் உரிமைகளுக்காகவும் அவர்களுடன் உணர்வுபூர்வமாக இருப்பேன். எப்போதும் இப்படிதான் இருப்பேன்.
மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களுடன் இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை.
நீங்கள் உங்களின் சுயநலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026-ல் மக்களே ‘மைனஸ்’ ஆக்கி விடுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக விழாவுக்கு வந்த விஜய்க்கு மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர். உற்சாக மிகுதியில் அவர் மேளத்தை இசைத்தார். மேலும் அங்கிருந்த அம்பேத்கர் சிலையுடன் செல்பியும் எடுத்தார்.
முன்னதாக, புத்தகம் உருவாக்கப்பட்ட விதம் குறித்து வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜூனா பேசினார். நிறைவாக, ஆனந்த விகடன் ஆசிரியர் முருகன் நன்றி கூறினார்.
விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், திரைப்பட இயக்குநர் ஞானவேல், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தலைவர் சுந்தர்ராஜன், ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. திலகவதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
…
2026ல் அந்த மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும்
விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர்
தமிழகத்தில் மன்னராட்சி நிலவுகிறது. 2026ல் அந்த மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்று புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசினார்.
நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது;
திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காவிட்டாலும், அவரது மனசாட்சி இங்குதான் உள்ளது. பட்டியலினத்தவர் ஒருவர் முதல்வராக வரவேண்டும் என்னும்போது, அதற்கு முதல் குரலாக நடிகர் விஜயின் குரல் ஒலித்தது. அவர் 2 ஆயிரம் கோடி ரூபாய் தொழிலைவிட்டு இங்கே வந்திருக்கிறார்.
இங்கே சிலர், சினிமாவில் ஒரு நிறுவனத்தை வைத்துக் கொண்டு ஆதிக்கம் செய்கின்றனர். ஒரு நிறுவனம் எப்படி ஒட்டுமொத்த திரையுலகத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிகிறது? தமிழகத்தில் நிலவும் ஊழலையும், மதவாதத்தையும் பற்றி விஜய் பேச வேண்டும்.
வேங்கை வயல் பிரச்னை இன்னமும் தீர்க்கப்படவில்லை. ஒரு கான்ஸ்டபிள் நினைத்தால் கூட குற்றவாளியை பிடித்துவிடலாம். ஆனால் சாதி தான் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. நடிகர் விஜய் வேங்கைவயல் செல்லவேண்டும்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்கி அதில் பட்டியலின மக்களை பங்கேற்க வைக்கவேண்டும். இங்கு மன்னராட்சி நிலவுகிறது. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று கேட்டால் சங்கி என்கிறார்கள். 2026ல் அந்த மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் தமிழகத்தில் புதிய அரசியலை மக்கள் உருவாக்க முடிவெடுத்துள்ளனர். பிறப்பால் ஒருவர் தமிழகத்தின் முதல்வர் ஆகக்கூடாது.
இவ்வாறு ஆதவ் அர்ஜூனா பேசினார்.