செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் செய்ததை சொல்ல முடியுமா? ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி

கலசபாக்கம், மார்ச் 22–

தி.மு.க. ஆட்சியில் செய்தது என்ன என்று சொல்ல முடியுமா? என்று ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (21–ந் தேதி) திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:–-

அண்ணா தி.மு.க. தலைமையில் கூட்டணி வலிமையான கூட்டணி, வெற்றிக்கூட்டணி. நம்முடைய கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளெல்லாம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்பதற்காக ஒருமித்த கருத்தோடு கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். நமது வெற்றி வேட்பாளர் வி. பன்னீர்செல்வத்துக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்

எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில், நாட்டு மக்களுக்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தோம் என்றும் பேசுவதில்லை. இல்லாவிட்டால், தேர்தல் முடிந்த பிறகு என்ன செய்வோம் என்றும் சொல்வதில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வரமாட்டார்கள், அதனால் சொல்லமாட்டார்கள். நாம் உங்களுடைய ஆதரவோடு ஆட்சிக்கு வருகிறோம், அதனால் நாம் என்னென்ன செய்வோம் என்று சொல்கிறோம்.

ஆனால் தி.மு.க. ஆட்சி அதிகாரத்திற்கு வருவதென்றால், அவர்களின் குடும்பம்தான் வரும். தி.மு.க. கட்சியல்ல, கார்ப்பரேட் கம்பெனி. அதற்கு சேர்மேன் ஸ்டாலின் ஆவார். உதயநிதி, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் டைரக்டர்கள், வேறு யாரையும் அந்த கம்பெனியில் சேர்க்க மாட்டார்கள், குடும்பம்தான் இருக்கும், குடும்பம்தான் அதிகாரத்திற்கு வரவேண்டும், குடும்பம்தான் கொள்ளையடிக்க வேண்டும். அதுதான் அவர்களுடைய தொடர் கதை, வரலாறு.

எல்லாம் ‘நிதி’ தான்

கருணாநிதி இருந்தார், அதற்குப் பிறகு ஸ்டாலின், அதற்குப் பிறகு உதயநிதி, அதற்குப் பிறகு இன்பநிதி. பெயரைப் பாருங்கள், நிதி, நிதி என்றுதான் பெயர். நம்மைப் போல சுப்பிரமணி, பழனிசாமி, கருப்புசாமி, நல்லசாமி என்றெல்லாம் வைப்பதில்லை. எல்லாம் நிதி, நிதி. அவர்களுக்கு மனதில் இருப்பதெல்லாம் நிதிதான். மக்களைப் பற்றி கவலையில்லை. ஆக, ஸ்டாலின் குடும்பம் அது ஒரு பரம்பரையாக ஆட்சியில் இருக்க வேண்டும், அதிகாரத்தில் இருக்க வேண்டுமென்று வாரிசு அரசியலுக்காக கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற சட்டமன்றத் தேர்தலாக இருக்கும்.

ஸ்டாலின், எப்படியாவது மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று தவியாய் தவிக்கிறார். நல்லது செய்தால் மக்கள் மனதில் இடம் பிடித்து விடலாம், கெட்டது செய்தால் எந்தக் காலத்திலும் இடம்பிடிக்க முடியாது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா இருவரும் நாட்டு மக்களுக்கு செய்த சேவைகளின் காரணமாக மக்கள் மனதில் இன்று வரை இடம் பிடித்துள்ளனர்.

கருணாநிதி ஏன் நாட்டு மக்கள் மனதில் இடம் பிடிக்கவில்லை என்றால் அவர் தன் வீட்டு மக்களுக்கு மட்டுமே நன்மை செய்தார். நம்முடைய வெற்றி வேட்பாளர் நல்ல மனம் படைத்த அருமை சகோதரர் பன்னீர் செல்வத்துக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *