சென்னை, ஜூன்.11-
தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றியது. இதில் 21 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது.
இதில் தி.மு.க. நாடாளுமன்ற குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுதொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையே தி.மு.க. நாடாளுமன்ற குழு நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
மக்களவை, மாநிலங்களவை ஆகிய 2 அவைகளுக்கும் சேர்த்து தி.மு.க. நாடாளுமன்றத்தின் குழு தலைவராக கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி, மக்களவை குழு தலைவராக கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைத்தலைவராக கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன், கொறடாவாக கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
மாநிலங்களவை குழு தலைவராக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, துணைத்தலைவராக தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், கொறடாவாக தி.மு.க. சட்ட தலைமை ஆலோசகர் பி.வில்சன், இந்த 2 அவைகளின் பொருளாளராக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த முறை தி.மு.க. நாடாளுமன்ற குழு துணை தலைவராக இருந்த கனிமொழி தற்போது 2 அவைகளுக்கும் சேர்த்து தலைவராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வகித்த துணைத்தலைவர் பதவி தயாநிதிமாறன் வசம் வந்துள்ளது. டி.கே.எஸ்.இளங்கோவனின் மாநிலங்களவை பதவி காலம் முடிவடைந்ததையடுத்து அவர் வகித்த கொறடா பதவி வில்சனுக்கு கிடைத்துள்ளது.
கடந்த முறை தி.மு.க. நாடாளுமன்ற குழு பொருளாளராக இருந்த எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது ஜெகத்ரட்சகன் 2 அவைகளுக்கும் பொருளாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.