செய்திகள்

தி.மு.க. தலைவராக ஸ்டாலின் 2வது முறையாக போட்டியின்றி தேர்வு

சென்னை, அக்.9–

தி.மு.க. தலைவராக ஸ்டாலின் 2வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதை உட்கட்சி தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார். தி.மு.க. தலைவராக தேர்வான மு.க.ஸ்டாலினுக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தல் நடத்தி நிர்வாகிகளையும் நியமிக்க வேண்டும்.

அந்த வகையில் தி.மு.க.வின் 15வது உட்கட்சிப் பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே, ஒன்றியம், நகரம், நகரியம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகரச் செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் கட்சி ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் 64 மாவட்ட செயலாளர்கள் மீண்டும் அதே பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். 7 பேர் புதியவர்கள் ஆவார்கள். தென்காசி வடக்கு மாவட்டத்துக்கு மட்டும் தேர்தல் முடிவு இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது.

தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கைக் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பொதுக்குழுவில் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த பதவிகளுக்குப் போட்டியிடுவோரிடம் நேற்று முன்தினம் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தி.மு.க. தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதேபோல, பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர். தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்வதற்கான கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுஇந்த கூட்டத்தில், இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2 ஆயிரத்து 600 பொதுக்குழு உறுப்பினர்களும், ஆயிரத்து 500 சிறப்பு அழைப்பாளர்களும் என மொத்தம் 4 ஆயிரத்து 100 பேர் பங்கேற்று உள்ளனர்.தி.மு.க. தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதை உட்கட்சி தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார். மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனையடுத்து மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் படங்களுக்கு ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தி.மு.க. பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் பொதுக்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

துணை பொதுச் செயலாளராக கனிமொழி தேர்வு

மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் மற்ற நியமன பதவிகளை அறிவித்தார். தி.மு.க. துணை பொதுச் செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் மகளிரணி செயலாளராக உள்ள கனிமொழி எம்.பி.க்கு கூடுதல் பதவியாக துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து தி.மு.க. துணை பொதுச் செயலாளர் பதவிக்கு கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார். துணைப் பொதுச் செயலாளராக ஏற்கனவே இருந்த ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் 2-வது முறையாக துணை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். தி.மு.க. முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், திமுக தணிக்கைக்குழு உறுப்பினர்களாக முகமது சகி, பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகிய 4 பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கும் கட்சி நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வழக்கமாக சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். ஆனால் இந்த முறை வெளியே நடைபெறுவதால் அதன் அடையாளம் மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பொதுக்குழு கூட்டத்துக்கு கலைஞர் அரங்கம் போன்று தத்துருவமாக ‘செட்’ அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு சைவ-அசைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2 தனித்தனி சாப்பாடு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க. தொடங்கப்பட்டபோது பேரறிஞர் அண்ணா தலைவராக இருந்தார். அவர் மறைவுக்கு பிறகு 1969ம் ஆண்டு ஜூலை மாதம் 27ந்தேதி, முதல்முறையாக தி.மு.க. தலைவராக கருணாநிதி பொறுப்பு ஏற்றார். தொடர்ந்து 11 முறை இந்த பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கருணாநிதி மறைவுக்கு பிறகு 2016ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவர் ஆனார். தற்போது அவர் 2வது முறையாக தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முதல்முறையாக தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். தற்போது 2வது முறையாக அவர் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும்போது முதலமைச்சராக உள்ளார். அதாவது முதலமைச்சராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தி.மு.க. தலைவராவது முதல்முறை ஆகும். 11வது முறையாக தி.மு.க. தலைவராக கருணாநிதி இருந்தபோது, அவர் உடல் நலம் இல்லாமல் இருந்தார். அப்போது கட்சியின் செயல் தலைவர் பதவியையும் மு.க.ஸ்டாலின் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘‘உழைப்பு உழைப்பு உழைப்பு

தி.மு.க. தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் “உழைப்பு உழைப்பு உழைப்பு – அது தான் மு.க.ஸ்டாலின்” என மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *