செய்திகள்

தி.மு.க. உரிமை கொண்டாடுவதா? அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கண்டனம்

ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு பிரச்சனையில் வழக்கை தொடுத்து வென்றது அண்ணா தி.மு.க.

தி.மு.க. உரிமை கொண்டாடுவதா?

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கண்டனம்

சென்னை, ஜூலை.30–-

ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு பிரச்சனையில் வழக்கை தொடுத்து வாதாடி வென்றது அண்ணா தி.மு.க என்றும் அதற்கு உரிமை கோரும் தி.மு.கவிற்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் சமூக மறுமலர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு எந்த வகையிலும் ஊறு நேராத வண்ணம் எப்பொழுதும் போல், இனி வருங்காலம் முழுவதிலும், அரசுப் பணிகளிலும், கல்வி நிலையங்களின் அனுமதியிலும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து அமலில் இருக்கத்தக்க வகையில், இந்திய அரசியல் சட்டத்தில் விரைவில் உரிய திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் தமிழக சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் ஜெயலலிதாவால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இட ஒதுக்கீடு பிரச்சனையில் ஜெயலலிதா எடுத்த உறுதியான நடவடிக்கைக்காகத் தான் “சமூக நீதி காத்த வீராங்கனை” என்ற பட்டம் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்டது. ஜெயலலிதாவின் வழியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீடு பிரச்சனையில் எடப்பாடியார் தொடர்ந்து போராடி வருகின்றார்.

இந்நிலையில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு பிரச்சனையில் அண்ணா தி.மு.க. வழக்கு தொடர்ந்து வெற்றிபெற்ற நிலையில் அந்த வெற்றியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி திமுக அரசியல் செய்து விளம்பரம் தேடுவதாக விருதுநகர் மாவட்ட பொறுப்பாளரும், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, யார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கோருவது. வழக்கை தொடுத்து வாதாடி வென்றது அண்ணா தி.மு.க. அதற்கு உரிமை கோருகிறது தி.மு.க. சொந்த புத்தியும் இல்லை. உழைப்பும் இல்லை. அன்று முதல் இன்றுவரை ஒட்டுண்ணி அரசியல் செய்வது தி.மு.க. என்று பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *