சிறுகதை

திரை மறைவாய்! | டிக்ரோஸ்

ரத்தன் திறமையான போலீஸ் அதிகாரி.

இது உலகிற்கு தெரிய வரும் முன் ரத்தன் கல்லூரி மாணவனாக இருந்தான்.

அப்போதே இவனது திறமை, நேர்மையை வெளிபடுத்தி உடன் இருந்தவர்கள் மீது அன்பு காட்டியவன்.அனைவர் அன்பையும் ஆதரவையும் பெற்றவன்.

இவற்றை கண்டு இவன் திறமையான காவல்துறை அதிகாரியாக வருவான், வர வேண்டும் என்று ஒரு உயர் பதவியில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி நினைத்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ரத்தனைத் தனிமைப்படுத்தி அவனுக்கு விசேஷ பயிற்சிகள் தந்து ரகசிய பிரிவு ஒன்றில் பணிஅமர்த்தினார்.

திரைப்பட நாயகனைப் போல அதிவேக கார் ஓட்டுதல் முதல் …. துப்பாக்கி ஏந்தி ரவுடிகளை நிலைகுலைய வைப்பது வரை ரத்தனுக்கு அத்துபடியானது.

அப்பயிற்சி காலத்தில் சங்கீதா என்று இவன் வயது பெண்ணும் பயிற்சி பெற்றாள். அதிகம் பேசிக் கொள்ள வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும் சேர்ந்து களப்பணியாற்ற வாய்ப்பு வருமா? என ரத்தன் ஏங்கியதுண்டு!

ரத்தன் மிக இளம் வயதில் அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்றது, வயது வித்தியாசமின்றி அனைவரும் இவனிடம் மனம் விட்டு பேசிக் கொண்டிருப்பது சங்கீதாவிற்கு அவன் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது.

சேர்ந்தே பயிற்சிகளில் ஈடுபடும் போது தனது திறன் 10 மடங்கு அதிகரித்து செயல்பட்டதை அவளது முக மலர்ச்சியே காட்டிக் கொடுத்துவிடும்.

ரத்தன் கேள்விகள் கேட்டால் மணிக்கணக்கில் பதில் சொல்ல சங்கீதா ஆசைப்படுவாள். ஆனால் கடும் பயிற்சியின் போது வேர்த்து விறுவிறுத்து கொண்டிருக்கையில் பேச நேரமா கிடைக்கும்!

****

அந்தக் கல்லூரி வளாகத்தில் 2 வாரங்களில் நடைபெற இருக்கும் 150 வது ஆண்டு கலை விழாவை துவக்க பிரதமர் நேரம் ஒதுக்கியிருந்தார். பாதுகாப்பு அம்சங்களை நிலைநிறுத்திக் கொண்டு இருந்த காவல்துறைக்கு உதவ சிறப்பு ரகசிய காவலர்கள் ரத்தனுக்கும் சங்கீதாவுக்கும் அழைப்பு வந்தது.

அந்தப் பின்னணியில்தான் அக்கல்லூரி வளாக கேன்டீனில் இருவரும் மாணவர்களுடன் மாணவர்களாக சமோசா, டீ சாப்பிட்டபடி மிக நெருக்கமாக அந்த சிறு டேபிளில் அருகருகே அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.

காதுகளும் கண்களும் வெளியே நடப்பவற்றை கவனித்தபடி இருந்தது. ஆனாலும் இருவர் இதயமும் சற்றே துடிதுடிப்புடன் தங்களது பள்ளிக்கால கதைகளை பரிமாறிக் கொண்டிருந்தனர்.

மறுநாள் வழக்கம்போல் தங்களது இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு ஆடம்பர காரில் விலை உயர்ந்த ஆடைகளில் அதற்கு இணையான கைப்பை, கூலிங் கிளாஸ் என ஒரு பெண் வந்தாள். அவளும் மெல்ல கேண்டீன் நோக்கி வந்தாள்.

‘என்ன அப்படி முறைக்கிற’ எனக் கேட்டது சங்கீதா!

‘இல்ல, இந்த பிப்ரவரி மாத மிதமான வெயிலுக்கு இத்தகைய கூலிங் கிளாஸ் போட்டு முக அடையாளத்தை மறைத்தப்படி வர அப்பெண்மணிக்கு என்ன காரணம் இருக்கக்கூடும்’ என யோசிக்கிறேன்!

‘டேய், மழுப்பாத…’

‘… இல்ல இவ பிரதமர் நிகழ்வுக்கு வர இருக்கும் பிரபலம் யாராவதாக இருக்கலாம்…’ என ரத்தன் கூறிக் கொண்டே இருக்கையில் அந்த பெண் கேன்டீனில் நுழைந்தாள். இதர மாணவர்களின் பேச்சு நொடியில் மவுனமானது. ஒரு வரவேற்பு விசிலும் ஒலித்தது.

நாகரீக கண்ணாடியை ‘படக்’கென மூடிவிட்டு தனது ஆடம்பரத் தோல் பையில் வைத்துவிட்டு ‘டீ’ வாங்கிக்கொண்டு இவர்கள் பகுதிக்கு அருகே இருந்த டேபிளில் அமர்ந்தாள்.

மெல்ல சிரித்தபடி ரத்தனிடம் ‘ ஹாய், இங்கிலீஷ் டிபார்ட்மெண்ட்டுக்கு வழி காட்ட முடியுமா..?’ எனக் கேட்டாள்.

சுதாரித்துக் கொண்ட சங்கீதா ‘ஓ எஸ்…’, நாங்களே அழைத்துச் செல்கிறோம்…’ என உதவிக்கரம் நீட்டினாள்.

டீ சாப்பிட்டுக் கொண்டுருக்கையில் சங்கீதா வெளியே இருந்த ரெஸ்ட் ரூம் சென்று வரும் போது அங்கிருந்த மாணவர்களிடம் இங்கிலீஷ் டிபார்ட்மெண்ட் செல்லும் பாதையை தெரிந்து கொண்டு வரும்போது ரத்தனும் வந்த அழகியும் செல்போனில் மும்மரமாக எதையோ சேர்ந்தே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள்.

‘சரியான ஜொள்ளு பார்ட்டி…’ என மனதிற்குள் திட்டியபடி விறுவிறுவென அவர்களை நெருங்கி ‘வா… உன்னை அழைத்துச் செல்கிறேன்…’ என அழைத்தாள்.

‘அவளோ, ரத்தனுடன் வந்தால்தான் தனக்கு பாதுகாப்பு என்பது போல் அவனை நோக்கினாள்.

அவனும் ‘நானும் வரேன்’ என்று கூறியபடியே தனது ‘ பேக் பேக்கை ‘ தோளில் மாட்டிக் கொண்டு புறப்பட்டான்.

****

ஆங்கில டிபார்ட்மெண்ட் விழாக்கோலமாய் இருந்தது. மாணவர்களின் குதூகலம், மைக் டெஸ்டிங், சேர்கள் வரிசையாய் அணிவகுப்பு என விழாவுக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடந்து கொண்டிருந்தது.

ஆங்கிலத் துறையின் தலைவர் பேராசிரியர் ஜெயராம் கூலிங்கிளாஸ் அழகியை பார்த்தவுடன் பரவசமாகி ‘ஹலோ மேடம், வாட் எ சர்ப்ரைஸ்…’ என வரவேற்றார்.

‘மாணவர்கள் பேண்டு வாத்தியம் முழங்க உங்களை வரவேற்க மெயின் கேட் அருகே இருக்க எப்படி நீங்க தனியா இப்படி…’ எனக் கேட்டுக் கொண்டிருக்கையில் ஒரு மாணவி ‘ ஹலோ மேடம் ஏடிஜிபி, சாரி வி மிஸ்ட் யூ..’ என கூறுகையில்

‘இல்லை… நீங்க யாரும் தப்பு செய்யல… நான்தான். இந்தக் கல்லூரிக்கு கேன்டீன் பகுதி வழியில் வந்துவிட்டேன்.

எனக்கு உதவ சங்கீதாவும் ரத்தனும் என்னுடன் வந்து விட்டார்கள் என இவர்களையும் அறிமுகப்படுத்தினாள்.

‘என் பெயரையுமா அவளிடம் சொல்லி விட்டான்…’ இது சங்கீதா.

‘எங்கள் பெயர் இவளுக்கு எப்படி தெரியும்?’ என யோசித்தான் ரத்தன்!

இவர்கள் யார், இங்கு இவர்களுக்கு என்ன வேலை? என மண்டையை குழப்பிக்கொண்ட பேராசிரியருக்கு அடுத்த சில நிமிடங்களில் நிகழ்ச்சியை துவக்கியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தால் அதில் மூழ்கினார்.

ஒரு வழியாக பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி வெற்றியாளர்களுக்கு உமா பரிசுகளை தந்து விட்டு, மாணவர்களுக்கு உரிய அட்வைசை நளினமாக பேசியும் விட்டு மீண்டும் இவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.

தனது நண்பர்களுடன் கல்லூரி வளாகத்தை சுற்றிப் பார்க்க ஆசைப்படுவதாக கூறியபடி மூவரும் மீண்டும் கேன்டீனில் தஞ்சம் புகுந்தனர்.

****

‘ மேம்…’ என பேசத் துவங்கிய சங்கீதாவிடம் ‘உமான்னு பேர் சொல்லியே கூப்பிடலாம்’ என உத்தரவே போட்டாள்.

‘ஓகே உமா மேம் எங்களை எப்படி…’ என கேட்ட சங்கீதாவிடம் மழுப்பல் சிரிப்புடன் ‘நாம அடுத்தது பின்புறம் உள்ள கட்டிடத்தின் கூரை தளத்திற்கு செல்ல வேண்டும்’ எனக் கூறினாள்.

விருட்டென எழுந்த ரத்தன் மெல்ல ஒரு மாணவ குழுவை நெருங்கி,

‘பிசிக்ஸ் டிபார்ட்மெண்ட் மாணவர் இருக்கிறார்களா?’ எனக் கேட்டான். மறு பக்கமாக இருந்த இரு மாணவிகளை சுட்டிக்காட்டினர்.

ரத்தன் அவர்களிடம் நெருங்கினான். தன் நெருக்கடியை விவரிக்க அதில் ஒரு ‘ கொழு கொழு’ முக மாணவி உதவத் தான் ரெடி என கூறியபடி ரத்தனுடன் பின் தொடர்ந்தாள்.

உமாவிடம் வந்த மாணவி மெல்ல, ‘சார் எல்லாத்தையும் சொல்லிட்டார், வாங்க நான் உதவுரேன்…’ என்றாள். சங்கீதாவுக்கு ஷாக்… எதைச் சொன்னான்! உமாவிற்கோ ‘என்னவெல்லாம் உளறினானோ’, மெல்லத்தங்கள் உடைமைகளுடன் வெளியேறினர்.

‘குளு குளு’ என பசுமையான அச்சோலையின் நடுவே அந்த 4 மாடி கட்டிடம் தென்பட நால்வரும் வேகவேகமாக சென்றனர். இப்படி 3 அழகிகள் பின்னால் ரத்தன் வீரநடை போட்டபடி பின் தொடர்ந்ததை வகுப்புகளில் ஜன்னல் வழியே பலர் பார்த்துக் கொண்டிருந்தனர் .அது சங்கீதாவுக்கு எரிச்சலை தந்தது.

மறுபக்கமாக இருந்த நுழைவு பகுதியை நெருங்கிய போது மீண்டும் சலனமே இல்லை. மவுனம் நிலவியது.

மேல் தளம் செல்ல படிகளில் ஏறிக் கொண்டிருக்கையில் மாணவி உமா மேடமிடம் ‘பைனாகுலர்’ வேண்டுமா…? ‘பரவாயில்லை சும்மா பார்த்தாலே போதும்…’

மேலும் பேச்சை வளர்க்காமல் கடைசித் தளத்திற்கு வந்து விட்டனர்.

‘இந்தத் தளம் ஆராய்ச்சியாளர்கள் தளம்… தற்சமயம் யாருமில்லை ‘ என்று உறுதி தந்துவிட்டு

‘ நீங்க ஒவ்வொருவராக இந்த சிறு படிக்கட்டுகளில் மேலே சென்றால் மொட்டைமாடிக்கு செல்லலாம், நான் வரமாட்டேன்…’ எனக் கூறிவிட்டு அங்கிருந்து நழுவினாள்.

மொட்டை மாடியில் காய்ந்த இலைகளும் பல ஆண்டுகால தூசிகளும் தேங்கிய மழை நீர் விட்டுச் சென்ற பாசியின் அடையாளமுமாய் இருந்த அப்பகுதியில் தனியாக மூவர் மட்டும்.

உமாவும் சங்கீதாவும் ஒருங்கே ரத்தனிடம் கேட்டது அந்த மாணவியிடம் என்ன சொல்லி இங்கே நம்மை அழைத்து வர வைத்தாய்…?

ரத்தன் அது பற்றி அலட்டிக் கொள்ளாமல், ‘நீங்க உங்க பணியை செய்யுங்கள். நானும் சங்கீதாவும் துணை நிற்கிறோம்’ என்று போலீஸ் விரைப்புடன் பதில் தந்தான்.

உமா சிரித்து விட்டாள், ‘‘சரி, சரி …. அட் ஈஸ் ப்ளீஸ், இப்ப விவரமா சொல்லு ரத்தன்’’ என்றாள்.

அவகிட்ட நீங்க உங்க அடுத்த படத்திற்கு Shooting Spotக்கு இடம் தேடி வந்ததாகவும் மேலே இருந்து பார்க்க பிசிக்ஸ் டிபார்ட்மெண்ட் மொட்டை மாடிக்கு அழைத்து செல்ல உதவி கேட்டேன்.

‘ நான்…’ எனக் கேட்டாள் சங்கீதா.

‘ உதவி இயக்குனர் மற்றும் ஹீரோயினின் தோழி…’ ‘

‘‘அப்போ நீ…’’

‘நான் ஸ்டண்ட் மாஸ்டர்…’.

ஒருவழியாக மூவரும் தங்களது பணிகளை முடித்துக் கொண்டு உரிய அதிகாரிகளிடம் எல்லா விவரங்களையும் தந்து விட்டு அடுத்த சவால்களுக்கு தயாரானார்கள்.

****

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது என்ன தெரியுமா?

உமா சிபிஐக்கு சென்று விட்டாள். கூடவே சங்கீதாவும்!

ரத்தன் தன் குருநாதர் மற்றும் நல்ல நண்பரின் மகளை திருமணம் செய்து கொண்டான்!

இவர்களை மீண்டும் சேர்ந்து பார்க்க ஆசைப்பட்ட பிரபல திரைப்பட கதாநாயகி விஸ்தரா பற்றிய பல சுவையான சம்பவங்களுடனான கதையை வேறு ஒரு தருணத்தில் நிச்சயம் சொல்கிறேன்.

இவர்களை மாடிக்கு அழைத்துச் சென்ற மாணவி இன்றய பிரபல நடிகை விஸ்தரா!

****

decrose1963@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *