27 தீர்மானங்கள் நிறைவேற்றம்: பொதுக்குழுவில் ஸ்டாலின் பேச்சு
மதுரை, ஜூன் 1–
தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவு அலை அதிகமாக வீசுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தி.மு.க. எப்படி நிரந்தரமோ அதுபோன்று தி.மு.க. ஆட்சியும் நிரந்தரம் என்றும் அவர் கூறினார்.
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற்று வருகிறது.
மதுரை உத்தங்குடியில் சுமார் 20 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் திடலில், குளிரூட்டப்பட்ட வசதியுடன் ஏறத்தாழ 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. சுமார் 7 ஆயிரம் பேர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். கட்சியில் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட 8 மண்டலங்களில் உள்ள 76 மாவட்டங்களுக்கும் அரங்கத்தில் தனித்தனி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. கூட்டத்தில் கலந்துகொள்ளும் நிர்வாகிகளுக்கு சைவ, அசைவ உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
100 அடி கொடிக்கம்பம்
சென்னை அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்றத்துடன் பொதுக்குழு நடைபெறும் அரங்கின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. அரங்கின் நுழைவு வாயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து பொதுக்குழுவை தொடங்கி வைத்தார்.
பொதுக்குழு மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
விஜயகாந்துக்கு தீர்மானம்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவித்து தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த், போப் பிரான்சிஸ், மன்மோகன் சிங், என்.சங்கரய்யா, எம்.எஸ்.சுவாமிநாதன், சீத்தாராம் யெச்சூரி, குமரி அனந்தன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முரசொலி செல்வம் உள்ளிட்ட ஏராளமான முக்கிய தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூடவே, உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஒரு சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுக்குழுவில் அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள் என பலரும் பேசுகின்றனர். இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். பொதுக்குழுவில் கருத்தரங்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
தி.மு.க.வில் மேலும் 2 அணிகள்
தி.மு.க.வில் ஆசிரியர்கள், பேராசிரியர்களைக் கொண்ட கல்வியாளர் அணியும், மாற்றுத்திறனாளிகளுக்கான அணியும் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருணாநிதி பிறந்த நாள் செம்மொழி நாள்
1. கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-–ம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்.
2. மக்களின் பேராதரவுடன் தொடர் வெற்றி நாயகராகத் திகழும் முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பாராட்டுகள்
3. இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசு
4. உழவர்கள், – நெசவாளர்கள், – மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரின் வாழ்விலும் புதிய விடியல் தந்த திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பரப்புவோம்
5. தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த தலைவர்களைப் போற்றும் கழக அரசுக்குப் பாராட்டு
6. ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றுள்ள திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைத் தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைப்போம்
7. தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கையாக மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள துணை முதலமைச்சரின் பணி தொடரத் துணை நிற்போம்
8. ஏழை- எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்
9. தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்
10. தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தித் திணிப்பைக் கைவிடுக
11. கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்
12. ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பா.ஜ.க அரசுக்கு கண்டனம்
13. சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இசுலாமியர் சொத்துக்களைச் சூறையாடும் வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுக.
14. ஒன்றிய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்
15. மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் தொடரும் அநீதிகள்
16. மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்டிடுக.
17. சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திடுக.
18. தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது.
19. கவர்னரின் அதிகார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலைநாட்டிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்குக் காரணமான கழகத் தலைவருக்குப் பாராட்டு.
20. துணை ஜனாதிபதியின் விமர்சனத்திற்குக் கண்டனம்
21. அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தோடு மோதும் பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்
22. உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைத்திடுக!
23. மலரட்டும் மாநில சுயாட்சி.
24. பேரிடர் மீட்புப் பணியில் கழக அரசுடன் கழகத்தினரும் துணை நிற்போம்.
25. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என அழகிய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்.
26. அண்ணா தி.மு.க. ஆட்சியின் அவலமான பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைத் தீர்ப்புக்கு வரவேற்பு.
27. வஞ்சக பா.ஜ.க.வையும் துரோக அண்ணா தி.மு.க.வையும் விரட்டியடித்து 2026-–ல் தி.மு.க. ஆட்சி தொடர களப்பணியைத் தொடங்குவோம்.
நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசு
மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசின் கல்வி நிதி ரூபாய் 2,152 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் நிலைப்பாட்டை, இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கும் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் பிரகடனப்படுத்தி எச்சரிக்கை செய்துள்ளார்.
ஒத்திசைவுப் பட்டியலிலுள்ள கல்வித்துறையை ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்ய நினைக்கும் ஒன்றிய அரசுக்கும் அது வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கும் எதிரான சட்டப்போராட்டத்தையும் தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் தொடங்கியிருக்கிறார். பாரபட்சமாகச் செயல்படும் ஒன்றிய அரசை இந்தப் பொதுக்குழு கண்டிக்கிறது.
இந்தித் திணிப்பைக் கைவிடுக
இந்தி மொழித் திணிப்பால் கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவில் 52 மொழிகள் அழிந்து விளிம்பு நிலையில் உள்ளன என்றும், இந்தி பெல்ட்டு பகுதியில் 25 மொழிகள் அழிந்து போயின என்றும், வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூபாய் 1488 கோடியும், எட்டு கோடி மக்கள் பேசும் தமிழுக்கு ரூபாய் 74 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது என்றும் ஒன்றிய அரசை எதிர்த்துக் கழகத் தலைவர் முதலமைச்சர் தொடர்ந்து கண்டித்து வருகிறார்.
ஒன்றிய அரசின் 97 துறைகளில் வெறும் 16 துறைகளில் மட்டும்தான் இந்தியும், ஆங்கிலமும் உள்ளன. மற்ற துறைகளில் இந்தி மட்டும் ஆட்சி செய்கிறது. இந்தச் சூழலில் மேலும் இந்தித்திணிப்பை மேற்கொண்டு, மொழிச் சமத்துவத்தை அழித்து, மீண்டும் ஒரு மொழிப் போரை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. இதனை ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் உறுதியுடன் எதிர்த்து நின்று, தமிழை மட்டுமின்றி அந்தந்த மாநில மொழிகளின் உரிமையையும் நிலைநாட்டும் செயல்பாடுகளைத் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும். இந்தியையும் அதன் அடுத்த கட்டமாக சமஸ்கிருதத்தையும் திணிக்க முயற்சி செய்யும் ஒன்றிய அரசினைக் கண்டிக்கிறது.
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக, இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலமைச்சர் சட்டமன்றத்தில் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை ஒன்றிய அரசு ஏற்று, கச்சத்தீவை மீட்டிட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
சாதிவாரிக் கணக்கெடுப்பு
சாதிவாரிக்கணக்கெடுப்பு மக்களுக்குள் பிளவு மனப்பான்மையை உண்டாக்கும் என்றும், அதைச் செய்ய முடியாது என்றும் ஒன்றிய அரசு இதுவரை மறுத்து வந்ததற்கு மாறாக, தற்போது பீகார் மாநிலத் தேர்தல் உள்ளிட்டவற்றை மனதிற்கொண்டு சாதிவாரிக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தக் கணக்கெடுப்பை முறையாகவும் விரைவாகவும் முழுமையாகவும் நடத்தி மக்களுக்கு அதன் அடிப்படையில் சமூகநீதி வழங்கிடவும் – கிரீமி லேயருக்கான வருமான உச்ச வரம்பை 25 லட்ச ரூபாயாக உயர்த்திடவும், ஒன்றிய அரசை இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதும் கவர்னர்களின் செயல்பாடுகளுக்குக் கடிவாளம் போடப்பட்டு மாநில அரசுகளின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன. கவர்னரிடம் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றத்தின் மகத்தான தீர்ப்புக்கான வழக்கைத் தொடுத்து வெற்றி கண்டு, மாநில உரிமைகளை நிலைநாட்டிய இந்தியாவின் ஜனநாயகக் காவலராம் முதலமைச்சருக்கு இப்பொதுக்குழு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.
அரசியல் சட்டத்துக்கு உரிய மதிப்பளித்து அதன்வழி தரப்பட்ட தீர்ப்பை மதித்து நடக்காமல், மாநிலங்களுக்குப் பிரச்சினை தர ஜனாதிபதி மூலம் முயற்சிக்கும் ஒன்றிய அரசை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழில் பெயர்
தமிழை வளர்க்கவும், தமிழினத்தைக் காக்கவும், தமிழ் நாட்டைப் பேணவும், இனிவரும் காலங்களில் தமிழர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர்களைச் சூட்டவும் – வணிகப் பெருமக்கள் தமிழ்நாட்டில் உள்ள கடைகளின் பெயர்ப் பலகைகளில் தமிழில் பெயர் எழுதவேண்டும் எனவும் இப்பொதுக்குழு அனைவரையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
ஒன்றிய அரசின் வஞ்சகத்திற்கு முழுமையாகத் துணை போகும் அண்ணா தி.மு.க.வையும் தமிழ்நாட்டு மக்கள் கடந்த தேர்தல்களில் தொடர்ந்து புறக்கணித்து வரும் நிலையில், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வஞ்சக பா.ஜ.க.வையும், துரோக அண்ணா தி.மு.க.வையும் முழுமையாக விரட்டியடித்து, முதலமைச்சர் தலைமையிலான நல்லாட்சி தொடர்ந்திட அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறக் கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும் இன்று முதல் தேர்தல் பணிகளை விரைவுபடுத்தி, அயராது பாடுபடுவோம்! தலைவரை மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர வைக்க இப்பொதுக்குழு சூளுரைக்கிறது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கழகத்தின் சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டிகள் மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை கழகத்தின் உறுப்பினராக இணைத்திட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. வீடு வீடாகச் சென்று அரசின் திட்டங்களையும், உரிமைப் போராட்டங்களையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டின் வாக்காளர்களை ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பில் இணைப்பதற்கான செயல்களை மேற்கொண்டு, அடுத்து வரும் இரண்டு மாதங்களில் மாவட்ட – பகுதி – நகர – ஒன்றிய – பேரூர் – வட்ட – கிளை கழகச் செயலாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை நிறைவு செய்திட வேண்டும். அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் தொடங்கி, பாக முகவர்கள் வரை கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளும் இதில் முழுமூச்சாக உழைத்திட வேண்டும்.
புதிய உறுப்பினர் சேர்க்கைப் பணியை தொகுதி பார்வையாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் முழுமையாகக் கண்காணித்து வெற்றிகரமாக்கிட வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது என்று சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.