சிறுகதை

திறமை – ஆவடி ரமேஷ்குமார்

என் நண்பன் குணா எனக்குப் போன் செய்த போது நான் என் அம்மா, அப்பாவுக்கு மாத்திரைகள் வாங்குவதற்காக மருந்து கடையில் நின்று கொண்டிருந்தேன்.

“ஹலோ குணா… என்ன விசயம்” என்று கேட்டேன்.

“சந்தோஷமான நியூஸ் தான். இந்த வார ‘சந்தனம்’ வார இதழ்ல என்னுடைய பத்தாவது நாவல் பிரசுரமாயிருக்குடா!” என்றான்.

எனக்கு அவன் மேல் பொறாமையாய் இருந்தது. சந்தோஷப்பட முடியவில்லை. இருந்தாலும் இருபது வருட நண்பன்.

“ரொம்ப சந்தோஷம். இப்பவே கடைக்குப் போய் உன் நாவலை வாங்கிப் படிக்கிறேன்” என்று சொன்னேன்.

அவன் போனை வைக்கவில்லை.

“ஏன் கௌதம், நீயும் நூறு சிறுகதைகள் எழுதின எழுத்தாளன் தானே… ஏன் இன்னும் நீ உன் முதல் நாவலை எழுத ஆரம்பிக்கலை?” என்று கேட்டான்.

நான்கு வருடங்களுக்கு முன் குணா தன் முதல் நாவலை சந்தனம் வார நாவல் இதழில் எழுதியிருந்தான்.

தொடர்ந்து அதிரடியாக எழுதி இப்போது பத்தாவது நாவலுக்கு வந்து விட்டான்.

“என்ன கௌதம் பேச மாட்டேங்கிறே?”

“அது வந்து குணா…” என்று ஆரம்பித்த நான், என்னால் எழுத முடியாத என் குடும்ப சூழ்நிலையை அவனிடம் விளக்க ஆரம்பித்தேன்.

பாத்ரூமில் தவறி விழுந்து இடுப்பெலும்பு உடைந்து படுத்த படுக்கையாய் இருக்கும் என் அம்மா; கிட்னி பெய்லியரால் அவதியுறும் என் அப்பா; குடிகார புருஷனின் அடி உதைக்கு பயந்து அவருடன் வாழ மறுத்து எங்கள் வீட்டுக்கு வந்து வாழாவெட்டியாய் வாழும் அக்கா; நல்ல வேலை கிடைக்காமல் வேதனையில் வாடும் என் தம்பி; இந்த பிரச்சினைகளால் மலர்விழியை எனக்கு பெண் தர மறுக்கும் என் தாய் மாமன்…

கேட்ட குணா “ஸாரிடா கௌதம். இந்த சூழ்நிலையில் ஒரு துணுக்கு கூட எழுத மூடு வராது. வெரி ஸாரி!” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான்.

இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில் மீண்டும் குணா எனக்குப் போன் செய்தான்.

“என்னோட பதினோறாவது நாவல் வந்து விட்டது கௌதம் அதே சந்தனம் வார இதழ்ல” என்றான்.

இப்போது எனக்கு ஆச்சரியம்; அதே சமயம் என்னுள் பொறாமைத் தீ பற்றி எரிய ஆரம்பித்தது.” ச்சை!” என்று சலித்துக் கொண்டேன்.

கடைக்குச் சென்று அந்த பதினோறாவது நாவலை வாங்கி வந்து படிக்க ஆரம்பித்தேன்.

படிக்க படிக்க … அதிர்ந்தேன்!

ஆம்! குணா என்னை இந்த நாவலில் ஹீரோவாக்கி என் குடும்ப சூழ்நிலைகளை வில்லன்களாக்கி அதிலிருந்து நான் எப்படி மீண்டு என் மாமன் மகள் மலர்விழியை கரம் பிடிக்கிறேன் என்று அற்புதமாக விவரித்து வேறு பெயர்களில் எழுதியிருந்தான்.

இப்போது என் மனதில் இருந்த பொறாமைத் தீ அணைந்து குணாவின் மேல் ஆச்சரியத் தீ பற்றிக் கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *