செய்திகள்

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

Makkal Kural Official

சென்னை, மார்ச் 9–

தொகுதி மறுசீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண்போம்; மாநில உரிமைகளை நிலைநாட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து செயல்படுவோம் என ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று சென்னையில் நடைபெற்றது. மொத்தம் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கின்ற ஜனநாயகப் போராளியாகத் திகழ்கின்ற தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலில் இந்திய நாடாளுமன்றத்தில் கழக எம்.பி.க்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்.

தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வில் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருவதுடன், தமிழ்நாடு பல துறைகளிலும் அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக உள்ள இருமொழிக் கொள்கைக்கு எதிரான இந்தித் திணிப்பு முயற்சியையும் மேற்கொண்டு தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பிலும் தெளிவான பதிலைத் தராமல் குழப்பி வருகிறது.

பா.ஜ.க. சதித்திட்டம்

மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு முதலிய தென்னிந்திய மாநிலங்களைப் பழி வாங்குகிற வகையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வின் சதித் திட்டத்தைத் தெளிவாக உணர்ந்து, இப்பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கும் முதலமைச்சUக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன்,

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதலமைச்சருடைய அனைத்து முயற்சிகளுக்கும் முழுமையாகத் துணை நிற்பதுடன் நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினைகளை முன்வைத்துப் போராடி, தமிழ்நாட்டிற்குரிய நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்று கூட குறையாத வகையிலும், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்குரிய தொகுதிகளின் விகிதாசாரத்தைத் தக்க வைப்பதிலும் வெற்றியை ஈட்டுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

பாதிக்கும் மாநிலங்களை

ஒருங்கிணைப்போம்

தொகுதி மறுசீரமைப்பின் விளைவுகள் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைப் பாதிக்கும் என்பதால் அந்த உரிமையைக் காக்கும் அறவழி முயற்சிகளில் தமிழ்நாட்டில் இதுவரை நடந்திராத வகையில், 50க்கும் மேற்பட்ட அனைத்துக்கட்சிகளையும் ஒன்றிணைத்து, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நியாயம் பெறுவதற்கான இயக்கத்தை முன்னெடுத்திருக்கும் முதலமைச்சருக்கு ஆதரவாக நின்று, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால் மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும் அபாயத்தில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் என பாதிக்கப்படவிருக்கும் 7 மாநிலங்களைச் சார்ந்த கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராட்டக் களத்திற்கு அழைத்து வரும் பொறுப்பைக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மேற்கொள்வர் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

உரிமையை நிலைநாட்டுவோம்

நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கையின் இரண்டாவது கட்டக் கூட்டத்தொடர் நாளை (10–ந் தேதி) தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சி உறுப்பினர்கள், இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் மட்டுமின்றி ஜனநாயகத்தைக் காப்பதில் உறுதியாக உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து, முதலமைச்சர் முன்னெடுத்துள்ள தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்றத்தில் இதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து பாதிப்படையவுள்ள மாநிலங்களுடைய தொகுதிகளின் எண்ணிக்கையையும் அதன் விகிதாசாரத்தையும் காப்பாற்றுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *