செய்திகள்

தி.மு.க. தேச விரோத கட்சி: பா.ஜ.க. தலைவர் நட்டா தாக்கு

பா.ஜ.க. – அண்ணா தி.மு.க. இணைந்தே தேர்தலை சந்திக்கும்

தி.மு.க. தேச விரோத கட்சி: பா.ஜ.க. தலைவர் நட்டா தாக்கு

‘வேல்’ ஏந்தி வேஷம் போடுகிறது தி.மு.க.

மதுரை, ஜன.31-

“பா.ஜ.க., அண்ணா தி.மு.க. இணைந்தே சட்டசபை தேர்தலை சந்திக்கும்” என்று மதுரை மாநாட்டில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார். தி.மு.க. தமிழர்கள் விரோத தேச விரோத கட்சி என்றும் அவர் கூறினார்.

மதுரை பாண்டிகோவில் ரிங் ரோடு அருகே உள்ள திடலில் நேற்று இரவில் பா.ஜ.க. சார்பில் மாநாடு நடந்தது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று பேசியதாவது:-

தமிழ் மக்கள் சிறந்த தொழில் முனைவோர்களாக, தொழில் மேம்பாட்டையும், பொருளாதார முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர். அதோடு தமிழ் கலாசாரத்தையும் முன்னேற்றி உள்ளனர். இங்கு நாம் உலகமே வசுதேவ குடும்பமாக இருக்கிறோம் என்று சொல்கிறோம். இதை கணியன் பூங்குன்றனார், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று சொல்லி இருக்கிறார்.

பிரதமர் மோடி செல்லும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழியைப் பற்றியும், திருவள்ளுவரைப் பற்றியும் மேற்கோள் காட்டி பேசி வருகிறார். குறிப்பாக, லடாக்கில் இருக்கும் ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்துவதற்கு திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். சரியான இடத்திலே, சரியான நபர் இருப்பாரேயானால் சரியான முடிவு எடுக்கப்படும் என்பதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

தமிழகத்துக்கு 5 மடங்கு அதிக நிதி

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலே 13-வது நிதிக்கமிஷன் மூலமாக தமிழகத்திற்கு வழங்கிய நிதி ரூ.94 ஆயிரத்து 540 கோடி மட்டுமே. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பின் 14-வது நிதிக்கமிஷன் மூலமாக தமிழகத்திற்கு வழங்கியது ரூ.5 லட்சத்து 42 ஆயிரத்து 68 கோடியாகும். இது கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொடுக்கப்பட்டதை விட 5 மடங்கு அதிகமாகும்.

ஆகவே இந்த மாதிரி தமிழகத்துக்கு வேண்டியதை வழங்கும் வகையில் நரேந்திர மோடி அரசு செயல்படுகிறது. அதுமட்டுமல்ல நெசவுத்தொழில் தமிழகத்தில் பிரதான தொழில். கடந்த ஆட்சிகளில் இந்த தொழிலை முன்னேற்ற எந்த சிந்தனையும் செய்யப்படவில்லை. ஆனால் தற்போது நெசவுத்துறைக்கு மட்டும் ரூ.1600 கோடி மோடி அரசாங்கம் வழங்கியுள்ளது.

சென்னை, சேலம், ஓசூரில் பல்வேறு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பொருளாதார செயல்பாடுகளானது, மோடி ஆட்சிக்கு பின்னர் தான் தமிழகத்தில் துரிதப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி வெளியேறிய பின்பு தற்போதைய ஆட்சியில் தான் தமிழகம் முன்னேற்றப்பாதையில் செல்கிறது.

35 லட்சம் விவசாயிகளுக்கு உதவித்தொகை

நாடு முழுவதும் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. அதில் 56 லட்சம் கழிப்பறைகள் தமிழகத்தில் தான் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளன. உஜ்வாலா திட்டத்தின்கீழ் எரிவாயு இணைப்பை 30 லட்சம் பெண்கள் தமிழ்நாட்டில் பெற்றுள்ளனர். தமிழக மகளிரின் வாழ்வை வளமாக்கும் திட்டங்களை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகளுக்கு கிசான் சம்மான் திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் தமிழகத்தில் 35 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதி அளிக்கப்படுகிறது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் இங்கு 5 லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளன.

ரெயில்வே துறையில் தமிழகத்துக்குதான் அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்கு தான் அதிக நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டமும் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழர் விரோத கட்சி தி.மு.க.

சென்னையில் மெட்ரோ ரெயில், மதுரையில் ரூ.1,200 கோடியில் எய்ம்ஸ் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. மதுரையை முக்கிய நகரங்களுடன் இணைக்கும் நான்கு வழிச்சாலைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. கட்சிகளை பற்றி பார்த்தால், தி.மு.க. தமிழர்கள் விரோத கட்சி. தேசிய விரோத கட்சி. அவர்களது ஆட்சியில் தமிழகம் சரிவை சந்தித்து உள்ளது. ஆனால் இன்று வேல் ஏந்தி வேஷம் போடுகிறார்கள்.

பா.ஜ.க., அண்ணா தி.மு.க.வை பொறுத்த வரை மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்படும் கட்சிகள் ஆகும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தேசிய கட்சிகளுடன் இணைந்து செயல்படத்தான் எப்போதும் விரும்பினார்கள்.

பா.ஜ.க.வும், அண்ணா தி.மு.க.வும் இணைந்து வருகிற சட்டமன்ற தேர்தலிலே மக்களை சந்திக்கிறோம். நாங்கள் நாட்டின் வளர்ச்சியை மையமாக வைத்து செயல்படுகிறோம். கொரோனா தொற்று மீட்பு நடவடிக்கையில் மத்திய அரசும், தமிழக அரசும் சிறப்பாக செயல்பட்டன. கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து செயல்படுத்துவதிலும் சிறப்பான செயல்பாட்டை கொடுத்து உள்ளோம். தமிழகம் வளர்ச்சி அடைவதற்கு தாமரை இங்கு மலர வேண்டும். மீண்டும் மீண்டும் இங்கு வந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், முக்கிய நிர்வாகிகள் வானதிசீனிவாசன், நடிகை குஷ்பு, எச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *