செய்திகள்

தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு

மார்க்சிஸ்ட் – மதுரை, திண்டுக்கல்;

கம்யூனிஸ்ட் – நாகை, திருப்பூரில் போட்டி

சென்னை, மார்ச் 12–

தி.மு.க. கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு உறுதியாகியுள்ளது.

அதன்படி, தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 10 தொகுதிகள், கம்யூனிஸ்டு 2 தொகுதிகள், மார்க்சிஸ்ட் 2 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகள், ம.தி.மு.க. 1 தொகுதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 தொகுதி, கொங்கு மக்கள் தேசிய கட்சி 1 தொகுதியிலும் போட்டியிட உள்ளன. எஞ்சிய 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட உள்ளது.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளும் ஒதுக்கி உடன்பாடு கையெழுத்தாகி விட்டது.

இதையடுத்து இன்று மார்க்சிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்து என்பது குறித்து பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

கோவைக்கு பதில் திண்டுக்கல்

அந்த வகையில் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கே.பாலகிருஷ்ணன், “தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ளது. 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவோம். குழப்பம் இல்லை. கடந்த முறை மதுரை, கோவையில் போட்டியிட்டோம். இந்த முறை மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. நாங்கள் கோவையை விட்டுக்கொடுத்தோம், தி.மு.க.வினர் திண்டுக்கல்லை விட்டுக் கொடுத்துள்ளனர்.

அரசியல் ஆதாயத்திற்காகவும், தேர்தல் பத்திர பிரச்சினையை திசை திருப்புவதற்காகவும் சிஏஏ சட்டத்தை அமல்படுத்தி உள்ளது என்றார்.

அதேபோல் தி.மு.க. கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கம்யூனிஸ்ட் கட்சி நாகை, திருப்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனை கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த முறையும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இதே தொகுதிகள் தான் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *