செய்திகள்

தி.மு.க. தேர்தல் அறிக்கை: கவர்ச்சி திட்டங்களை அறிவித்தார் ஸ்டாலின்

சென்னை, மார்ச் 13–

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையை இன்று மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

தி.மு.க. போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டி.ஆர். பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் தேர்தல் அறிக்கையை வாசித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:–

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம், பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டு திருநாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும், குடிசை இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்.

சட்டசபை நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு

அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் மக்கள் குறைதீர்ப்பு நிகழ்ச்சி நடத்தப்படும், சட்டமன்ற நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு தலா ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்தாக பால் வழங்கப்படும். 8ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் ஆக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேம்படும் வரை சொத்து வரி அதிகரிக்கப்படாது, மாதம் ஒரு முறை மின்கட்டணம் வசூலிக்கப்படும்.

சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும், பெட்ரோல் ரூ.5-ம், டீசல் ரூ.4-ம் விலை குறைக்கப்படும், ரேஷனில் உளுத்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும், ரேஷனில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும்.

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும், அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 40 சதவீதம் வழங்கப்படும். மகளிர் பேறுகால உதவித்தொகை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும், பேறு கால விடுமுறை 12 மாதமாக அதிகரிக்கப்படும். நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வண்டி வழங்கப்படும்.

கருணாநிதி பெயரில் உணவகம்

இந்து ஆலயங்களை சீரமைக்க ரூ.1000 கோடியும், மசூதி, தேவாலயங்களை சீரமைக்க ரூ.200 கோடியும் ஒதுக்கப்படும், பயிற்சி முடித்து காத்திருக்கும் 205 அர்ச்சகர்களுக்கு உடனடியாக பணி வழங்கப்படும். இந்து கோவில்களுக்கு சுற்றுலா செல்ல ஒரு லட்சம் பேருக்கு நிதி வழங்கப்படும்.

வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும், தமிழகம் முழுவதும் கலைஞர் பெயரில் உணவகம் திறக்கப்படும். பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாள்களில் தீர்வு காணப்படும். தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும், மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும், நடைபாதை வாசிகளுக்கு இரவு நேர காப்பகங்கள் திறக்கப்படும், ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும். சிறுகுறு விவசாயிகள் மின்மோட்டார் வாங்க ரூ.10000 மானியம் வழங்கப்படும்.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும், பத்திரிகையாளர்கள், ஊடகத் துறையினர் நலனுக்கு தனி வாரியம் அமைக்கப்படும், சைபர் காவல்நிலையங்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் 75 சதவீதம் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சட்டம் இயற்றப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *