சினிமா

திரைக்கு வரும் 40 புதிய படங்கள்!

சென்னை, ஆக. 25-

கொரோனா ஊரடங்குக்குப் பின் 4 மாதங்கள் கழித்து தமிழகத்தில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியீடுக்கு தயார் நிலையிலிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களின் படங்களும் இந்த வரிசையில் இருப்பது அவர்களின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியளித்துள்ளது.

தமிழக அரசின் திரையரங்கு திறப்பு உத்தரவுக்குப்பின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க திரையரங்குகள் தயார் நிலையில் இருந்தாலும், ஒரு சில ஊர்களில் புதிய படங்கள் எதுவும் வெளியிடப்படாததால் திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பழைய திரைப்படங்களை பார்க்க ரசிகர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டமாட்டார்கள் என்பதால், 27-ந் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) பிறகு சில புதிய திரைப்படங்கள் திரைக்கு வரும் என்பதால் பெரும்பாலான திரையரங்குகள் அதன் பின்னே திறக்கப்படும் என அறிவித்துள்ளது.

திரையரக்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படங்கள் வரிசையில் விஜய்சேதுபதியின் மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம் போன்ற திரைப்படங்கள் முன்னிலை வகிக்கின்றது . லாபம் திரைப்படத்தை இயற்கை மற்றும் பூலோகம் போன்ற படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் எழுதி இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி மற்றும் சுருதிஹாசன் நடித்துள்ள இந்த திரைப்படம் அடுத்த மாதம் 10-ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்டர்

அருண் விஜய், ஸ்டெபி படேல் மற்றும் ரெஜினா கெஸன்ட்ரா ஆகியோருடன் இணைந்து நடிக்கும் திரைப்படம் பார்டர். இப்படத்தை ஈரம், வல்லினம் மற்றும் ஆறாது சினம் போன்ற படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

டாக்டர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு, தொகுப்பாளினி அர்ச்சனா, தீபா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். திரையரங்குகள் மூடப்பட்டதால், இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என்று தகவல்கள் கசிந்தன. தற்போது திரையரங்கு திறக்கப்பட்டுள்ளதால், இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிவகுமாரின் சபதம்

ஹிப்ஹாப் தமிழா இயக்கத்தில் இவரே இசையமைத்து நடிக்கும் திரைப்படம் சிவகுமாரின் சபதம். மதுரி ஜெயின் இந்தப் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படமும் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.

கோடியில் ஒருவன்

ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஆத்மிகா, ராமச்சந்திர ராஜு, பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோடியில் ஒருவன்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாக திரையரங்கு திறப்புக்காக காத்திருக்கிறது.

அரண்மனை 3

சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராசி கண்ணா, சாக்ஷி அகர்வால் மற்றும் ஆண்ட்ரியா போன்ற ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் திகில் திரைப்படம் அரண்மனை 3. முதல் இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் பாகத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்புகள் கடந்த சில நாட்களாக இருந்து வரும் நிலையில் இந்த திரைப்படமும் வெளியீடுக்காக காத்திருக்கின்றது.

தலைவி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கூறும் திரைப்படம் தலைவி. இந்த திரைப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாகவும் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராகவும் நடித்துள்ளனர். எ.ல்.விஜய் இயக்கியுள்ள இந்த திரைப்படம் அடுத்த மாதம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எம்.ஜி.ஆர் மகள், லிப்ட், கூகுள் குட்டப்பா, மெமரிஸ்,முருங்கக்காய் சிப்ஸ், ஹாஸ்டல், குருதி ஆட்டம், பஹிரா, ராக்கி, குதிரைவால், விஷால், ஆரியாவின் எனிமி, மிர்ச்சி சிவாவின் சுமோ, ஒத்தைக்கு ஒத்த, சந்தானம் நடித்துள்ள சபாபதி, சர்வர் சுந்தரம், திரிஷாவின் ராங்கி, விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2, சிருஷ்டி டாங்கே நடித்துள்ள கட்டில், ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஓமன பெண்ணே, இடியட், ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ஜெயில், ஆயிரம் ஜென்மங்கள், ஆர்.கே.சுரேசின் விசித்தி எனக் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையரங்கு திறப்புக்காக காத்திருந்தன. தற்போது திரையரங்கு திறக்கப்பட்டுள்ளதால் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *