திருநெல்வேலி, ஆக.23-–
”சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வேரோடு சாய்ப்போம் என, அமித் ஷா பேசினார். தமிழகத்தில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார்.
தமிழக பா.ஜ.க. கட்சியின் தென்மண்டல பூத் கமிட்டியின் முதல் மாநாடு திருநெல்வேலி தச்சநல்லூரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேடில் வந்து இறங்கினார். அவருக்கு பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும், அண்ணா தி.மு.க. சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, எம்.எல்.ஏ.க்கள் இசக்கி சுப்பையா, கிருஷ்ண முரளி ஆகியோரும் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அமித்ஷா அங்கிருந்து காரில் மாநாட்டு மேடைக்கு வந்து சேர்ந்தார். அங்கு மறைந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் உருவப்படத்திற்கு அமித்ஷா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசும்போது கூறியதாவது:-
தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதா கிருஷ்ணன் துணை ஜனாதிபதி பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ளார். பிரதமர் மோடி எப்போதும் தமிழ் மண்ணையும், தமிழ் மக்களையும், தமிழ் மொழியையும் நேசிப்பவர். அதேபோல் பா.ஜ.க. கூட்டணியில் தான் அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கினோம்.
13 மொழிகளில்
திருக்குறள் மொழிபெயர்ப்பு
பிரதமர் மோடி தமிழையும், தமிழ் மண்ணையும் உணர்ந்தவராக இருக்கிறார். மன்னன் ராஜேந்திர சோழனுக்கு கங்கை கொண்ட சோழபுரத்தில் சிலை அமைப்பதாக கூறி பெருமை சேர்த்தார். அதுபோல் கங்கையில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து பிரகதீஸ்வரர் ஆலயத்தில் அபிஷேகம் செய்தார். காசியில் தமிழ் சங்கமம் நடத்தப்படுகிறது. திருக்குறளை 13 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து தமிழகத்திற்கு மோடி பெருமை சேர்த்து உள்ளார்.
மதத்தின் பெயரால் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த பயங்கர வாதிகளை, அவர்களது இருப்பிடங்களிலேயே அழித்து, மோடி அரசு சாதனை படைத்து இருக்கிறது.
ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பயங்கரவாதிகளின் முதுகெலும்பை உடைத்து இருக்கிறார். ஆபரேஷன் மகாதேவ் மூலம் பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை அழித்து இருக்கிறார்.
திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. அதன் வழியில் மோடி ஆட்சி நடத்தி வருகிறார்.
நாடாளுமன்றத்தில் 130-வது சட்டத்தில் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த சட்டம் கொண்டு வந்தால் பிரதமர், முதல்-மந்திரிகள், அமைச்சர்கள் யாரும் 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களின் பதவி பறிக்கப்படும். இதற்காக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு குரல் கொடுத்து குதிக்கிறார்கள்.
அவர்களை நான் கேட்கிறேன். தமிழகத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி, செந்தில்பாலாஜி பல மாதங்களாக சிறையில் இருந்தனர். அவர்களால் ஆட்சியாளர்களாக இருக்க முடியுமா?, ஜெயிலில் இருந்து கொண்டே ஆட்சி நடத்த முடியுமா?. இந்த சட்டத்திருத்தத்தை மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்க்கிறார். அவர் இந்த சட்டத்திருத்தத்தை கருப்புச்சட்டம் என்று கூறுகிறார். கருப்புச்சட்டம் என்று கூறுவதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. உரிமையும் இல்லை. ஏனெனில் அவர் தான் இருட்டு, கருப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தியாவிலேயே ஏராளமான ஊழல்களை தி.மு.க. அரசு செய்து வருகிறது. இந்த அரசின் ஊழல் பட்டியல் நீளமானது. டாஸ்மாக், எல்காட், போக்குவரத்து, இலவச வேட்டி- சேலை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்திலும் ஊழல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் 7,980 பூத்களை சேர்ந்த பொறுப்பாளர்களான 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து உள்ளீர்கள். உங்களிடம் சொல்கிறேன். கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 18 சதவீதம் வாக்குகள் பெற்று இருந்தோம். அ.தி.மு.க. 21 சதவீதம் வாக்குகள் பெற்றது. ஒட்டுமொத்தமாக 39 சதவீதம் வாக்குகள் பெற்றோம். நீங்கள் இன்னும் உழைத்தால் நாம் எளிதில் வெற்றி பெற்று விடலாம்.
நமது கூட்டணியை ஆகாத கூட்டணி என்று மு.க.ஸ்டாலின் சொல்கிறார். இந்த கூட்டணி தமிழக மக்களை மேன்மை அடைய செய்யவும், தமிழ்நாட்டை வளர்ச்சி அடைய செய்யவும், மேன்மைப்படுத்துவதற் காகவும் அமைத்த கூட்டணி ஆகும்.
பா.ஜ.க. ஆட்சி எல்லா இடத்திலும் அமைவதற்கு காரணம் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் தான். இன்னும் தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ளது. பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், ஏழை, எளிய மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை வீடு, வீடாக சென்று சந்தித்து மோடியின் ஆட்சியின் சாதனைகளை எடுத்து சொல்ல வேண்டும். நமது கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்.
இந்தியா கூட்டணியினர் ஒரு கனவு காண்கிறார்கள். அது என்னவென்றால் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்ச ராக்க வேண்டும் என்றும், சோனியா காந்தி, ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்றும் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.
ராகுல் பிரதமராக முடியாது
அது ஒரு போதும் நடக்காது. உதயநிதி ஸ்டாலின் ஒரு நாளும் முதலமைச்சராக வரமுடியாது. ராகுல்காந்தி ஒரு நாளும் பிரதமராக முடியாது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அரசை வேரோடு பிடுக்கி அகற்றுவோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதற்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
![]()





