அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
சென்னை, ஜன. 5–
தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் 7,387 ஏக்கர் கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நேற்று ஆணையர் அலுவலகத்தில், 38 மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பணியாற்றும் தனி வட்டாட்சியர்களின் (ஆலய நிர்வாகம்) சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தனி வட்டாட்சியர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட நில மீட்பு மற்றும் நில அளவை பணிகள் குறித்தும், தனி நபர்கள் பெயரில் தவறுதலாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட இனங்கள் மற்றும் வருவாய்த் துறையில் கணினி சிட்டா தயாரிக்கும் போது தவறுதலாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட இனங்களை திருக்கோயில்கள் பெயரில் மீண்டும் பெயர் மாற்றம் செய்ய எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இந்த சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சமய நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கும் பணிகள் மற்றும் திருக்கோயில் நிலங்களை அளவீடு செய்து பாதுகாக்கும் பணிகளை மேற்கொள்ள வருவாய் துறையின் மூலம் 38 தனி வட்டாட்சியர்கள், 172 உரிமம் பெற்ற நில அளவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மேலும், இப்பணிகளை கண்காணிக்கும் வகையில் தலைமையிடத்தில் 4 மாவட்ட வருவாய் அலுவலர்கள் நிலையிலான தனி அலுவலர்களும் நியமிக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
7,387 ஏக்கர் கோவில்
சொத்து மீட்பு
இந்த அரசு பொறுப்பேற்ற 7.5.2021 முதல் 3.1.2025 வரை ரூ.7,126 கோடி மதிப்பிலான 7,387 ஏக்கர் சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு, திருக்கோயில்களுக்கு சொந்தமான 1,79,389 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் நட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும், UDR தவறுகள் குறித்து மேல்முறையீடு செய்து 623 திருக்கோயில்களுக்கு சொந்தமான 5166.16 ஏக்கர் நிலங்களும், கணினி சிட்டாவில் தவறுகள் திருத்தம் செய்யப்பட்டு 659 திருக்கோயில்களுக்கு சொந்தமான 4,097.67 ஏக்கர் நிலங்களும் அந்தந்த திருக்கோயில்களின் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளன. திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணிகளை துரிதப்படுத்திடும் வகையில் ரூ.1.83 கோடி செலவில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 36 ரோவர் கருவிகள் வாங்கி வழங்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட திருக்கோயில்களின் சொத்துகள் தொடர்பான முழு விவரங்கள் அடங்கிய 2 புத்தகங்கள் துறையால் வெளியிடப்பட்டுள்ளன.
தனி வட்டாட்சியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் துறை செய்து தந்துள்ளது. இறை சொத்து இறைவனுக்கே என்பதனை முழுமையாக செயல்படுத்திடும் வகையில் தனி வட்டாட்சியர்கள் நில மீட்பு மற்றும் நில அளவை பணிகளில் தனி கவனம் செலுத்தி முனைப்போடு செயலாற்றிட வேண்டுமென அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் டாக்டர் இரா.சுகுமார், ந.திருமகள், தனி அலுவலர்கள் (ஆலய நிர்வாகம்) சு.ஜானகி, தி.சுப்பையா, பி.பூங்கொடி, இணை ஆணையர்கள் ச.இலட்சுமணன், பொ.ஜெயராமன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.