சென்னை, மார்ச் 10–
திரு.வி.க நகர் பகுதியில் நண்பரை கத்தியால் தாக்கிய கொலை முயற்சி வழக்கில் 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, பெரம்பூர், கென்னடி சதுக்கம் பகுதியைச் சேர்ந்த பரத் (23) திரு.வி.க நகர் மீன் மார்கெட்டில் மீன் வெட்டும் வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச்சேர்ந்த அவரது நண்பர் கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பரத்தை திருவொற்றியூர், பூங்காவிற்கு அழைத்து சென்று ஒருவரை தாக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார். இதற்கு பரத் எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் பரத் 6–ந் தேதி இரவு அவரது வீட்டின் அருகில் உள்ள நண்பர் வீட்டில் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு ஆட்டோவில் வந்த கார்த்திக் உட்பட சிலர் பரத்திடம் தகராறு செய்து ஒருவரை தாக்க வேண்டும் என நாங்கள் சொன்னால் நீ வரமாட்டியா என கேட்டு தகராறு செய்து கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த பரத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குமார் (எ) ராம்குமார் (28), இளங்கோ (எ) இளா (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.