செய்திகள்

திருவில்லிபுத்தூர் அருகே 5 தலைமுறைகளைப் பார்த்த மூதாட்டியின் 101வது பிறந்தநாள் விழா

திருவில்லிபுத்தூர், மார்ச்.5–

திருவில்லிபுத்தூர் அருகே 5 தலைமுறைகளைப் பார்த்த மூதாட்டியின் 101வது பிறந்தநாள் விழாவை அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

மாறிப்போன இயற்கைச் சூழல், மாறுபட்ட உணவு பழக்க வழக்க முறைகள் உட்பட பல்வேறு காரணங்களால் மனித இனம் இன்று 80 வயதைக் கூட எட்ட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழலில் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டியைச் சேர்ந்த மகாதேவன் மனைவி பழனியம்மாள் செஞ்சுரி அடித்து 101வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அத்துடன் 5 தலைமுறைகளையும் கடந்து இருக்கிறார். இவருக்கு 4 மகன்கள், 3 மகள்கள், 19 பேரன், பேத்திகள், 25 கொள்ளுப் பேரன், கொள்ளுப் பேத்திகள், 2 எள்ளு பேத்திகள் உள்ளனர். இவர் இன்றும் ஆரோக்கியத்துடன் தனது பணிகளைத் தானே செய்து வருகிறார்.

மனிதன் எப்படி ஆரோக்கியம் பேண வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து வரும் இம் மூதாட்டியின் 101வது பிறந்தநாளை அவரது வாரிசுகள் அனைவரும் சேர்ந்து திருவில்லிபுத்தூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைத்து கொண்டாடினர். உறவினர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு அவரிடம் இருந்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்றனர்.

இதுகுறித்து பழனியம்மாளின் இரண்டாவது மகன் ராமகிருஷ்ணன் கூறுகையில், எனது தாயின் இந்த ஆரோக்கியத்திற்கு காரணம் அவரது உணவு பழக்கவழக்கங்கள் தான். காலையில் ஒரு இட்லி, மதியம் 200 கிராம் சாதம், இரவு ஒரு தோசை என எளிமையான தனது உணவு பழக்கவழக்கத்தை இன்றும் கடைப்பிடித்து வருகிறார். அத்துடன் அவராகவே அவரது வேலைகளைச் செய்து கொள்கிறார். தினமும் 2 மணி நேரம் நாளிதழ்கள் படிக்கிறார். செய்தி சேனல்கள் பார்க்கிறார். அவர் இவ்வளவு நாள் ஆரோக்கியமாக இருந்து எங்களை வழி நடத்தியது எங்களுக்கு இறைவன் கொடுத்த மிகப் பெரிய கொடை என்றார்.

அவரது பேத்தி லட்சுமி, இன்று எங்கள் பாட்டி 101வது பிறந்த நாளை நாங்கள் அனைவரும் இணைந்து மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடி இருக்கிறோம். இதற்கு முக்கிய காரணம் எங்களது பாட்டியின் உடல் ஆரோக்கியமே. எந்த விஷயத்தையும் மனதில் போட்டு அலட்டிக் கொள்ள மாட்டார். எவ்வளவு சிரமங்களையும் மனதில் வாங்கிக் கொள்ள மாட்டார். அதை ஒரு ஓரமாக வைத்து விட்டு எப்பொழுதும் போல் மகிழ்ச்சியாக இருப்பார். அவரது மனநிலையை ஒரே சீராக வைத்து இருந்ததே அவரது இந்த ஆரோக்கியத்திற்கு காரணமாகும். எனவே அவரது வாழ்க்கை முறை எங்கள் அனைவருக்கும் ஒரு படிப்பினையாக உள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *