செய்திகள்

தி.நகர் பனகல் பூங்கா அருகே ரூ.7 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பொதுக்கழிப்பிடம்

Spread the love

சென்னை, ஜன. 11

பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் கோடம்பாக்கம் மண்டலம், பனகல் பார்க் அருகே நாகேஸ்வர ராவ் சாலையில் புதுப்பிக்கப்பட்ட பொதுக்கழிப்பிடத்தை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 872 இடங்களில் 6,797 கழிவறை இருக்கைகள் கொண்ட பொதுக்கழிப்பிடங்கள், 151 இடங்களில் 291 இருக்கைகள் கொண்ட இ டாய்லெட்டுகள், 31 இடங்களில் 94 கழிவறை இருக்கைகள் கொண்ட பயோ டாய்லெட்டுகள், 21 இடங்களில் 90 கழிவறை இருக்கைகள் கொண்ட நம்ம டாய்லெட்டுகள், 19 இடங்களில் 39 கழிவறை இருக்கைகள் கொண்ட பிரைம் டாய்லெட்டுகள், 19 இடங்களில் 49 கழிவறை இருக்கைகள் கொண்ட ஸ்மார்ட் டாய்லெட்டுகள், 132 இடங்களில் 528 கழிவறை இருக்கைகள் கொண்ட எஸ்.எஸ்.எஸ். டாய்லெட்டுகள் என மொத்தம் 1,245 இடங்களில் 7,888 கழிவறை இருக்கைகள் கொண்ட கழிப்பிடங்கள் உள்ளன.

பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்துதல் மற்றும் பராமரிப்பது தொடர்பான வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடனான கூட்டம் கமிஷனர் கோ.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் விருப்பமுள்ள நிறுவனங்கள் பொதுக்கழிப்பிட பராமரிப்பை தங்கள் நிறுவனத்தின் சொந்த செலவில் மேற்கொள்ளவும் விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் தமிழ்நாடு அரசின் விதிகளுக்கு உட்பட்டு தங்களின் விளம்பரங்களையும் மற்றும் வங்கிகள் பணமெடுக்கும் தானியங்கி இயந்திரங்களையும் (ஏடிஎம்) வைத்துக் கொண்டு கழிப்பறைகளை புதுப்பித்து, பராமரித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ரூ. 7 லட்சத்தில் புதுப்பிப்பு

இதன் முதற்கட்டமாக, பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ் கோடம்பாக்கம் மண்டலம், பகுதி 30, வார்டு 136, பனகல் பூங்கா அருகில், நாகேஸ்வர ராவ் சாலையில் அமைந்துள்ள பொதுக்கழிப்பிடம் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் என்ற தனியார் நிறுவனம் மூலமாக ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் பொதுக்கழிப்பிடத்தை கமிஷனர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்த பொதுக் கழிப்பிடம் 904 சதுர அடியில் 4 ஆண்கள் கழிவறைகள், 4 பெண்கள் கழிவறைகள் மற்றும் ஒரு தாய்மார்கள் பாலூட்டும் அறையை கொண்டு, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும். இதில் இரண்டு பகுதி நேர முறையில் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிவர்.

இதேபோன்று, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பொதுக்கழிப்பிடங்களையும் பராமரிக்க விருப்பமுள்ள நிறுவனங்கள் மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தங்களது விருப்பத்திற்கேற்ற கழிப்பறைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டு பராமரிக்கலாம் என கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் துணை ஆனணயாளர் (பணிகள்) பி.குமாரவேல் பாண்டியன், தலைமை பொறியாளர் எஸ்.ராஜேந்திரன், மண்டல அலுவலர் பரந்தாமன், செயற்பொறியாளர் முருகன், ZRII நிறுவன மேலாண்மை நிர்வாகி திருமதி.விஜயலட்சுமி ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *