செய்திகள் விழாக்கள்

திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா: ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் துவக்கினார்

Makkal Kural Official

தஞ்சாவூர், ஜன. 4:

திரு​வை​யாறில் தியாக​ராஜ சுவாமிகளின் 179வது ஆராதனை விழாவினை சென்னை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சுவாமிகள் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் முக்தி அடைந்தார். இங்கு அவரது சமாதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பகுலபஞ்சமி தினத்தில் தியாகராஜசுவாமிக்கு ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவுக்கு தியாகர பிரம்ம மகோத்சவ சபை தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். செயலளார் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் வரவேற்றார். கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் சென்னை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

திருவையாறு மண்ணில், இந்த மேடையில் நினைத்தபடி எல்லோரும் வந்து விட முடியாது. பேசி விட முடியாது. பாடிவிட முடியாது. வாசித்து விட்டு போய் விட முடியாது. அது தியாகராஜ சுவாமிகளுடைய ஆசி இல்லை என்றால் நடைபெறாது. இந்த விழாவை 5 ஜனாதிபதிகள் துணை ஜனாதிபதிகள், கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள் தொடங்கி வைத்துள்ளனர்.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான சியாமா சாஸ்த்ரி, முத்துசாமி தீட்சிதர், தியாகராஜ சுவாமிகள் ஆகியோரில் தியாகராஜ சுவாமிகளுக்கு மட்டும் விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. மற்ற இருவருக்கும் வழங்கப்படவில்லை என்ற கேள்வி எழலாம்.

தியாகராஜ சுவாமிகள் பிறப்பு, வளர்ப்பு, அவர் வாழ்ந்த விதம், அவர் 80 ஆண்டு காலம் வாழ்ந்து இசைக்கும், கீர்த்தனைகளை உருவாக்குவதற்கும் இறையோடு கலந்து வாழ்க்கையை அர்ப்பணித்தார் என அவரது வரலாறு கூறுகிறது.

வால்மீகி 2 ஆயிரத்து 400 சமஸ்கிருத சுலோகங்கள் மூலம் ராமாயண இதிகாசத்தைப் படைத்தார். அதேபோல 2 ஆயிரத்து 400 கீர்த்தனைகளை பாடிய ஒரே மகான் தியாகராஜ சுவாமிகள் மட்டுமே. எனவே சங்கீத மும்மூர்த்திகள் மூவராக இருந்தாலும் கூட, அவர்களில் தலைநாயகராக இருக்கக்கூடிய தியாகராஜ சுவாமிக்கு மிகப் பிரம்மாண்டமாக ஆராதனை விழா இவ்வளவு பெருமையுடனும், சிறப்புடனும் நடந்து வருகிறது.

இந்த விழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. பாரம்பரியத்தை பற்றி எடுத்துச்சொல்ல வேண்டுமானால் தியாகராஜ சுவாமிகள் இயற்றிய 2,400 கீர்த்தனைகளும் ஒரு இசை பாரம்பரியம். இந்த விழாவை தொடர்ந்து நடத்தும் சபையும் ஒரு பாரம்பரியம். அதை நடத்தும் குடும்பத்தினரும் பாரம்பரியம் என்ற 3 பாரம்பரியமும் ஒன்றோடு ஒன்று இணைந்ததால்தான் திருவையாறு மண்ணில் எங்கு பார்த்தாலும் தியாராஜ சுவாமிகளின் புகழ், சங்கீதம், இறை உணர்வு, பக்தி ஆகியவை பரவி இந்த மக்களுக்கும், மண்ணுக்கும் தொடர்ந்து நல்வாழ்வை வழங்கி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நேற்று சீர்காழி சிவசிதம்பரம், பாடகி மகதி உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடர்ந்து 6-ந் தேதி வரை நாள்தோறும் காலை 9 மணியில் இருந்து இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரத்தன கீர்த்தனை வருகிற 7ந்தேதி(புதன்கிழமை) காலை 9 மணி முதல் 10 மணி வரை நடக்கிறது.

இதில் ஆயிரத்துக்கும் அதிகமான இசைக்கலைஞர்கள் ஒருமித்த குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்த உள்ளனர்.

விழாவில் அறங்காவலர்கள் சுரேஷ் மூப்பனார், காமகோடி, டெக்கான் மூர்த்தி, கணேசன், பஞ்சநதம், சுந்தரம், சுதாகர் மூப்பனார், மிதுன் மூப்பனார், தியாக பிரம்ம மகோத்சவ சபை செயலாளர் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராம், பொருளாளர் கணேஷ், உதவி செயலாளர்கள் ராஜகோபாலன். கோவிந்தராஜ், அருண், அசோக்ரமணி, ராஜகோபாலன், ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *