செய்திகள்

தி.மு.க. முன்னாள் எம்.பி.க்கு ரூ. 7 லட்சம் பயிர் கடன் தள்ளுபடி: எடப்பாடி அறிவிப்பு

அண்ணா தி.மு.க.க்குத்தான் பயிர் கடன் தள்ளுபடி என்ற ஸ்டாலின் புகாருக்கு பதிலடி

தென்காசி, பிப்.19–

தி.மு.க. முன்னாள் எம்.பி.க்கு 7 லட்சம் ரூபாய் கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அண்ணா தி.மு.க.வினருக்குத் தான் பயிர் கடன் தள்ளுபடி என்று பிரச்சாரம் செய்து வரும் ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் வகையில் இதனை முதலமைச்சர் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டத்தில் இன்று முதலமைச்சர் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார். கடையநல்லூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

விவசாய பெருங்குடி மக்கள் புயல், வெள்ளம், வறட்சி ஆகியவற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தொடர் மழையால் அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்களெல்லாம் மழை வெள்ளத்தால் பாதித்து விவசாயிகள் பாதிப்படைந்தார்கள். அவ்வாறு பாதிக்கப்பட்ட விவசாயிகளெல்லாம் கோரிக்கை வைத்தார்கள். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று அம்மாவின் அரசு அவர்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிர்க்கடன் ரத்து செய்யப்படுமென்று அறிவிப்பு கொடுத்து நடைமுறைப்படுத்தியிருக்கிறோம்.

விவசாயிகள் தங்களுடைய பம்பு செட்டுக்கு மும்முனை மின்சாரம் வேண்டுமென்று கேட்டார்கள். அதையும் அம்மாவுடைய அரசு நிறைவேற்றும் என்ற அறிவிப்பைக் கொடுத்திருக்கிறோம். ஆகவே, வேளாண் பணி சிறக்க வேண்டும், வேளாண் பெருமக்கள் சிறக்க வேண்டும், உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் ஒரு நாடு தன்னிறைவு பெறும். ஆகவே, நாட்டு மக்களுக்கு உணவுப் பிரச்சனை இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும். அதை எங்கள் அரசு உரிய காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிற செய்தியை தெரிவிக்கிறேன்.

ஸ்டாலின் பேசுகிறார், அண்ணா திமுக-காரர்களுக்குத்தான் இந்த பயிர்க்கடன் தள்ளுபடியென்று, எவ்வளவு பச்சைப் பொய். கூட்டுறவு சங்கத்தில் இது திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாட்டாளி என்று பிரித்தா பார்க்கின்றோம். இதில் திமுக-காரர்கள்தான் அதிகமாக பயன் பெற்றுள்ளனர். வேறு எந்தக் கட்சியும் இல்லை. திமுக-வினர் தான் நிறைய நிலம் வைத்திருக்கிறார்கள், அவர்கள்தான் அதிகமாக பயிர்க்கடன் வாங்கி பயனடைந்திருக்கிறார்கள்.

தி.மு.க. முன்னாள் எம்.பி.யின் ரூ.7 லட்சம் கடன் தள்ளுபடி

உதாரணத்திற்கு, மதுரையில் திமுக கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் அக்கினிராஜ் அவரது மனைவி, மகன், மருமகன் ஆகியோர் ஏறத்தாழ 7 லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி. தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிகமாக கடன் பெற்றவர்களும், அதிகமாக பயன் பெற்றவர்களும் திமுக-வினர்தான். பயன்பெற்றவர்கள் அனைவரும் அண்ணா திமுக-வுக்கு ஓட்டு போட வேண்டும். ஏனென்றால், நான்தானே தள்ளுபடி செய்திருக்கிறேன், அண்ணா திமுக அரசுதானே தள்ளுபடி செய்திருக்கிறது.

இங்கு இஸ்லாமிய பெருமக்கள் அதிகமாக வசிக்கின்றார்கள். தேர்தல் வந்தால் வேண்டுமென்றே திட்டமிட்டு, திமுக-வினர் அந்த சிறுபான்மை மக்களை பயன்படுத்துவார்கள். சிறுபான்மையின மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காத நிலை இருந்தது. புரட்சித்தலைவி அம்மா, சிறுபான்மை மக்களை அரணாக பாதுகாத்தார். அதே வழியில் அம்மாவின் அரசு சிறுபான்மை மக்களை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.

இஸ்லாமியர்களுக்கு உதவிகள்

2019–ம் ஆண்டு ஹஜ் புனித பயணத்திற்கு ஒவ்வொரு வருடமும் 6 கோடி ரூபாய் மானியம் அரசு வழங்கிக் கொண்டிருந்தது. அது மத்திய அரசால் நிறுத்தப்பட்டது. ஆனால், இஸ்லாமிய பெருமக்களின் வேண்டுகோளை ஏற்று, அம்மாவின் அரசு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள ஆண்டுதோறும் கொடுக்கப்பட்டு வந்த 6 கோடி ரூபாய் மானியத்தை 10 கோடி ரூபாயாக உயர்த்தியிருக்கிறோம்.

2018–ம் ஆண்டிலிருந்து இதுவரை 8,166 இஸ்லாமிய பெருமக்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டிருக்கின்றனர். ஹஜ் குழுவிற்கு வழங்கப்பட்டு வந்த மானியம் ரூபாய் 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தியிருக்கிறோம். ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும்போது, சென்னையில் தங்கி செல்வதற்கு ஹஜ் இல்லம் 15 கோடி ரூபாயில் பணி நடந்து கொண்டிருக்கிறது.

பள்ளிவாசல், தர்காக்கள் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளை மேற்கொள்ள தொகுப்பு நிதி 3 கோடி ரூபாய் உருவாக்கப்பட்டிருக்கிறது. உலமாக்கள் மாத ஓய்வூதியம் 1,500 ரூபாயாக தற்போது 3000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க ரூ.25,000 அல்லது 50 சதவீதம் இதில் எது குறைவோ, அது வழங்கப்பட்டு வருகிறது.

இப்படி இஸ்லாமிய பெருமக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை எங்களுடைய அரசு வழங்கி வருவது மட்டுமல்லாமல் அவர்களுடைய குரல் மாநிலங்களவையில் ஒலிப்பதற்கு எங்களுடைய கட்சி இஸ்லாமிய மதத்திலிருந்து முகமது ஜான் என்பவரை எம்.பி. ஆக ஆக்கியிருக்கிறோம். திமுக-வில் இதுபோன்று எம்.பி. கொடுத்தார்களா? கிடையாது, வாயளவில் பேசுவார்கள், சிறுபான்மையின மக்களுக்கு எதையும் செய்த வரலாறு கிடையாது. தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் முதியவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று உத்தரவிட்டு, இன்றைக்கு சுமார் 90 சதவிகிதம் முதியவர்களுக்கு கொடுத்துள்ளோம். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் 2 லட்சம் ரூபாய் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு வந்ததை அம்மாவின் அரசு உயர்த்தி, தற்போது 5 லட்சம் ரூபாய் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று செயல்படுத்தி வருகிறது.

நகரம் முதல் கிராமங்கள் வரை ஏழை, எளிய மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் 2000 அம்மா மினி கிளினிக் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் மட்டும் 41 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் 8 அம்மா மினி கிளினிக் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவ பணியாளர் அந்த பகுதியிலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் உங்களது பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்திற்கு அளித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து அம்மாவின் ஆட்சி தொடர துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *