சென்னை, ஜூலை 31–
திரைப்பட தயாரிப்பாளர்கள் பாலாஜி மற்றும் ரவீந்தர் சந்திரசேகர் வீடு, அலுவலகத்திலும் அமலாக்கத்துறை இன்று 2வது நாளாக ரெய்டை தொடர்கிறது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீடு, தயாரிப்பாளர் பாலாஜி கபா வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை தொடர்ந்து வருகிறது.
சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி கபா (வயது 48). இவர் சினிமா தயாரிப்பாளராக இருந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் என்ற படத்தை தயாரித்து உள்ளார். பாலாஜிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு சினிமா தயாரிப்பாளரும், நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவிந்தர் சந்திரசேகர் அறிமுகமானார். நாளடைவில் தொழில் தொடங்குவதற்காக பார்ட்னட்ராக சேரும் அளவுக்கு நெருங்கி உள்ளனர்.
கடந்த ஆண்டு திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் தொடங்க இருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என்றும் ஆசை வார்த்தைகள் கூறி, போலியான ஆவணங்களை காண்பித்து, தன்னை ஏமாற்றி ரூ.16 கோடியை பெற்றுக் கொண்டதாக ரவீந்தர் சந்திரசேகர் மீது பாலாஜி புகார் அளித்தார்.
2 வது நாளாக ரெய்டு
புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, சென்னை அசோக்நகர் பகுதியில் வசித்து வந்த சினிமா தயாரிப்பாளரும், நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரவீந்தர் லிப்ரா புரொடக்ஷன் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்து பல சினிமா படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று ரவீந்தர், பாலாஜி கபா ஆகிய இருவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் தொழிலதிபர் பாலாஜி, வங்கி அதிகாரி வீடு என 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
இந்நிலையில், சினிமா தயாரிப்பாளர் பாலாஜி வீடு, வளசரவாக்கத்தில் உள்ள பாலாஜியின் அலுவலகத்திலும் 2 வது நாளாக சோதனை தொடர்கிறது. அதேபோல கேகே நகரில் உள்ள தயாரிப்பாளர் ரவீந்தர் வீடு, அசோக் நகரில் உள்ள அவரது அலுவலகத்திலும் அமலாக்கத்துறை ரெய்டு 2வது நாளாக தொடர்கிறது.