சட்டமன்றத்தேர்தலை எதிர்கொள்ள தீவிரம்
சென்னை, பிப்.14-
தி.மு.க.வில் 4 புதிய மாவட்டங்கள் உதயமாகி உள்ளது. இதன் மூலம் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.
தி.மு.க.வில் அமைப்புரீதியாக 72 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் உள் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து அவரது ஆலோசனையில் பேரில் மாவட்டங்கள் மறுசீரமைப்பு பணியில் அக்கட்சி தலைமை நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
அதன்படி ஈரோடு மாவட்ட தி.மு.க.வில் மத்திய மாவட்டமும், திருப்பூர் மாவட்டத்தில் மேற்கு, தெற்கு ஆகிய 2 மாவட்டங்களும், விழுப்புரத்தில் மத்திய மாவட்டம் என 4 புதிய மாவட்டங்கள் உதயமாகி உள்ளன. இதன் மூலம் தி.மு.க. மாவட்டங்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. தி.மு.க. நிர்வாக வசதிக்காகவும், கட்சி பணிகள் செம்மையுற நடைபெற்றிடவும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தி.மு.க.வில் புதிதாக உதயமான மாவட்டங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் முத்துசாமியிடம் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. இதில் அவரிடம் இருந்து பெருந்துறை தொகுதியை பெற்று ஈரோடு மத்தியம் தொகுதி புதிதாக உதயமாகி உள்ளது. அதே போன்று ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் வசமிருந்த பவானி தொகுதியும் இந்த மாவட்டத்தில் ஐக்கியமாகி உள்ளது.
ஈரோடு மத்திய மாவட்ட செயலாளராக தோப்பு வெங்கடாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி வசம் திருக்கோலூர், விக்கிரவாண்டி, விழுப்புரம், வானூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. இதில் விழுப்புரம், வானூர் ஆகிய 2 தொகுதிகளை பிரித்து மத்திய மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்துக்கு டாக்டர் ஆர்.லட்சுமணன் எம்.எல்.ஏ. செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
திருப்பூரில் வடக்கு, தெற்கு என 2 மாவட்டங்களாக செயல்பட்ட தி.மு.க.வில் கிழக்கு, மேற்கு ஆகிய 2 மாவட்டங்கள் புதிதாக உதயமாகி உள்ளது. இதில் தெற்கு மாவட்டத்தில் இருந்த காங்கேயம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளை பிரிந்து மேற்கு மாவட்டம் உருவாகி உள்ளது. இந்த மாவட்டத்துக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செயலாளராகி உள்ளார். வடக்கு மாவட்டத்தில் இருந்த பல்லடம், திருப்பூர் தெற்கு ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளை பிரிந்து கிழக்கு மாவட்டம் உதயமாகி உள்ளது. இந்த மாவட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்த செல்வராஜ் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் வகித்து வந்த வடக்கு மாவட்ட செயலாளர் பதவி தினேஷ்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக இல.பத்மநாபன் தொடர்கிறார். மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ.விடம் இருந்த மதுரை மேற்கு தொகுதி மதுரை வடக்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் மூர்த்தி வசம் வந்துள்ளது.
உள்கட்சி விவகாரத்தில் செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவி மற்றும் அவர் வகித்து வந்த விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவி கடந்த ஆண்டு (2024) பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக சேகர் என்பவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.இதற்கிடையே செஞ்சி மஸ்தான் மீண்டும் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்லாமியர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் இந்த முடிவை தி.மு.க. தலைமை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
4 மாவட்ட செயலாளர்கள்
மாற்றம்
திருவள்ளூர் கிழக்கு, தஞ்சை தெற்கு, நீலகிரி, நெல்லை மத்தியம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் டி.ஜெ.எஸ்.கோவிந்தராஜன் எம்.எல்.ஏ. அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக வல்லூர் டாக்டர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் அண்ணாதுரை எம்.எல்.ஏ. அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக பட்டுக்கோட்டை ஆலடிக்குமுலை தாமரைக்குடிகாடு பகுதியை சேர்ந்த பழனிவேல் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
நீலகிரி மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் பா.மு.முபாரக் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக கோத்தகிரி நெடுகுளா பகுதியை சேர்ந்த கே.எம்.ராஜூ நியமிக்கப்படுகிறார்.
நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வரும் மைதீன்கான் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக பேட்டை எம்.ஜி.பி. சன்னதி தெருவை சேர்ந்த அப்துல் வகாப் எம்.எல்.ஏ. புதிய பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.